For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  அஃறிணைகளைப் பயன்படுத்தி எடுக்கப்படும் திரைப்படங்கள்

  By Shankar
  |

  - கவிஞர் மகுடேசுவரன்

  நல்ல திரைப்படம், உலகத் திரைப்படம், கலைப்படம், விருதுப்படம் என்று ஒரு தரப்பினர் முனைப்பாகத் தேடிப் பார்த்துக்கொண்டிருப்பார்கள். இன்னொரு புறத்தில் அம்மன் திரைப்படம், பக்தித் திரைப்படம், விலங்குகள் திரைப்படம், தாய்தங்கைப் பாசத் திரைப்படம், பேய்ப்படம் என்று வேறுவகைப் படங்கள் சத்தமில்லாமல் வெளியாகி காசை அள்ளிச் சென்றுகொண்டிருக்கும். திரைப்படத்தின் வாய்ப்புகள் பல்வேறாக இருக்கையில் அஃறிணையொன்று தன் மிகைச்செய்கையால் மனிதர்களோடு அன்பாகி அமைவது களிநயமான கதைப்பொருளாகும்தானே ?

  விலங்குகளைப் பயன்படுத்தி எடுக்கப்படும் திரைப்படங்கள் தனித்த வகை. திரைப்படக்கலை தோன்றியது தொடங்கி விலங்குகளைத் தொடர்புபடுத்தி எடுக்கப்படும் காட்சிகள் பார்வையாளர்களைப் பன்மடங்கு ஈர்த்தன. சார்லி சாப்ளினின் 'சர்க்கஸ்' படம் நினைவிருக்கலாம். அந்தச் சிங்கம் தன்னியல்பில் இருக்கும். சிங்கக்கூண்டுக்குள் சென்று மாட்டிக்கொள்ளும் சாப்ளின் பதறியடித்து அலைபாய்ந்துகொண்டிருப்பார். மனிதரும் விலங்கும் என்னும் அந்தக் கலவையே எதிர்முரண்களின் களம். காண்பதற்குப் பலவும் தோன்றும்.

  Animal movies in Tamil Cinema

  அசோகமித்திரன் எழுதிய 'புலிக்கலைஞன்' என்னும் புகழ்பெற்ற சிறுகதை பலர்க்கும் நினைவிருக்கலாம். திரைப்பட நிறுவனத்திற்குள் புலிவேடக் கலைஞன் வந்து வாய்ப்பு கேட்கும் கதை. பசித்தவனாய் ஏழையாய் எளியவனாய் அடக்கனாய் உள்ளே நுழையும் அக்கலைஞன் தனக்கான வாய்ப்பைக் கெஞ்சுகிறான். அடுத்து என்ன செய்வது என்று பொழுது போக்க வழியின்றி இருந்த ஊழியர்களிடையே அவன் நிற்கிறான். உனக்கு என்ன தெரியும் என்றதற்குத் தான் நன்கு புலிவேடமிட்டு ஆடுவேன் என்கிறான். பொழுதுபோக வேண்டுமே ! எங்கே புலியாய் நடித்துக்காட்டு என்று அவன் ஏவப்படுகிறான். அவ்வளவுதான்... அதுவரை பூனையாய்ப் பதுங்கி ஒதுங்கி நின்றவன் புலியாய் மாறி அலுவலகத்தையே கானகமாக்கிவிடுகிறான். மேலே எகிறுவதும் குதிப்பதும் உறுமுவதுமாய் அவன் பேருணர்வுக்காட்பட்டு ஆடுவதைப் பார்த்த அனைவரும் அச்சத்தில் உறைந்துபோய்விடுகிறார்கள். ஆடிக் காண்பித்துவிட்டு மீண்டும் அவன் அடக்கனாகி நிற்பான். எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருந்தவர்கள் அவன் முகவரியைக் கேட்டு வாங்கிக்கொண்டு அனுப்புகிறார்கள். அடுத்ததாய்ப் புலியை வைத்துப் படமெடுக்கையில் அவனைப் பயன்படுத்திக் கொள்வதாய் உறுதி கூறுகிறார்கள். பின்னொருநாள் புலியை வைத்துப் படமெடுக்கும் வாய்ப்பு வருகிறது. அவன் தந்த முகவரியில் தேடுகிறார்கள். புலிக்கலைஞன் அங்கே இல்லை. புலி என்பதை மாற்றிக்கொண்டு படமெடுக்கச் சென்றுவிடுகிறார்கள். புலிக்கலைஞன் காலத்தில் கரைந்துவிடுகிறான்.

  Animal movies in Tamil Cinema

  பொழுதுபோக்கில்லாதபோது புலிக்கலைஞனைப் பார்த்த அந்த மனம்தான் அஃறிணைகளை வைத்து எடுக்கப்படும் படங்களையும் அதே வியப்போடு பார்க்கிறது. நமக்குள் ஒரு காட்டுவாசி இருக்கிறான். அந்தக் காட்டுவாசி முன்னொரு காலத்தில் குரங்காக இருந்தவன். மரங்களைப் பற்றித் தொங்கியவன். அவனுக்கு அக்கானகத்தின் எல்லா விலங்குகளையும் தெரியும். எதை நண்பனாக்குவது, எதை உணவாக்குவது, எதைப் பழக்குவது, எதைப் பயன்படுத்துவது, எது தன்னைக் கொல்லும், எது தன்னைத் தாக்கும்... எல்லாம் அறிந்தவன் அவன். அவ்வுறவில் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் ஈடுபட்டவன். அந்த மனத்தின் எச்சம்தான் நம்மிடம் இருக்கிறது. அதனால்தான் அஃறிணைகளைப் பயன்படுத்தி எடுக்கப்படும் படங்களை நம்மையறியாமல் விரும்பிப் பார்க்கிறோம்.

  Animal movies in Tamil Cinema

  விலங்குகளைப் பயன்படுத்தி எடுக்கப்படும் படங்களுக்கு மொழி வேறுபாடில்லாமல் எங்கும் வரவேற்பிருக்கிறது. நாம் வியக்கும் ஆலிவுட்டிலும் விலங்குப் படங்களைத் தொடர்ந்து எடுக்கிறார்கள். கிங்காங் குரங்குகள், ஜுராசிக் பார்க் பூதப்பல்லிகள் என்று எடுக்கப்பட்ட படங்கள் விலங்குப் படங்கள் அல்லாமல் வேறென்ன ? தம்முடைய மிகுபொருட்செலவாலும் தொழில்நுட்பச் செம்மையாலும் அவற்றின் உருவாக்கத்திற்காக வினைக்கெடுகிறார்கள். அவை ஆங்கிலப் படங்கள் என்ற மயக்கத்திற்கு ஆட்பட்டுக் கேள்வியின்றிப் பார்த்துப் பழகிவிட்டோம். அவ்வகைப் படங்களை நம்மூரில் சின்னப்பத் தேவரும் இராம நாராயணனும் எடுத்தால் எளிமையாகப் பார்க்கிறோம். தொடக்கத்தில் சுமை, சிவப்புமல்லி போன்ற குமுகாய நிலைபேசிய படங்களை எடுத்த இராம நாராயணன் திரைப்படச் சந்தையை நன்கு விளங்கிக்கொண்டவராய் விலங்குகளைப் பயன்படுத்திப் படமெடுத்தார். மனிதர்களை நடிக்கவைத்து அன்றன்றைய காட்சிகளை எடுத்துவிடலாம். குரங்கையும் நாயையும் யானையையும் ஆட்டையும் பாம்பையும் பயன்படுத்தி ஒரு சுடுவை எடுப்பது எளிதா என்ன ? பழக்கப்படுத்தப்பட்ட விலங்குகள் என்றாலும் அவற்றைக் காட்சிக்கேற்ப நடிக்க வைப்பது கல்லிலே நார் உரிக்கும் வேலை.

