»   »  பாரதிராஜாவுக்கு ஒரு ரசிகனின் பகிரங்க கடிதம்!

பாரதிராஜாவுக்கு ஒரு ரசிகனின் பகிரங்க கடிதம்!

Posted By: Super
Subscribe to Oneindia Tamil

எங்கள் இனிய தமிழ் இயக்குநர் பாரதிராஜாவுக்கு வணக்கம்.

கடந்த வாரம் ஒரு வார இதழில் தங்கள் பேட்டியில் 'இசையமைப்பளர் தேவேந்திரன் இளையராஜாவை விட இசை அதிகமாக தெரிந்தவன். அவருக்கு வாய்ப்பு கொடுத்த பிறகுதான் எனக்கும் இளையராஜாவுக்கும் பிரிவு வந்தது,' என்று குறிப்பிட்டிருந்தீர்கள்.

இத்தனை ஆண்டுகளுக்கு பிறகு இதை நீங்கள் சொல்வது ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் இருக்கிறது. காரணம். தேவேந்திரன் நல்ல இசைக் கலைஞர் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தானே. இப்போது நீங்கள் இதைச் சொல்வதற்கு காரணம் உங்களுக்கு மட்டுமே தெரியும். ஒரு காலத்தில் நட்பிற்கு உதாரணமாக சொல்லப்பட்ட இளையராஜா - பாரதிராஜா என்கிற தோழமை சீர்குலைய நீங்கள்..... ஆம், நீங்கள் மட்டுமே காரணமாக அமைந்து விட்டீர்கள்.

An open letter to Bharathiraja

உணர்ச்சி வசப்பட்டாலும் உண்மையைப் பேசும் நீங்கள் இப்போது மட்டும் சில உண்மையை மறந்து விட்டீர்கள். அதை நினைவுபடுத்த விரும்புகிறேன்.

பொம்மலாட்டம் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் கமல், இளையராஜா இருவரும் கலந்து கொண்டனர். அதில் இருவரும் பேசியது நினைவிருக்கிறதா?

கமல் பேசும்போது, "இந்த படத்தின் இசையமைப்பாளர் ஹிமேஷ் ரேஷ்மையா. ஆனால் இந்த விழாவிற்கு இளையராஜா வந்திருக்கிறார். தான் இசையமைத்த பட விழாக்களுக்கே போகாதவர் இளையராஜா. அப்படியிருந்தும் இங்கு வந்திருக்கிறார் என்றால் பாரதிராஜாவுக்கும் இளையராஜாவுக்கும் இருக்கும் நட்பு என்னை வியக்க வைக்கிறது," என்றார்.

இளையராஜா பேசும்போது, "என்னைப் பற்றிய வாழ்க்கை வரலாறு எழுதத் தொடங்கினேன். எழுதி முடித்து விட்டுப்பார்த்தால் எல்லா இடத்திலும் பாரதிதான் இருக்கிறார்," என்று நெகிழ்ந்து குறிப்பிட்டு இருவரின் நட்பு பற்றி பேசிக்கொண்டிருந்தார். அப்போது மேடையில் அமர்ந்திருந்த நீங்கள் பொல பொலவென கண்ணீர் விட்டு அழுதீர்களே... நினைவிருக்கிறதா? அது நீங்கள் சொன்ன அந்த பிரிவுக்கு பிறகு நடந்த சம்பவம்தானே. அப்போ நீங்கள் வடித்தது நிஜ கண்ணீரா? நீலிக் கண்ணீரா?

அன்னக்கொடி படத்தின் பாடல் வெளியீட்டு விழா மதுரையில் நடந்தது. அந்த விழாவிற்கு இளையராஜாவை நீங்கள் அழைத்தீர்கள்... சில காரணங்களால் அவரால் வர முடியவில்லை. ஆனாலும் நீங்கள் அவரிடம் கோபித்துக்கொண்டு, "நான் ரஜினி, கமல் இருவரையும் வைத்து இந்த விழாவை நடத்திக்கட்டுகிறேன் பார்..." என்று சூளுரைத்துப் போனீர்கள். ஆனால் அவர்கள் இருவரும் மறுத்து விடவே, சில நாட்கள் கழித்து திரும்பி வந்து, "விழாவில் நீ இல்லாவிட்டால் பெரிய அளவில் பேசப்படாது" என்று மீண்டும் இளையராஜாவை அழைத்தீர்கள். உங்கள் நிலைக்காக விழாவுக்கு வந்தார். ஆனால் அப்படி வந்த அவருக்கு நீங்கள் கொடுத்த மரியாதை என்ன என்பது உலகத்திற்கே தெரிந்த விஷயம். உங்களுக்குதான் தெரிய வாய்ப்பில்லை!

அன்று பார்த்திபன் மட்டும் இல்லாமலிருந்தால் காலகாலமாக நீங்கள் சேர்த்து வைத்திருந்த புகழுக்கு களங்கம் வந்திருக்கும். அந்த அளவுக்கு 'நிலை கொள்ளாமல்' இருந்து இளையராஜாவை அவமதித்தீர்கள். ஆனால் எல்லாவற்றையும் தாங்கிக் கொண்டு அமைதியாக அமர்ந்திருந்தார் அவர். காரணம் உங்கள் மீது அவர் வைத்திருந்த பாசம்.

