»   »  இது சென்சார் போர்டல்ல... மாஃபியா கும்பல்.. ஆதி பகவனுக்கு பணம் கேட்டார்கள்! - அமீர் திடுக் புகார்

இது சென்சார் போர்டல்ல... மாஃபியா கும்பல்.. ஆதி பகவனுக்கு பணம் கேட்டார்கள்! - அமீர் திடுக் புகார்

Posted By:
Subscribe to Oneindia Tamil
Ameer
சென்னை: சான்றிதழ் தர பணம் பறிக்கும் செயலில் இறங்கியுள்ளது சென்சார் போர்டு. ஒரு அறிவிக்கப்படாத மாஃபியா கும்பல் போல செயல்படுகிறது, என பகிரங்கமாக புகார் கூறியுள்ளார் இயக்குநர் அமீர்.

ஆதிபகவன் படத்துக்கு ஏ சான்றுக்கு பதில் யு ஏஅல்லது யு சான்று தர என்னிடம் பணம் கேட்டார்கள் என்றும் அமீர் கூறியுள்ளார்.

மலேசியா கிளம்பும் முன் சென்னை விமான நிலையத்தில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த அமீர் கூறியதாவது:

திரைப்படங்களுக்கு சான்றிதழ் வழங்குவதில் சென்சார் போர்டு தற்போது அறிவிக்கப்பட்டாத மாபியா கும்பல் போல செயல்பட்டு வருகிறது.

'யு' சான்றிதழ் வழங்க வேண்டுமென்றால் தனியாக கட்டணம், 'யுஏ' சான்றிதழ் வழங்கவேண்டுமென்றால் அதற்கு தனியாக கட்டணம் என தரம் பிரித்து பணம் பறிக்கும் செயலில் இறங்கியுள்ளது.

பணம்தான்...

ஆக, இவர்கள் ஆட்சேபணைக்குரிய காட்சி என தரம் பிரிப்பது பணத்தின் அடிப்படையில்தான்ய

என்னுடைய ஆதிபகவன் படத்திற்கும் இதேபோல் பணம் கேட்டு என்னிடம் மீடியேட்டர்கள் வந்தார்கள். ஆனால் நாங்கள் பணம் கொடுக்க முடியாது என்பதை தெளிவாக சொல்லிவிட்டோம். அதனால்தான் இந்த படத்திற்கு ஏ சர்டிபிகேட் கொடுத்துவிட்டனர்.

இப்படத்தை தணிக்கை செய்வதற்காக நான் கடந்த மாதம் 5-ந் தேதியே சென்சார் போர்டிடம் கொடுத்துவிட்டேன். அவர்கள் 12-ந் தேதிதான் படத்தைப் பார்த்தார்கள். பார்த்துவிட்டு, அப்போதே 40 காட்சிகளை வெட்டவேண்டும். சில இடங்களில் வசனங்களை மியூட் பண்ண வேண்டும் என்று சொன்னார்கள்.

ஏன்? என்று கேட்டதற்கு கெட்டவார்த்தை இருக்கிறது, பாடல் காட்சியில் மதுபாட்டில்கள் இருக்கின்றன, எனவே இதை நாங்கள் அனுமதிக்கமாட்டோம். 'ஏ' சான்றுதான் கொடுப்போம் என்றார்கள்.

ஆனால் இதையெல்லாம் மியூட் பண்ணிய பிறகும் ஏன் 'ஏ' சர்பிடிகேட் கொடுக்கிறீங்க என்று கேட்டால், காட்சிகளை நீக்கினாலும், வசனங்களை மியூட் செய்தாலும் 'ஏ' சர்டிபிகேட்தான் கொடுப்போம் என்று சொன்னார்கள்.

சூழ்நிலை சரியில்லை

இதுகுறித்து சென்சார் போர்டின் அதிகாரி ஒருவர் கூறும்போது, மும்பையில் இப்படம் தணிக்கை செய்யப்பட்டிருந்தால் இப்படத்தில் உள்ள காட்சிகளை நீக்க வேண்டியது இருந்திருக்காது. மேலும், வசனங்களை மியூட் பண்ண வேண்டிய அவசியமும் இருந்திருக்காது. ஆனால், இங்கே இப்பொழுதுள்ள சூழ்நிலை சரியில்லை. எனவே, நீங்கள் காட்சிகளை நீக்கினாலும், வசனங்களில் மியூட் செய்திருந்தாலும் ஏ சர்டிபிகேட்தான் கொடுக்கப்படும் என கூறினார். இந்த செய்தியை என்னிடம் 12-ந் தேதி கூறினார். ஆனால் அந்த சர்டிபிகேட் என் கையில் கொடுப்பதற்கு 19-ந் தேதி ஆகிவிட்டது.

இந்த படத்தை நான் 22-ந் தேதி வெளியிட வேண்டும் என்று சொல்லியிருக்கிறேன். அப்படியிருந்தும் 19-ந் தேதி கொடுத்தால் நான் என்ன செய்யமுடியும்?

விஸ்வரூபத்தால்...

சரி, இப்போதுதான் விஸ்வரூபம் பெரிய பிரச்சினையிலிருந்து மீண்டு வெளியாகியிருக்கிறது. அதனால், இந்த பிரச்சினையை பெரிதாக்க வேண்டாம் என்று விட்டுவிட்டேன். தயாரிப்பாளரும் எந்த பிரச்சினையும் வேண்டாம் என்று சொல்லிவிட்டார். 22-ந் தேதி படம் ரிலீஸ் ஆனது.

படத்திற்கு 'ஏ' சர்டிபிகேட் கொடுத்திருந்ததால் பாடல்களை எந்த சேனலிலும் வெளியிடமுடியாது. ஆனால் பாடல்களை விளம்பரப்படுத்துவதற்காக மது அருந்துவது போன்ற காட்சிகள் உள்ள பாடல்களையெல்லாம் நீக்கிவிட்டு எங்களிடம் கொடுங்கள் என்று சென்சார் போர்டு அதிகாரிகள் சொன்னார்கள். 25-ந் தேதி கொடுத்தேன். அதன்பிறகு, 3 பாடல்களை 27-ந் தேதி போராடி வாங்கினோம்.

படம் வெளியாகி 7 நாட்கள் ஆகிவிட்டது. இப்போது படவிளம்பரத்துக்காக சில காட்சிகளை கேட்டால் இந்த நிமிஷம் வரை எந்த ஒரு காட்சியையும் கொடுக்கவில்லை. 26-ந் தேதி மனு செய்திருக்கிறோம்.

இன்றைக்கு மலேசியா புறப்படுகிறேன். அங்கு படம் பிரமாதமாக போய்க் கொணடிருக்கிறது. அங்க படத்தை பிரபலப்படுத்த நானும், இந்த படத்தின் கதாநாயகன் ஜெயம் ரவியும் செல்கிறோம்.

மலேசியாவிலும் தடுக்க சென்சார் முயற்சி

ஆனால், இங்கே இந்த படத்தை திட்டமிட்டு தடுக்க, சென்சார் போர்ட்டுக்கு இதில் என்ன அக்கறை என்று எனக்கு புரியவில்லை. சென்சார் போர்ட்டு திட்டமிட்டு செய்கிறதா? இல்லை சென்சார் போர்டுக்கு பின்னால் ஏதாவது இருக்கிறதா? இல்லையென்றால் சென்சார் போர்டு கேட்டதை கொடுக்கவில்லை என்று சொன்னதால் இந்த பிரச்சினையா? என எதுவுமே எனக்கு தெரியவில்லை. அலுவலர்களும் தெளிவாக சொல்ல மாட்டேன் என்கிறார்கள்.

