டிரைவர் ஜமுனா பட சண்டைக் காட்சியில் நடந்த திகில் அனுபவம்… ஷாக்கான ஐஸ்வர்யா ராஜேஷ்!
சென்னை: ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள டிரைவர் ஜமுனா திரைப்படம் வரும் 11ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
கின்ஸ்லி இயக்கியுள்ள டிரைவர் ஜமுனா திரைப்படம் ஆக்சன் ஜானரில் உருவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், டிரைவர் ஜமுனா படத்தின் ஆக்சன் காட்சிகளில் நடித்த திரில்லிங்கான அனுபவங்களை ஐஸ்வர்யா ராஜேஷ் பகிர்ந்துள்ளார்.

எதிர்பார்ப்பில் டிரைவர் ஜமுனா
மலையாளத்தில் வெற்றி பெற்ற 'தி கிரேட் இந்தியன் கிச்சன்' தமிழ் ரீமேக்கில் நடித்து வரும் ஐஸ்வர்யா, ராஜேஷ், 'டிரைவர் ஜமுனா' படத்திலும் நடித்துள்ளார். இந்த இரண்டு படங்களுமே நாயகிக்கு முக்கியத்துவமான கதைகள் என்பது குறிப்பிடத்தக்கது. 'டிரைவர் ஜமுனா' ட்ரெய்லர் ஏற்கனவே ரிலீஸாகி வரவேற்பை பெற்ரிந்தது. ஐஸ்வர்யா ராஜேஷ் இந்தப் படத்தில் டிரைவராக நடித்துள்ளார். 'வத்திக்குச்சி' படம் மூலம் கவனம் ஈர்த்த கின்ஸ்லி 'டிரைவர் ஜமுனா' திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

பத்திரிகையாளர்கள் சந்திப்பு
ஐஸ்வர்யா ராஜேஷுடன் 'ஆடுகளம்' நரேன், கவிதா பாரதி, ஸ்டாண்ட் அப் காமெடியன் அபிஷேக் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இந்நிலையில், 18 ரீல்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள டிரைவர் ஜமுனா படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில், ஐஸ்வர்யா ராஜேஷ், இயக்குநர் கின்ஸ்லின், உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர். அப்போது பேசிய இயக்குநர் கின்ஸ்லி, "இந்தப் படம் க்ரைம் திரில்லர் ஜானரில் உருவாகியுள்ளது. வாலாஜாபாத்தில் இருந்து ஈசிஆர் செல்லும் போது நடக்கும் சம்பவங்களின் தொகுப்பு தான் இந்த திரைப்படம்" எனக் கூறினார்.

சூப்பரான அனுபவம் கிடைத்தது
இயக்குநர் கின்ஸ்லியை தொடர்ந்து ஐஸ்வர்யா ராஜேஷ் பேசினார், அவர் "கொரோனா காலம் முடிந்து நீண்ட நாட்களுக்குப் பின்னர் இந்தப் படத்தின் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டிருக்கிறேன். இதுவே எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. டிரைவர் ஜமுனா. கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு திரையரங்குகளில் வெளியாகிறது. நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இல்லை. ஆனால் டிரைவர் ஜமுனா படத்தின் கதையைக் கேட்டு உடனடியாக ஓக்கே சொல்லிவிட்டேன்" எனக் கூறினார்.

ஆக்சன் காட்சிகளில் டூப் இல்லாமல்
தொடர்ந்து பேசிய ஐஸ்வர்யா ராஜேஷ், "'டிரைவர் ஜமுனா' படத்தை பொறுமையுடன் காத்திருந்து திரையரங்குகளில் வெளியிடுவதற்காக படத்தின் தயாரிப்பாளர் எஸ்.பி. சௌத்ரி அவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். எனக்கு கார் டிரைவிங் மிகவும் பிடிக்கும் அதிலும் வேகமாக கார் ஓட்டுவேன். அதனால் இந்தப் படத்தின் சண்டைக் காட்சிகளிலும், சாகச காட்சிகளிலும் டூப் இல்லாமல் நானே நடித்தேன். லாரியுடன் நேருக்கு நேர் மோதும் ஒரேயொரு காட்சியில் சிறிய பகுதியை தவிர, படம் முழுவதும் நானே கார் டிரைவ் செய்தேன். இந்தப் படத்தை அனைவரும் திரையரங்குகளுக்கு சென்று பார்த்து ஆதரவளிக்க வேண்டும்" என பேசினார். டிரைவர் ஜமுனா படத்தின் ட்ரெய்லரில் அதிகமான கார் சேஸிங் காட்சிகள் இருந்தன. இந்நிலையில், அதில் ஐஸ்வர்யா ராஜேஷே டூப் இல்லாமல் நடித்துள்ளது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.


Click it and Unblock the Notifications











