»   »  'தல புராணம் 2’: தமிழ் சினிமாவின் 'கிராண்ட் ஓபனிங் மாஸ்டர்’ அஜித்தின் 'பெர்சனல் பக்கம்'!

'தல புராணம் 2’: தமிழ் சினிமாவின் 'கிராண்ட் ஓபனிங் மாஸ்டர்’ அஜித்தின் 'பெர்சனல் பக்கம்'!

Posted By:
Subscribe to Oneindia Tamil

அஜித் பிறந்தது ஆந்திர மாநிலம் ஹைதராபாத் அருகில் உள்ள‌ செகந்தராபாத். ஆனால், வளர்ந்தது, படித்தது எல்லாமே சென்னை சிந்தாதிரிப்பேட்டை.

கல்லூரிப் படிப்புக்குப் பிறகு, தேனாம்பேட்டையில் ஒரு கார்மென்ட் நிறுவனத்தில் வேலைப் பார்த்தார். பிறகு, சொந்தமாகவே கார்மென்ட் தொழிலில் இறங்கினார். அதில் நஷ்டம் ஏற்பட, விளம்பரப் படங்களில் நடிக்கத் துவங்க, அது சினிமாவில் தலை காட்டும் வாய்ப்பைக் கொடுக்க, இப்போது சார்... 'தல'.

Ajith's personal page

தெலுங்குப் படம் ஒன்றில் ஸ்ரீகர் என்ற பெயரில்தான் முதலில் அறிமுகம் ஆனார். தமிழில் 'அமராவதி'யில் நடிக்க வாய்ப்பு வந்தபோது, அதே பெயரிலேயே அறிமுகமாகச் சொன்னபோது, 'சொந்தப் பெயரில்தான் நடிப்பேன்' என்று சொல்லி 'அஜித்' ஆக அறிமுகமானார்.

தீவிர ஷீர்டி சாய்பாபா பக்தர். மயிலாப்பூர், வளசரவாக்கம், கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள சாய்பாபா கோயில்களில் இவரை அடிக்கடி பார்க்கலாம்.

மாலை 6 மணிக்கு மேல் யாரையும் தொந்தரவு செய்யக் கூடாது என நினைப்பவர். 6 மணிக்கு மேல் அவசியம் பேச வேண்டிய கட்டாயம் என்றால், 'இப்போது பேசலாமா?' என்று எஸ்.எம்.எஸ். மூலம் அனுமதி கேட்டுவிட்டுத்தான் அழைப்பார்.

தான் நடித்துக்கொண்டு இருக்கும் படப்பிடிப்புத் தளங்களில் தன்னைச் சந்திப்பதற்கு யாருக்கும் நேரம் கொடுக்க மாட்டார். அடுத்து நடிக்கவிருக்கும் படத்தின் இயக்குநர், தயாரிப்பாளர் என எவரையும் அங்கு வைத்துச் சந்திக்க மாட்டார். படப்பிடிப்பு இடைவேளைகளில் அலைபேசியில் பேச மாட்டார், கேரவனுக்குள்ளும் முடங்கியிருக்க மாட்டார். இயக்குநர் எந்த நொடி கூப்பிட்டாலும் வருவதற்கு ஏற்பத் தயாராக இருப்பார்.

வீட்டுக்கு வரும் விருந்தினர்களுக்குத் தண்ணீர் கொடுப்பதில் ஆரம்பித்து, உணவு உபசரிப்பு வரை அனைத்தும் அஜித் கையால்தான் நடக்கும். விருந்தினர்கள் கிளம்பிச் செல்லும் வரை தொலைபேசி அழைப்புகளுக்கும் காது கொடுக்க மாட்டார். மொபைல்கள் சைலன்ட் மோடில் இருக்கும்.

எதிரில் பேசுபவர் ஏதேனும் புதிய வார்த்தைகளை உச்சரித்தால், அதன் முழுமையான அர்த்தம் தெரிந்துகொண்டு, சரியான உச்சரிப்பையும் சொல்லிப் பார்த்து மனதில் இருத்திக்கொள்வார்.

இன்ஜினீயரிங்கில் ஆர்வம் அதிகம். தான் ஓட்டும் கார், பைக்குகள் தொடங்கி, மகள் அனோஷ்காவுக்கு வாங்கும் சின்ன விளையாட்டு ஹெலிகாப்டர் வரை எதையும் பிரித்துப் பார்த்து அதன் இயக்கத்தைத் தெரிந்துகொள்வார்.

வீட்டிலும் அலுவலகத்திலும் வைத்த பொருள் வைத்த இடத்தில் இருக்க வேண்டும். 10 மணிக்கு யாரையேனும் வரச் சொல்லியிருந்தால், 9.55 மணிக்கே தயாராக இருப்பார்.

