twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அண்ணாதுரை - விஜய் ஆண்டனிக்காக ஒருமுறை...

    By Shankar
    |

    கதாநாயகர்களாகி பல வருடங்கள் ஆன பிறகு கூட இன்னும் சில ஹீரோக்களை மட்டும் நம்பி நம் மக்கள் திரையரங்கிற்கு செல்வதில்லை. இயக்குநர், இசை போன்ற மற்ற காரணிகளும் இதனை மாற்றுகின்றன. ஆனால் கதாநாயகனாகிய குறுகிய காலத்திலேயே இயக்குநர் யார் என்றெல்லாம் யோசிக்க விடாமல் மக்களை திரையரங்கிற்கு இழுப்பவர் விஜய் ஆண்டனி. ஆரம்பத்தில் அவர் தெரிவு செய்து நடித்த ஒவ்வொரு கதைகளும், ஆபாசமில்லாத அடிதடி அதிகம் இல்லாத அனைத்து மக்களும் பார்ப்பது போலான படங்களை தொடர்ந்து கொடுத்துக்கொண்டிருப்பதுமே இதற்குக் காரணம்.

    அமைதியான ஹீரோவாக வலம் வந்த விஜய் ஆண்டனி கடந்த இரண்டு மூன்று படங்களாக ஆக்‌ஷன் ஹீரோவாக உருமாற்றம் அடைந்து கொண்டிருக்கிறார். அந்த உருமாற்றத்தின் அடுத்த நிலையாக வெளிவந்திருக்கும் படமே அண்ணாதுரை.

    Annadurai, watchable once for Vijay Antony

    அண்ணன் தம்பி என இரண்டு கதாப்பாத்திரங்களில் விஜய் ஆண்டனி. அண்ணன் பெயர் அண்ணாதுரை தம்பி பெயர் தம்பி துரை. ஒரு வேளை விஜய் ஆண்டனிக்கு ஒரு அக்கா இருந்திருந்தால் அக்காதுரை என பெயரிட்டிருப்பார்கள் போலும்!

    உயிருக்குயிராகக் காதலித்த காதலி கண்முன்னே மரணமடைய, மனமுடைந்த அண்ணாதுரை, முழு தாடியுடன் தொடர் குடிகாரனாக வலம் வருகிறார். 'சுத்தத்திலும் சுத்த தங்கமடா இந்த அண்ணாதுரை...' என துவங்கும் பாடலுக்கேற்ப, விக்ரமன் பட ஹீரோக்களுக்கு சற்றும் குறைவில்லாத தரத்துடன் நடித்திருக்கிறார் விஜய் ஆண்டனி. நிறைய இடங்களில் எஸ்.ஏ.ராஜ்குமாரின் 'லாலா லாலா லாலாலா...' மியூசிக் இருந்திருந்தால் கன கச்சிதமாக இருந்திருக்கும்.

    Annadurai, watchable once for Vijay Antony

    பள்ளியில் விளையாட்டு ஆசிரியராக வேலைசெய்யும் தம்பிதுரை ட்ரிம் செய்யப்பட்ட தாடி மீசையுடன் சுமார்ட் பாயாக வலம் வருகிறார். கல்யாண மாலை போன்ற நிகழ்ச்சியில் பெண் பார்க்கும் காட்சியும் தொடர்ந்து ஹீரோயினுடன் வரும் ஒரு சில காட்சிகளும் அருமை. ஹீரோயின் சற்று புஷ்டியாக இருந்தாலும் ரொம்பவே அழகாக இருக்கிறார். விஜய் ஆண்டனிக்கென்றே புஷ்டியான புது புது ஹீரோயின்களைத் தேடிப்பிடிக்கிறார்கள்.

    படத்தின் கதை என்று பார்த்தால் வசந்தபாலன் இயக்கத்தில் பரத் மற்றும் பசுபதி நடித்த வெயில் திரைப்படத்தின் கதையில் சற்று மசாலா சேர்த்து பட்டி டிங்கரிங் பார்த்த கதைதான் இந்த அண்ணாதுரை. பசுபதி கதாப்பாத்திரத்தில் அண்ணன் அண்ணாதுரையும் பரத் கதாப்பாத்திரத்தில் தம்பி தம்பிதுரையும் நடித்திருக்கிறார்கள்.

    Annadurai, watchable once for Vijay Antony

    இரட்டை வேடம்.. விஜய் ஆண்டனிக்கு ஆக்சன் வேறு நன்றாகவே வருகிறது. அப்படியிருக்க இந்தக் கதையை மிகவும் சிறப்பாகவே எடுத்திருக்கலாம். ஆனால் திரைக்கதையில் மெகா சொதப்பல். மிகவும் மந்தமாகவே செல்கிறது முழுப்படமும். இடைவேளையில் எதோ செமையாக இருக்கப்போகிறது போன்ற ஒரு ட்விஸ்டை வைத்திருந்தாலும், அதைத் தொடர்ந்த இரண்டாவது பாதியும் ஒரே வழ வழா கொழ கொழா.

