»   »  'இனி வெறும் முழக்கங்கள் வேண்டாம்.... வேலையில் இறங்குங்கள் விஷால்!'

'இனி வெறும் முழக்கங்கள் வேண்டாம்.... வேலையில் இறங்குங்கள் விஷால்!'

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னையில் திங்கட்கிழமை காலையில் சிவாஜியின் அன்னை இல்லத்தில் நடைபெற்ற நெருப்புடா படத்தின் இசை வெளியீட்டுவிழாவில் தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் பேசு கிறபோது சினிமா விமர்சனங்களை படம் வெளியான 3 நாட்கள் கழித்து பத்திரிகைகள் எழுத வேண்டும் என வேண்டுகோள் வைத்திருக்கிறார்.

விஷால் தலைவர் ஆகிவிட்டால் தமிழ் சினிமா மிகப் பெரும் மாற்றத்துக்கு உள்ளாகும் என பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. தலைவராக தேர்வான பின் பொது வெளியில் விஷால் கிருஷ்ணா பேசுவது பெரும்பாலும் சினிமாவுக்கே எதிராகவே அமைந்து விடுமோ என்ற பயம்தான் வருகிறது. என்ன பேச, எப்படி பேச வேண்டும் என்பதை இளைஞரான விஷால் கற்றுக் கொள்ள, அனுபவம் மிக்கவர்களோடு அவர் நட்பாக இல்லை.

An appeal to Vishal from a journalist

எதிர்வினை பற்றி யோசிக்காமல் விஷால் பேசுகிறார். தயாரிப்பாளர்கள் முன்னேற்றம் பற்றிப் பேச வேண்டியவர் விவசாயிகள் நிவாரணம் பற்றி அறிவிப்பு வெளியிடுகிறார். தரமான படங்கள் எடுப்பதை பேசுவதை தவிர்த்து பத்திரிகைகள் விமர்சனங்கள் எழுதுவதை பற்றி பொது மேடையில் அறிவுரை வழங்குகிறார். மாநகரம் வெற்றியின் ரகசியத்தை உங்கள் நண்பர் ஞானவேல் ராஜாவிடம் கேட்டுப் பாருங்கள். இந்த விமர்சனங்களின் முக்கியத்துவம் புரியும்.

2017 ஜனவரி முதல் மார்ச் 31 வரை முதல் காலாண்டில் 46 நேரடி தமிழ் படங்கள் ரீலீஸ் செய்யப்பட்டுள்ளன. இவற்றில் அனைத்து தரப்புக்கும் லாபகரமான படம் குற்றம் -23, கவண் மட்டுமே. மற்ற 44 படங்களும் தயாரிப்பாளர், விநியோகஸ்தர், தியேட்டர் என முத்தரப்பினருக்கும் நஷ்டம் ஏற்படுத்திய படங்கள். ஆனால் இதில் நடித்துள்ள நடிகர்கள் தகுதிக்கு மீறிய சம்பளம் வாங்கி லாபமடைந்துள்ளார்கள். மொத்த தமிழ் சினிமாவும் முடங்கி விட்டது என்பதுதான் கள நிலவரம்.

சினிமாவில் போடப்படும் மூலதனம் ஒரு வழி பாதையாக முடங்கி விடுகிறது. தியேட்டர்களில் வசூல் ஆகவில்லை என்றால் அது மொத்த சினிமா வரவு செலவுகளை பாதிக்கும், எல்லோரையும் தொழில் ரீதியாகமுடக்கிப் போட்டுவிடும் அது தான் தற்போது நடந்து கொண்டிருக்கிறது.

மோசமான படங்களின் அசலைக் கூட சர்வதேச வியாபாரம், டிஜிட்டல் வருமானம் மூலம் தேத்தி விடலாம். அதற்கான வழிவகை என்ன என்பதை கண்டறிந்து அமுல்படுத்த தலைவர் விஷால் முயற்சிக்க வேண்டும்.

அதை விடுத்து விவசாயிகள் பிரச்சினை, பத்திரிகை, தமிழ் ராக்கர்ஸ் சவால், திருட்டு வீடியோ சவால் என வீராப்பு பேசுவதை விட்டு, சத்தமில்லாமல் ஆக்கபூர்வமான முன்னேற்றப் பணிகளை நடைமுறைப்படுத்த தலைவர் விஷால் முயற்சிக்க வேண்டும் என்பதே பத்திரிகையாளர்கள், தயாரிப்பாளர்களின் விருப்பம். முயற்சியை முன்னெடுங்கள் முகாரி ராகம் பாடுவதை பொது மேடைகளில் தவிர்த்திடுங்கள்.

-ஏகலைவன்

English summary
An appeal to Producers council president Vishal from a journalist.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil