எவன் வந்தாலும் பாத்துக்கலாம்.. ரஞ்சித், மாரி செல்வராஜை வைத்துக் கொண்டு அமீர் பேச்சு!
சென்னை: இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் பைசன். இந்த படத்தில் துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன், பசுபதி, அமீர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். படம் வரும் 17ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. படத்தை இயக்குநர் பா. ரஞ்சித்தின் நீலம் புரெடக்ஷன்ஸ் மற்றும் அப்லாஸ் எண்டர்டைமெண்ட் இணைந்து தயாரித்துள்ளார்கள். நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார். படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்படி இருக்கும்போது படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நேற்று அதாவது, அக்டோபர் 12 ஆம் தேதி சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட இயக்குநர் அமீர் பேசியது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
அதாவது அவர் பேசும்போது, " இயக்குநர் ரஞ்சித் எனது அலுவலகத்திற்கு வந்து அவரது தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அவரது உதவியாளர் தான் கதை சொல்லுவார் என்றும், தெரிவித்தார். அந்த படத்தின் கதையைக் கேட்டேன் நடிக்கலாம் என்று முடிவெடுத்தேன். ஆனால் கடைசியில் அந்த படத்தில் நடிக்க முடியாமல் போய்விட்டது. அது தான் தண்டகாரண்யம். அந்த படத்தின் படப்பிடிப்பின் போது, நான் எனது படமான இறைவன் மிகப்பெரியவன் படத்தின் படப்பிடிப்புக்கு செல்ல வேண்டி இருந்தது.
அதன் பின்னர் மீண்டும் ரஞ்சித்தின் தயாரிப்பில் மாரி செல்வராஜ் தனது படத்தில் நடிக்க வேண்டும் என்று கேட்கிறார். நானும் அண்ணன் சீமானும் ஈழப் பிரச்னையின் போது கைதாகும் போது, இயக்குநர் ராமின் உதவியாளராக பார்த்துள்ளேன். பரியேறும் பெருமாள் படம் வெளியான பின்னர் நானும், இயக்குநர் இமயம் பாரதிராஜா, வெற்றிமாறன் எல்லாம் இணைந்து மாரி செல்வராஜ்க்கு தனி பாராட்டு விழா நடத்தினோம்.

இப்படிப்பட்ட மாரி செல்வராஜ் தனது படத்தில் நடிக்க என்னைக் கூப்பிடுகிறார். நான் இயக்குநராக இருந்து நடிக்க வந்தாலும், எனது மனதுக்கு விருப்பமான மற்றும் நெருக்கமான கதாபாத்திரங்களில் தான் நடிப்பேன். நடித்தே ஆகவேண்டும் என்ற எந்த கட்டாயத்திலும் நான் இல்லை. அப்படி இருக்கும்போது மாரி செல்வராஜ் தனது படத்தில் நடிக்க அழைக்கும் போது எனக்கு நம்பிக்கை இருந்தது. மாரி செல்வராஜ் போன்ற இயக்குநர்கள் தமிழ் சினிமாவுக்குத் தேவை என்று நான் அடிக்கடி சொல்லி வருகிறேன்.
மாரி செல்வராஜும் மற்றும் பா. ரஞ்சித்தும் ஆயிரம் எதிர்ப்புகள் வந்தாலும் உங்கள் படைப்புகளை நீங்கள் தொடர்ந்து செய்து கொண்டே இருக்க வேண்டும். அதற்கு என்னைப் போன்றவர்கள் உறுதுணையாக இருப்போம், பக்கத்திலேயே இருப்போம். எவன் வந்தாலும் பார்க்கலாம். சண்டை செய்கிறோம், அதில் ஒன்றும் மாற்று கருத்தே இல்லை. மாரி செல்வராஜ் என்னிடத்தில் கதை சொல்லிவிட்டு சென்று விட்டார். சில மாதங்கள் கழித்து மீண்டும் வந்தார், கதையில் சில மாற்றங்கள் செய்துள்ளதாக கூறினார்.

எனக்கு அவர் முதலில் சொன்ன கதையும் நினைவில் இல்லை. ஆனால் மாரி செல்வராஜ் படத்தில் நடிக்கிறேன் என்று மட்டும் முடிவெடுத்துவிட்டேன். வட சென்னை படத்தில் எப்படி ராஜன் கதாபாத்திரத்திற்கு பாராட்டுகள் கிடைத்ததற்கு வெற்றிமாறன் காரணமோ, அதேபோல், இந்த படத்தில் பாண்டிராஜ் கதாபாத்திரத்திற்கு ஏதாவது வரும் எனில் அது மாரி செல்வராஜையே சாரும். என் மீது நம்பிக்கையும் அன்பும் வைத்திருக்கும் ரஞ்சித்துக்கும் மாரி செல்வராஜுக்கும் நன்றி" என்று பேசினார். இவரது இந்த பேச்சு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications











