»   »  ஐநாவில் வைரமுத்து பாடலுக்கு நடனம் ஆடிய ரஜினி மகள் ஐஸ்வர்யா!

ஐநாவில் வைரமுத்து பாடலுக்கு நடனம் ஆடிய ரஜினி மகள் ஐஸ்வர்யா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஐக்கிய நாடுகள் சபையில் கவிஞர் வைரமுத்துவின் கவிதைக்கு நடிகர் ரஜினிகாந்தின் மகளும் நடிகர் தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா நடனமாடினார்.

ஐ.நா.சபையில் உலக மகளிர் தின விழாவின் ஒரு பகுதியாக இந்த நடனம் இடம்பெற்றது. 'நடராஜர் ஆராதனை' என்ற நடனாஞ்சலியில் கவிஞர் வைரமுத்து எழுதிய 'அவசரத் தாலாட்டு' என்ற கவிதைக்கு ஐஸ்வர்யா தனுஷ் நடனமாடினார்.

Aishwarya Rajini's performance for Vairamuthu's lyrics

'ரத்ததானம்' என்ற கவிதைத் தொகுப்பில் இடம்பெற்ற அந்தக் கவிதை, வேலைக்குச் செல்லும் பெண்களின் துயரம் பற்றியதாகும்.

அந்தக் கவிதை:

"சோலைக்குப் பிறந்தவளே!
சுத்தமுள்ள தாமரையே!
வேலைக்குப் போகின்றேன்
வெண்ணிலவே கண்ணுறங்கு!
அலுவலகம் விட்டு
அம்மா வரும் வரைக்கும்
கேசட்டில் தாலாட்டு
கேட்டபடி கண்ணுறங்கு!

ஒன்பது மணி யானால்
உன் அப்பா சொந்தமில்லை -
ஒன்பது முப்பதுக்கு
உன் அம்மா சொந்தமில்லை

ஆயாவும் தொலைக்காட்சி
அசதியிலே தூங்கிவிட்டால்
தூக்கத்தைத் தவிரத்
துணைக்கு வர யாருமில்லை!

இருபதாம் நூற்றாண்டில்
என் கருவில் வந்தவளே!
இதுதான் கதியென்று
இன்னமுதே கண்ணுறங்கு!

தூரத்தில் இருந்தாலும்
தூயவளே உன் தொட்டில்
ஓரத்தில் உன் நினைவு
ஓடிவரும் கண்ணுறங்கு!

பேருந்தில் நசுங்கிப்
பிதுங்குகின்ற வேளையிலும்
எடை கொஞ்சம் இழந்து
இறங்குகின்ற வேளையிலும்

கோப்புக்குள் மூழ்கிக்
குடியிருக்கும் வேளையிலும்
பூப்பூவாய் உனது முகம்
புறப்பட்டு வரும் கண்ணே!

தந்தை வந்து கொஞ்சுவதாய்
தாய்மடியில் தூங்குவதாய்
கண்ணான கண்மணியே
கனவு கண்டு - நீயுறங்கு!

புட்டிப்பால் குறையவில்லை
பொம்மைக்கும் பஞ்சமில்லை
தாய்ப்பாலும் தாயும் இன்றித்
தங்கம் உனக்கு என்ன குறை?

மாலையிலே ஓடி வந்து
மல்லிகையே உனை அணைத்தால்
சுரக்காத மார்பும்
சுரக்குமடி கண்ணுறங்கு!

தாயென்று காட்டுதற்கும்
தழுவி எடுப்பதற்கும்
ஞாயிற்றுக்கிழமை வரும்
நல்லவளே கண்ணுறங்கு!"

ஐ.நா.வில் அரங்கேற்றப்பட்ட கவிஞர் வைரமுத்துவின் இரண்டாவது கவிதை இதுவாகும். ஏற்கெனவே 'வெள்ளைப் பூக்கள் உலகம் எங்கும் மலரவே' என்ற பாடலை ஏ.ஆர்.ரஹ்மான் ஐ.நா.வில் பாடியுள்ளார்.

நிகழ்ச்சியின் நிறைவாக உலக அமைதிக்காக மறைந்த இசைக் கலைஞர் எம்.எஸ்.சுப்புலட்சுமி பாடிய பாடலுக்கும் ஐஸ்வர்யா தனுஷ் நடனமாடினார்.

English summary
Aishwarya Rajini has perfomed Bharatha Nattiyam for Vairamuthu's lyrics in UNO

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil