எஸ்.எம்.எஸ் திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் காஃபி வித் காதலில் இணைந்த கலக்கல் காம்போ
சென்னை: இயக்குநர் சுந்தர்.சி இயக்கத்தில் அவரது மனைவியும் நடிகையுமான குஷ்பூ தயாரிப்பில் வெளிவந்துள்ள காஃபி வித் காதல் திரைப்படம் நேற்று வெளியானது.
முதல் முறையாக ஃபீல் குட் ஜானரை கையாண்டுள்ள சுந்தர்.சி இந்த படத்தின் மூலம் பல தரப்பட்ட விமர்சனங்களை பெற்றுள்ளார்.
இந்நிலையில் இந்தப் படத்தில் நடிகர் ஆர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்தது பற்றிய சுவாரசியமான தகவல்களை இதில் பார்ப்போம்.

காஃபி வித் காதல்
நடிகர்கள் ஜெய், ஜீவா, ஸ்ரீகாந்த், யோகி பாபு, கிங்ஸ்லி, பிரதாப் போத்தன் மற்றும் நடிகைகள் ரைசா வில்சன், அமிர்தா, சம்யுக்தா, திவ்ய தர்ஷினி உள்ளிட்ட ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள திரைப்படம் காஃபி வித் காதல். நீண்ட இடைவெளிக்குப் பிறகு யுவன் சங்கர் ராஜா மற்றும் சுந்தர்.சி கூட்டணி இந்தப் படத்தில் இணைந்துள்ளார்கள். பேர் வச்சாலும் பாடலை தொடர்ந்து மீண்டும் மைக்கேல் மதன காம ராஜன் திரைப்படத்திலிருந்து இளையராஜாவின் பாடல் ஒன்றை யுவன் ரீமிக்ஸ் செய்துள்ளார்.

தொடரும் கூட்டணிகள்
ஜீவாவும் ஜெய்யும் இரண்டாவது முறையாக சுந்தர்.சி இயக்கத்தில் நடித்துள்ளனர். இதற்கு முன்னர் கலகலப்பு 2-வில் இருவரும் நடித்திருந்தார்கள். அதேபோல ஸ்ரீகாந்தம் ஜீவாவும் நண்பன் திரைப்படத்தை தொடர்ந்து இரண்டாவது முறையாக இந்தப் படத்தில் ஒன்றாக நடித்துள்ளனர். ஏற்கனவே விசில் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ள பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினி டிடி என்கிற திவ்ய தர்ஷினி இதில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

டிடி-யின் கணவர்
படம் முழுக்க கர்ப்பிணி பெண்ணாக நடித்திருக்கும் திவ்ய தர்ஷினி தன் கணவருடன் தொலைபேசியிலேயே படம் முழுக்க பேசிக் கொண்டிருப்பாராம். படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை நோக்கி படம் நகரும் போதுதான் அந்தக் கணவன் கதாபாத்திரத்தில் ஆர்யா நடித்திருக்கிறார் என்று காட்டப்படுகிறது. ஆர்யா இதில் பைலட் வேடத்தில் நடித்துள்ளார். கர்ப்பமான பெண் கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் படத்தின் இறுதியில் வரக் கூடிய ரம் பம் பம் பாடலில் டிடி ஆடியிருப்பது குறிப்பிடத்தக்கது.

16-வது படம்
நடிகர் ஆர்யா இதுவரை தமிழில் மட்டுமே 15 திரைப்படங்களில் சிறப்பு தோற்றங்களில் நடித்துள்ளார். அந்த வரிசையில் காஃபி வித் காதல் அவருக்கு பதினாறாவது திரைப்படம். இதை தவிர்த்து மலையாளத்திலும் ஒரு படத்தில் கவுரவ தோற்றத்தில் நடித்துள்ளார். ஏற்கனவே ஜீவா நடித்திருந்த சிவா மனசுல சக்தி படத்தில் ஆர்யாவும், ஆர்யா நடித்திருந்த பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் ஜீவாவும் சிறப்பு தோற்றங்களில் நடித்திருந்தார்கள்.


Click it and Unblock the Notifications