    க்ளைமாக்ஸ் என்னவாக இருக்கப்போகிறது என்பதை பதினைந்து நிமிடங்கள் முன்னரே அனைவராலும் யூகிக்க முடிகிற படியால், கடைசியில் எப்படா படம் முடியும் என்றே நினைக்கத் தோண்றுகிறது. 'அது அண்ணாதுரை நா தம்பிதுரை' என விஜய் ஆண்டனி சீரியசாக வசனம் பேசிக்கொண்டிருக்கையில் 'அதெல்லாம் இருக்கட்டும் மொதல்ல நீ கதவத் தொற' என கிளம்பலாம் போலிருக்கிறது.

    Annadurai, watchable once for Vijay Antony

    படத்தில் நல்ல விஷயங்கள் என்று பார்த்தால் முதலில் விஜய் ஆண்டனி. அலட்டல் இல்லாத அமைதியான நடிப்பு. முதல் பாதி மிகவும் மெதுவாகவே நகர்ந்தாலும் பெரிதாக போர் எல்லாம் அடிக்கவில்லை. "அண்ணேன்... இது வரைக்கும் நா யாரயுமே அடிச்சதில்லண்ணே.. நா அடிச்சா எப்டி அடிப்பேன்னு கூட எனக்குத் தெரியாதுண்ணே," என வில்லன்களிடம் பேசும் வசனம் அருமை.

    "சில பேரு செஞ்சிருவேன் செஞ்சிருவேன்னு பேசிக்கிட்டே இருப்பாங்க.. ஆனா நா பேசிக்கிட்டு இருக்கும்போதே செஞ்சிருவேன்," என்பது போலான ஒரு சில பஞ்சு டயலாக்குகள். பஞ்சு டயலாக் பேசுனாதானே ஆக்‌ஷன் ஹீரோவுக்கே ஒரு மதிப்பு. அதுபோக விஜய் ஆண்டனியின் மாமனாராக வருபவர் ஒரு சில காட்சிகளே வந்தாலும் மனதில் நிற்கும் கதாப்பாத்திரம்.

    Annadurai, watchable once for Vijay Antony

    அடுத்து பழைய வில்லனான நளினிகாந்த், அடியாளாக வரும் மொட்டை ஆகியோர் நீண்டநாட்களுக்குப் பிறகு பெரிய திரையில் வலம் வந்திருக்கிறார்கள். அந்த மொட்டையின் கெட்டப் அப்படியே தளபதி படத்தில் வரும் அம்ரீஷ் பூரியை ஞாபகப்படுத்துகிறது. அண்ணன் அண்ணாதுரைக்கு யார் ஜோடி என்பது கடைசி வரை முடிவு செய்யப்படாத நிலையே இருக்க, அவரைக் காதலிக்கும் இரண்டு கதாநாயகிகளும் சுமாராக இருக்கிறார்கள்.

    ராதாரவி ஒரு சிறிய வேடத்தில் வந்து போகிறார். அனேகமாக கடந்த இரண்டு மூன்று வருடத்தில் ராதாரவி இதே கதாப்பாத்திரத்தை 50 வது முறை செய்கிறார் என நினைக்கிறேன். பாடல்களும் பின்ணனி இசையும் ஓக்கே ரகம். அதிக பாடல்கள் இல்லாதது இன்னொரு நிம்மதி. இசை மட்டுமல்லாமல் இந்தப் படத்தில் படத்தொகுப்பையும் விஜய் ஆண்டனியே செய்திருக்கிறார்.

    Annadurai, watchable once for Vijay Antony

    திரைக்கதையை இன்னும் சற்று வலுவாக அமைத்திருக்கலாம். ஐந்து காட்சிக்கு ஒரு நல்ல காட்சி வைத்தாலே போதும். படம் போவதே தெரியாது. ஆனால் இங்கு அனைத்து காட்சிகளுமே சுமார் ரகமாகவே இருக்கிறது. விஜய் ஆண்டனி மட்டுமே கவர்கிறார்.

    மொத்தத்தில் விஜய் ஆண்டனியின் மற்ற படங்களை விட இந்த அண்ணாதுரை சற்று நம்பகத் தன்மை குறைந்தே காணப்படுகிறது இந்தப் படத்தில். விஜய் ஆண்டனிக்காக ஒரு முறை பார்க்கலாம்.

    - முத்துசிவா

    English summary
    Vijay Antony starrer Annadurai is once watchable for Vijay Antny's subtle performance.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X