ஒரு சம்பவம் தெரியுமா... ஜெயகாந்தன் மறைந்த போது இளையராஜா சார்பில் ஒரு அறிக்கை தயார் செய்யப்பட்டது. அதை இளையராஜாவிடம் காட்டியபோது ‘பாரதிராஜா பேரை விட்டுடீங்களே. அதை சேர்த்துட்டு கொடுங்க" என்று சொல்லியிருக்கிறார். இப்படி எந்த இடத்திலும் உங்களை விட்டுக் கொடுக்காமல் தார்மீக ஆதரவு கொடுத்து வருபவர் இளையராஜா. ஆனால் நீங்கள் மட்டும்தான் எல்லா மேடைகளிலும் நட்பு என்கிற பெயரில் இளையராஜாவை தரம் தாழ்த்திப் பேசி வருகிறீர்கள்.

தேவேந்திரன் மிகப்பெரிய இசைமேதை என்றால் அவரை உங்களின் அடுத்தடுத்த படங்களில் பயன்படுத்தி அவருக்கு பெரிய வாழ்வு கொடுத்திருக்கலாமே.. ஏன் செய்யவில்லை? வேதம் புதிது படத்திற்குப் பிறகு நாடோடி தென்றல் படத்திற்கு இளையராஜாவிடமே வந்துவிட்டீர்களே!

‘என் உயிர் தோழன்' என்று பெயர் வைத்து விட்டு என் நண்பனின் பரிவாரங்களோடு பாட வருகிறேன்' என்று மார்தட்டிக் கொண்டீர்களே. அது நீங்கள் சொன்ன அந்த பிரிவுக்கு பின்தானே நடந்தது. அதுமட்டுமில்லாமல் உங்களின் அடுத்தடுத்த படங்களில் ரகுமான், அம்சலேகா, தேவா, சிற்பி, வித்யாசாகர், ஜி.வி.பிரகாஷ்குமார், ஹிமேஸ் ரேஷ்மையா என்று இத்தனை இசையமைப்பளர்களுக்கு வாய்ப்புக் கொடுத்தீர்களே ஏன் அப்போது தேவேந்திரன் நினைவுக்கு வரவில்லையா?

குறைந்தபட்சம் சின்னத்திரைகளில் நீங்கள் இயக்கிய தொடர்களுக்குக்கூட அவரை பயன்படுத்தியிருக்கலாமே ஏன் செய்யவில்லை.

ஒருமுறை இளையராஜாவிடம், "பாரதிராஜா படங்களில் பாடல்கள் இன்னும் ஸ்பெஷலாக இருக்கிறதே என்ன ரகசியம்," என்று கேட்டதற்கு, ராஜா சிரித்துக்கொண்டே, "சின்ன வயசிலிருந்தே ஒரே இடத்தில் விளையாண்டிருக்கோம். ஒண்ணாவே சாப்பிட்டிருக்கோம், தூங்கியிருக்கோம். அவருக்கு என்ன பிடிக்கும்னு எனக்குத் தெரியாதா. இதுதான் ரகசியம்..." என்றார் சிரித்தபடி. இதுதானே நட்பு.

இயக்குநர்கள் பாலா, அமீர் போன்றவர்கள் தங்களின் ஒரு படத்திலேயே இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்தார்கள். இதற்காக உங்களையும் அவர்களையும் ஒரே இடத்தில் வைத்துப் பார்க்க முடியுமா?

ஒரு விஷயம் பாரதிராஜா சார். ஒருவருக்கு ஞானம் இருப்பது என்பது வேறு. அந்த ஞானத்தை வைத்து அவர்கள் என்ன சாதித்திருக்கிறார்கள். நாட்டிற்கு என்ன பெருமை சேர்த்திருக்கிறார்கள் என்பதுதான் முக்கியம். அந்த வகையில் இளையராஜாவும் நீங்களும் இந்த நாட்டிற்கு பெருமை சேர்த்த ரத்தினங்கள். உங்களின் தனிப்பட்ட கோபதாபங்களை வெளிக்காட்டி சராசரி மனிதர்களாகி விடக்கூடாது என்பதுதான் என் போன்ற ரசிகர்களின் கவலை.

இப்போதும் ஒன்றும் கெட்டுவிடவில்லை. இசையமைப்பாளர் தேவேந்திரன் சென்னை வில்லிவாக்கம் பகுதியில்தான் இருக்கிறார். உங்களின் அடுத்த படத்தில் அவருக்கு வாய்ப்புக் கொடுத்து அவருடைய வாழ்வை வளமாக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்!

இப்படிக்கு

உங்கள் ரசிகன்.

English summary
An open letter to Bharathiraja who recently criticised Ilaiyaraaja in a weekly.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil