Drishyam Recall Teaser-ஐ வெளியிட்ட அஜய்தேவ் கன்… ரிலீஸ் தேதியை கன்ஃபார்ம் செய்த படக்குழு
மும்பை: பாலிவுட் முன்னணி நடிகரான அஜய்தேவ் கன், 'திரிஷ்யம் 2' இந்தி ரீமேக்கில் நடித்துள்ளார்.
அஜய்தேவ் கன்னுடன் தபு, ஷ்ரேயா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்தை அபிஷேக் பதக் இயக்கியுள்ளார்.
மலையாளத்தில் வெற்றிப் பெற்ற 'திரிஷ்யம் 2' படத்தின் இந்தி ரீமேக்காக இந்தப் படம் உருவாகியுள்ளது.

மலையாளத்தில் ஹிட் அடித்த திரிஷ்யம்
மோகன்லால் நடிப்பில் 2013ம் ஆண்டு வெளியான 'திரிஷ்யம்' படத்தை ஜீத்து ஜோசப் இயக்கியிருந்தார். மோகன்லாலுடன் மீனா, ஆஷா ஷரத், நீரஜ் மாதவ், சித்திக் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்தப் படம், ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்தது. சஸ்பென்ஸ் க்ரைம் திரில்லர் ஜானரில் பல திருப்பங்களுடன் உருவான திரிஷ்யம், திரையரங்குகளில் 100 கோடி வசூலை வாரிக் குவித்தது. இந்திய திரையுலகையே பிரமிக்க வைத்த இந்தப் படத்துக்கு சிறப்பான விமர்சனங்களும் கிடைத்தன.

பல மொழிகளில் ரீமேக்கான திரிஷ்யம்
எந்தவொரு அலட்டலும் இல்லாமல் மிடில் கிளாஸ் ஹீரோவாக மோகன்லால் நடிப்பில் அசத்தியிருப்பார். மலையாளத்தில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த இந்தப் படம், தமிழில் கமல் நடிப்பில் 'பாபநாசம்' என்ற டைட்டிலில் ரீமேக்காகி வெற்றிப் பெற்றது. அதேபோல், தெலுங்கு, இந்தி மொழிகளில் 'திரிஷ்யம்' என்ற டைட்டிலில் ரீமேக்கானது. ரீமேக் செய்யப்பட்ட அனைத்து மொழிகளிலும் மாஸ் ஹிட் அடித்த திரிஷ்யம் படத்துக்கு, இந்தியா முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இதனைத் தொடர்ந்து மலையாளத்தில் திரிஷ்யம் படத்தின் இரண்டாம் பாகம் 2021ம் ஆண்டு வெளியானது.

திரிஷ்யம் இரண்டாம் பாகமும் ரீமேக்
2021ல் கொரோனா காரணமாக நேரடியாக அமேசான் ஓடிடியில் வெளியானது 'திரிஷ்யம் 2.' முதல் பாகத்தைத் தொடர்ந்து இரண்டாம் பாகமும் மோகன்லால், மீனா, ஜீத்து ஜோசப் என அதே கூட்டணியில் வெளியானது. முதல் பாகத்தை போலவே சஸ்பென்ஸ் திரில்லர் திரைக்கதையோடு ரிலீஸான செகண்ட் பார்ட்டும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனையடுத்து 'திரிஷ்யம் 2' படமும் மற்ற மொழிகளில் ரீமேக் ஆகி வருகிறது. இந்தியில், அஜய்தேவ் கன், ஷ்ரேயா, தபு என முதல் பாகத்தில் நடித்த அதே கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. அபிஷேக் பதக் இரண்டாம் பாகத்தையும் இயக்கியுள்ளார், தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

டீசர் வெளியிட்ட அஜய்தேவ் கன்
இந்தியில் ரீமேக்கான திரிஷ்யம் திரைப்படம் ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பை பெற்றதால், இரண்டாம் பாகத்துக்கும் அதிக எதிர்பார்ப்பு காணப்பட்டது. இந்நிலையில், தற்போது இரண்டாம் பாகத்துக்கான டீசரை நடிகர் அஜய்தேவ் கன் தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். மேலும், படத்தின் ரீலீஸ் தேதியையும் படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி இந்தியில் ரீமேக்காகியுள்ள 'திரிஷ்யம் 2' நவம்பர் 18ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த அப்டேட்டால் பாலிவுட் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.


Click it and Unblock the Notifications











