Attagasam: புஸ்வானம் ஆகிப்போன அட்டகாசம் ரீ-ரிலீஸ்.. AK ரசிகர்கள் பாவமில்லையா? இப்படியாகி போச்சே!
சென்னை: தீபாவளி என்றாலே எந்த பாட்டு ஒலிக்கிறதோ இல்லையோ அட்டகாசம் படத்தில் இடம் பெற்றுள்ள தீபாவளி தல தீபாவளி என்ற பாடல் கட்டாயம் ஒலிக்கும். அதுவும் அஜித் ரசிகர்கள் ஒருங்கிணைக்கும் நிகழ்ச்சிகளில் இந்த பாட்டுக்கு எப்போதும் முன்னுரிமை தான். அஜித்தின் திரை வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுக் கொடுத்த படங்களில் அட்டகாசத்திற்கு தனி இடம் எப்போதும் உள்ளது. இப்படி இருக்கும்போது, இந்த படத்தை ரீ-ரிலீஸ் செய்யப் போவதாக அறிவிக்கப்பட்டு, டிக்கெட் புக்கிங் எல்லாம் நடைபெற்றது. ஆனால் கடைசி நேரத்தில் படத்தின் ரீ-ரிலீஸ் தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது ரசிகர்களுக்கு கொஞ்சம் அப்செட்டைக் கொடுத்துள்ளது.
தமிழ் சினிமாவில் டபுள் ஆக்ஷன் கதாபாத்திரங்களில் நடித்து ஹிட் கொடுத்த நடிகர்களும் இருக்கிறார்கள், பல நேரங்களில் பலருக்கும் அது ஒர்க்-அவுட் ஆனதும் இல்லை. ஆனால் அஜித்துக்கு அந்த பிரச்னையே இல்லை. காரணம் அஜித் இரட்டை வேடங்களில் நடிக்கிறார் என்றாலே படம் ஹிட் என்று உறுதிப் படுத்திக் கொள்ளலாம் என்று கூறும் அளவுக்கு இவருக்கு ஹிட் கொடுத்துள்ளன. அஜித்தின் முதல் டபுள் ஆக்ஷன் படம் என்றால் அது வாலி. அதன் பின்னர் சிட்டிசன், வில்லன், அட்டகாசம், வரலாறு ( மூன்று வேடங்கள்), பில்லா, அசல் ஆகிய படங்களில் நடித்தார். இதில் அசல் படத்தை தவிர மற்ற படங்கள் அனைத்துமே சூப்பர் டூப்பர் ஹிட்.

ரீ ரிலீஸ்: அட்டகாசம் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெறக் காரணங்களில் படத்தின் பாடல்களுக்கு முக்கிய இடம் உண்டு. அதேபோல் அஜித்தின் கெட்-அப்க்கு தனி வரவேற்பு கிடைத்தது. அஜித் ரசிகர்கள் பலரும் அந்த கெட்-அப்பில் தான் படம் பார்க்க தியேட்டருக்கு வந்தார்கள். இப்படி இருக்கும்போது, அஜித்தின் அட்டகாசம் படம் ரீ-ரிலீஸ் ஆகிறது என்று தகவல்கள் வெளியானதும் ரசிகர்களுக்கு ஏகப்பட்ட சந்தோஷம் என்றுதான் சொல்ல வேண்டும். அப்படி இருக்கும்போது, படம் இன்று அதாவது அக்டோபர் 31ஆம் தேதி ரீ-ரிலீஸ் செய்யப்போவதாக படத்தின் இயக்குநர் சரண் தனது எக்ஸ் பக்கத்தில் அறிவித்தார்.
ஒத்திவைப்பு: படத்தின் புக்கிங்குகளும் சிறப்பாக நடைபெற்றது. ரசிகர்களும் இந்த ரீ-ரிலீஸைக் கொண்டாட வேண்டும் என்ற ஆர்வத்தில் இருந்தபோது, படத்தை ரீ ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டிருந்த தியேட்டர்களுக்கு படத்தை சரியாக விநியோகிக்க முடியாத காரணத்தால், படத்தின் ரீ ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது ரசிகர்களுக்கு கவலையை ஏற்படுத்தி உள்ளது. மேலும் டிக்கெட் முன்பதிவு செய்தவர்களுக்கு பணம் திருப்பி கொடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படத்தின் ரீ-ரிலீஸ் தேதியை படக்குழு இன்னும் அறிவிக்கவில்லை.


Click it and Unblock the Notifications