ஒரு ஏ சர்டிபிகேட் மட்டும் இந்த படத்திற்கு கொடுத்துவிட்டு இந்த படத்தை எந்தவிதத்திலும் விளம்பரம் செய்ய விடாமல் தடுக்கிறார்கள். அது என்னவென்று புரியவில்லை. திரை விமர்சனம், மற்ற எதுவென்றாலும் படத்தின் காட்சிகளை கொடுத்தால்தான் இதை செய்யமுடியும். ஆனால், இதை செய்வதற்கு ஒரு காட்சிக்கூட கொடுக்கவில்லையென்றால் இந்த படத்தை எப்படி விளம்பரம் செய்யமுடியும்.

சீப் பப்ளிசிட்டி தேவையில்லை

நான் இயக்குனர் சங்கத்தின் செயலாளராக இருந்திருக்கிறேன். சினிமா தொழிலாளர்கள் சங்கத்தின் தலைவராக இருந்தும் இந்த பிரச்சினையை பெரிதாக்க விரும்பவில்லை. இவ்வளவு சீப்பான பப்ளிசிட்டி தேவையில்லை என்று நினைத்துவிட்டேன்.

சென்சார் போர்டு இந்த படத்திற்கு 'யு' சர்டிபிகேட் கொடுக்கவில்லை என்பதால், ஒரு மாதம் போராடிவிட்டு அதற்கப்புறம் படத்தை ரிலீஸ் செய்வது தேவையில்லாத பிரச்சினை என்று நினைத்துதான் 'ஏ' சர்டிபிகேட் கொடுத்தாலும் பரவாயில்லை என்று வாங்கினோம். அதன்பிறகும் படத்தை விளம்பரப்படுத்த தடை செய்கிறார்கள் என்றால் என்ன பிரச்சினை என்று தெரியவில்லை.

இந்த சட்டங்கள் எல்லாம் இன்றைக்குத்தான் புதிதாக வந்ததா? ஏற்கெனவே சென்சார் சட்டங்களில் இதுவெல்லாம் இருக்கிறதா?

ஆபாசக் காட்சி இருக்கா...

இந்த படம் வெளியாகி கிட்டத்தட்ட 7 நாட்கள் ஆகிறது. தமிழ்நாடு முழுவதும் எல்லோரும் பார்த்திருக்காங்க. இதுல 'ஏ' சர்டிபிகேட் கொடுக்கிறதுக்கு என்ன இருக்கு? ஏதாவது முத்தக்காட்சி இருக்கிறதா? ஆடை அவிழ்ப்பு காட்சி இருக்கிறதா? கட்டிப்பிடித்து உருளுவதுபோல் இருக்கிறதா? யாரும் யாரையும் கற்பழிச்சாங்களா? ஒண்ணுமே இல்லை. இதற்கு ஏன் 'ஏ' சர்டிபிகேட்? இதற்கு என்ன உள் அர்த்தம் இருக்கும் என்று எனக்கும் புரியலை. தெளிவா சொன்னா அதை நான் செஞ்சுட்டு போறேன். ரேட் கொடுத்து சர்டிபிகேட் வாங்க வேண்டிய அவசியம் எனக்கு கிடையாது.

யாரும் படமெடுக்க முடியாது

இது இப்படியே போனால் படம் யாரும் எடுக்க முடியாது. சென்சார் போர்டு இதற்கு விளக்கம் அளித்தே தீரவேண்டும். நான் சொன்னது எதுவும் தப்பு என்றால், சென்சார் போர்டு என்மீது நேரடியாக வழக்குகூட தொடுக்கலாம். இதற்கான காரணத்தை அவர்கள் சொல்லலாம்.

இவ்வாறு அமீர் பேசினார்.

English summary
Director Ameer openly alleged that the Censor board was demand big money to give U certificate for his Aadhi Bhagavan film.
Please Wait while comments are loading...