கிறிஸ்துமஸ், பிறந்த நாள் மற்ற விசேஷங்களின்போது வீடு மற்றும் அலுவலகத்தில் வேலை செய்பவர்கள் அனைவரையும் அவர்களது குடும்பத்தோடு வரவழைத்து விருந்துஅளிப்பார். அப்பா, அம்மா, மனைவி ஷாலினி, மகள் அனோஷ்கா எனத் தன் வீட்டினரை விருந்தினர்களுக்கு அறிமுகப்படுத்துவது அஜித் வழக்கம்.

எந்தத் தருணத்திலும் பிறர் மனம் புண்படும்படி பேசி விடக் கூடாது என நினைப்பார். தன் மனம் புண்படும்படி யாராவது பேசினால், சின்னப் புன்னகையோடு அந்த இடத்தைவிட்டு அகன்றுவிடுவார்.

வெள்ளைதான் மிகவும் பிடித்த நிறம். வீட்டில் படா படா சொகுசு கார்கள் இருந்தாலும், வெள்ளை நிற ஸ்விஃப்ட்தான் அவருக்கு மிகவும் இஷ்டம்.

தான் அடுத்து நடிக்கவிருக்கும் படத்தை அவர் மட்டுமே முடிவு செய்வார். மனைவி, பெற்றோர், நண்பர்கள் என யாருமே அவருடைய முடிவுகளில் தலையிடுவது இல்லை.

இதுவரை அஜித் உடலில் 16 அறுவைச் சிகிச்சைகள் நடந்திருக்கின்றன.

எட்டு மாதங்களுக்கு ஒரு படம் என்பது அஜித் டார்கெட். 'விருதுகள் குவிக்கணும்னு நான் ஆசைப்படலை. ரசிகர்களோட பாராட்டுக்களே போதும்' என்பார் நெருக்கமான நண்பர்களிடம்.

தனது இளமைப் பருவத்தில் இருந்தே ரேஸ் கார், பைக் ஓட்டுவதில் ஆர்வம் காட்டி வந்த அஜித், மும்பை, சென்னை, டெல்லி போன்ற இடங்களில் நடந்த கார் ரேஸ்களில் கலந்துகொண்டு வெற்றி பெற்றுள்ளார். மேலும், சர்வதேச அரங்கில் ரேஸ்களில் பங்கேற்கும் இந்தியர்களுள் ஒருவர் என்றும், ஃபார்முலா சாம்பியன் போட்டியில் வென்ற ஒரே இந்திய நடிகர் என்ற பெருமையைப் பெற்றார். ஜெர்மனி, மலேஷியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் நடந்த போட்டிகளில் கலந்துகொண்ட அவர், 2003-ம் ஆண்டு ஃபார்முலா ஆசியா BMW சாம்பியன்ஷிப் போட்டியில் போட்டியிட்டார். அது மட்டுமல்லாமல், 2010-ம் ஆண்டு ஃபார்முலா 2 சாம்பியன்ஷிப் பந்தயங்களில் கலந்துகொண்ட மூன்று இந்தியர்களுள் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

2001 - தமிழக அரசின் சிறந்த நடிகருக்கான சிறப்பு திரைப்பட விருதை 'பூவெல்லாம் உன் வாசம்' என்ற படத்துக்காகப் பெற்றார்.

2006 - தமிழக அரசின் எம்.ஜி.ஆர் திரைப்பட விருதை, 'வரலாறு' படத்துக்காக பெற்றார்.

விஜய் விருதுகளை 2006-ல் 'வரலாறு', 2011-ல் 'மங்காத்தா' ஆகிய படங்களுக்காகப் பெற்றார்.

சிறந்த தமிழ் நடிகருக்கான 'சினிமா எக்ஸ்பிரஸ் விருதை', 1999-ல் 'வாலி' படத்துக்காகவும், 2001-ல் 'சிட்டிசன்' படத்துக்காகவும் பெற்றார்.

சிறந்த தமிழ் நடிகருக்கான 'சென்னை டைம்ஸ் விருதை','மங்காத்தா' படத்துக்காக 2011-ம் ஆண்டில் பெற்றார்.

ஃபிலிம்ஃபேர் விருதுகள் 1999-ல் 'வாலி' படத்துக்காகவும், 2002-ல் 'வில்லன்' படத்துக்காகவும், 2006-ல் 'வரலாறு' படத்துக்காகவும், 2007-ல் 'பில்லா' படத்துக்காகவும் அஜித்துக்கு வழங்கப்பட்டது.

தி.மு.க ஆட்சியில் 'அய்யா எங்களை விழாவுக்கு வரச்சொல்லி மிரட்டுறாங்கய்யா...' என்று அஜித் ஓப்பனாக பேச, ரஜினி இருக்கையைவிட்டு எழுந்து கைத்தட்டினார். அ.தி.மு.க ஆட்சி சினிமா நூற்றாண்டு விழாவில் அஜித், அமிதாப் காலில்வி ழ எத்தனிக்க... தடுத்து நிறுத்தி கைகொடுத்தார் பச்சன்!

தொகுப்பு: ஆர்ஜி

English summary
An article on Actor Ajith Kumar's personal attitude and character.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil