9 ஆண்டுகளுக்கு பிறகு டைரக்ஷனில் அமீரின் ரீ என்ட்ரி... டைட்டில் என்ன தெரியுமா ?
சென்னை : டைரக்டர் அமீர் 9 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் படம் இயக்க போகிறார். இந்த படத்தின் டைட்டில் மற்றும் ஃபஸ்ட்லுக் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த படம் பற்றிய அறிவிப்பு பலரையும் ஆச்சரியப்பட வைத்து ஆர்வத்தை தூண்டி உள்ளது.

தமிழ் சினிமாவில் டைரக்டர், தயாரிப்பாளர், நடிகர் என பன்முகத்தன்மை கொண்டவராக வலம் வருபவர் டைரக்டர் அமீர். சூர்யா நடித்த மெளனம் பேசியதே படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு டைரக்டராக அறிமுகமானவர் அமீர். சூர்யாவை புதிய கோணத்தில் காட்டி, அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார் அமீர். அதற்கு பிறகு ராம், பருத்திவீரன் என இவர் இயக்கிய இரண்டு படங்களுமே செம ஹிட் ஆகின.
கடைசியாக 2013 ல் ஆதிபகவான் படத்தை இயக்கினார் அமீர். இந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை. டைரக்டர், தயாரிப்பாளர் என்பதை தாண்டி யோகி படத்தின் மூலம் நடிகராகவும் அறிமுகமானார் அமீர். கடைசியாக 2018 ல் வடசென்னை படத்தில் நடித்திருந்தார் அமீர். கடந்த சில ஆண்டுகளாக சினிமா பக்கம் தலை காட்டாமல் இருந்த அமீர், சூர்யாவின் வாடிவாசல் உள்ளிட்ட 3 படங்களை தயாரித்து வருகிறார். வாடிவாசல் படத்திற்கு இவர் தான் திரைக்கதை எழுதி உள்ளார்.
இந்நிலையில் கிட்டதட்ட 9 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் படம் இயக்கவும் முடிவு செய்துள்ளார் அமீர். சூரி நடிக்கும் படத்தை தயாரிக்க முடிவு செய்திருந்த அமீர், அந்த படத்தை தானே டைரக்ட் செய்யவும் முடிவு செய்துள்ளார். இந்த படத்திற்கு இறைவன் மிக பெரியவன் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு வெற்றிமாறன் மற்றும் தங்கம் ஆகியோர் கதை எழுதுகிறார்கள். யுவன்சங்கர் ராஜா இசையமைக்க உள்ளார். சூரி, சத்யா ஆகியோர் நடிப்பதாக கூறப்படுகிறது.
கடற்கரையில் ஜாலியாக இருவர் நடந்து வருவது போல் போஸ்டர் அமைக்கப்பட்டுள்ளது. இதை வைத்து பார்க்கும் போது இது நட்பை அடிப்படையாகக் கொண்ட கதையாக இருக்கலாம் என கூறப்படுகிறது. இது நகரத்தில் நடப்பது போன்ற கதையாம். விரைவில் இந்த படத்தின் ஷுட்டிங் துவங்கப்பட உள்ளது. அமீர் இயக்கும் ஐந்தாவது படம் இதுவாகும்.


Click it and Unblock the Notifications











