சர்கார் சாதனையை முறியடித்த அண்ணாத்த... கலெக்ஷன் எவ்வளவு தெரியுமா ?
சென்னை : டைரக்டர் சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நடித்த அண்ணாத்த படம் தீபாவளியன்று ரிலீஸ் ஆனது. உலகம் முழுவதும் மிக பிரம்மாண்டமாக இந்த படம் ரிலீஸ் செய்யப்பட்டது. காதல், சென்டிமென்ட், ஆக்ஷன், காமெடி ஆகியன கலந்த படமாக அண்ணாத்த எடுக்கப்பட்டுள்ளது.
கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, குஷ்பு, மீனா, பிரகாஷ் ராஜ், அபிமன்யு சிங், ஜெகபதி பாபு, சூரி, சதீஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தில் ரஜினியின் தங்கையாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். கிராமத்து தலைவராக வேஷ்டி சட்டையில் படம் முழுக்க கலக்கி உள்ளார் ரஜினி.

இதுவரை இல்லாத அளவிற்கு வெளிநாடுகளில் அதிகபட்சமாக 1100 க்கும் அதிகமான தியேட்டர்களில் அண்ணாத்த ரிலீஸ் செய்யப்பட்டது. கிட்டதட்ட 20 ஆண்டுகளுக்கு பிறகு தீபாவளியன்று ரஜினி படம் ரிலீஸ் செய்யப்பட்டதால் ரஜினி ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். முதல்நாள் முதல் ஷோவிற்கு கூட்டம் அலை மோதியது. திருவிழா போல் ரஜினி ரசிகர்கள் இதை கொண்டாடினர்.
சமீபத்தில் தான் தமிழக அரசு தியேட்டர்களில் 100 சதவீதம் பார்வையாளர்களுக்கு அனுமதி அளித்ததால் தியேட்டர்களில் ரசிகர் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. பல மாறுபட்ட விமர்சனங்களை இந்த படம் பெற்றுள்ளது. பழைய கதை, எதிர்பார்த்த அளவிற்கு இல்லை என்பது போன்று விமர்சகர்கள் பலவிதமாக கூறி இருந்தாலும், ரஜினி ரசிகர்களிடம் அண்ணாத்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் அண்ணாத்த முதல் நாள் வசூல் 39 கோடி ரூபாய் என்று கூறுகிறார்கள். அதே சமயம் வெளிமாநிலங்கள், வெளிநாடுகள் வசூல் என சேர்த்து மொத்தம் அண்ணாத்த முதல் நாளில் 67 கோடி ரூபாயை அள்ளியுள்ளதாக சொல்லப்படுகிறது. இது விஜயின் சர்கார் படத்தின் முதல் நாள் வசூலை விட அதிகம் என்று விநியோகஸ்தர்கள் தரப்பில் இருந்து தகவல்கள் கிடைத்துள்ளது.

முதல் நாளிலேயே அண்ணாத்த வசூல் சாதனை படைத்துள்ளதாக கூறப்படுகிறது. இருந்தாலும் அண்ணாத்த படத்தின் முதல் நாள் வசூல் என்ன என்பதை படக்குழு இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இதனால் அண்ணாத்த படத்தின் முதல் நாள் முதல் ஷோ என்ன என்பது தெரியாமல் ரசிகர்கள் குழம்பிப் போய் உள்ளனர்.
இதே போன்று வெளிநாடுகளில் முதல்நாள், முதல் ஷோவிலேயே அண்ணாத்த படம் ரூ.11 கோடிகளை வசூலித்ததாக கூறப்படுகிறது. இதில் ஐரோப்பிய நாடுகளின் வசூல் தொகை சேர்க்கப்படவில்லை. கொரோனாவிற்கு பிறகு வெளிநாடுகளில் அதிக தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்பட்ட முதல் தமிழ் படம் அண்ணாத்த தான். இருந்தாலும் ரஜினி ரசிகர்களை பொருத்தவரை பண்டிகை நாளில் ரஜினி படம் ரிலீஸ் ஆனதே போதும் என்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