  Animal movies in Tamil Cinema

  விலங்குகளைக்கொண்டு எடுக்கப்பட்ட படங்கள் அதுவரையிலான திரைப்படப் போக்கிற்குக் காற்புள்ளி வைத்து பெருவெற்றி பெற்றிருக்கின்றன. எம்ஜிஆர் நடித்த படங்களில் 'நல்ல நேரம்' என்ற திரைப்படம் அடைந்த வெற்றியை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். எழுபதுகளில் மிகப்பெரிய வெற்றி பெற்ற படவரிசையில் 'ஆட்டுக்கார அலமேலு'க்குத் தனி இடம் தரவேண்டும். படத்தில் நாயகியின் வளர்ப்பு விலங்காக வரும் வெள்ளாடு செய்யும் கூர்மதிச் செயல்கள் பார்வையாளர்களைக் கைத்தட்டிக் களிக்க வைத்தன.

  Animal movies in Tamil Cinema

  தாய் யானையைக் கொன்றுவிடும் வேட்டைக்காரன் தன் தாயை இழந்த பிறகு திருந்துவான். தாயற்ற யானைக்கன்றின் அன்பைப் பெறுவதற்கு அவன் நடத்தும் போராட்டம்தான் இரஜினிகாந்த் நடித்த அன்னை ஓர் ஆலயத்தின் கதை. கமல்ஹாசன் நடித்து பட்டிதொட்டியெல்லாம் பாடல்களோடு பரவிய பாம்புப் படம் 'நீயா'. பிற்காலத்தில் புகழ்பெற்ற இராமராஜன் ஆவினங்களின் அன்பினராகத் தோன்றிய படங்கள் பல. இராம நாராயணன் இயக்கிய 'நன்றி' என்ற திரைப்படத்தைப் பலர் மறந்திருப்பார்கள். அப்படத்தில்தான் நடிகர் அர்ஜூன் தமிழுக்கு அறிமுகப்படுத்தப்பட்டார். நாயின் 'நன்றி'யோடு மேலும் பல விலங்குகளின் மிகைச்செயல்வகைக் காட்சிகளால் ஆன படம் அது. செல்வி என்னும் திரைப்படத்திற்காக 'இளமனது பலகனவு விழிகளிலே வழிகிறதே...' என்னும் பாடல் ஆண் பெண் நாய் இணைந்து இணைப்பா பாடுவதாக எடுக்கப்பட்டது. பாடலில் வரும் 'லல்லலலா...'வுக்கு வெள்ளுடை அணிந்த தேவதைகளாய் வெள்ளை நாய்க்குட்டிகள் மிதந்து வரும். துர்கா, ஆடிவெள்ளி போன்றவை அரங்கு நிறைந்து ஓடிய வெள்ளிவிழாப் படங்கள். நான் பணியாற்றிய நஞ்சுபுரம் என்ற படமும் பாம்புப் படம்தான். கடந்த பத்தாண்டுகளில் வெளியானவற்றில் இந்தியத் திரைப்படச் சந்தையைப் புரட்டிப் போட்ட படம் இராஜமௌலியின் 'நான் ஈ'. பட்டியலும் பெரிது. பரப்பளவும் பெரிது.

  Animal movies in Tamil Cinema

  இன்றைக்கு வரைகலை முறைகள் பல்கிப் பெருகிவிட்டன. ஆங்கிலத்தில் விலங்குகளையே முதன்மையாக்கி 'ஐஸ் ஏஜ்' தொடராக எடுக்கப்பட்ட திரைப்படங்கள் எங்கோ சென்றுவிட்டன. அங்கே அஃறிணைகளைப் பாத்திரமாக்கி வரைகலை முறைகளால் எண்ணற்ற திரைப்படங்கள் உருவாக்கப்படுகின்றன. தமிழில் அவ்வகைமையானது இராம நாராயணனுக்குப் பிறகு தொடர்பறுந்து தேங்கி நிற்கிறது. நேர்த்தியான வரைகலைத் திறன்பாடுகளோடு அஃறிணைகளைப் பாத்திரமாக்கி எடுக்கப்படும் படங்கள் குழந்தைகள் முதற்கொண்டு அனைவரையும் கவரும். அந்தப் பகுதி ஆளவரமின்றிக் கிடக்கிறது. யார் முயன்றாலும் வெற்றி கிடைக்கும்.

  Animal movies in Tamil Cinema
  English summary
  Poet Magudeswaran's article on animal movies in Tamil
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X