அவர் எப்படி அப்படி சொல்லலாம்?.. தனுஷுக்கும், ஜிவி பிரகாஷுக்கும் வந்த சண்டைக்கான காரணம்.. விஜய்யும் இன்வால்வ்?
சென்னை: தனுஷின் பொல்லாதவன், ஆடுகளம், அசுரன், வாத்தி, இட்லி கடை ஆகிய படங்களுக்கு இசையமைத்தவர் ஜிவி பிரகாஷ். இரண்டு பேரும் சினிமாவை தாண்டி நெருக்கமான நண்பர்களாக இருக்கிறார்கள். இடையில் அவர்களுக்குள் மோதல் போக்கு நிலவியது. அதற்கான காரணம் என்னவென்று தெரியாத நிலைமையில்; பிரபல பத்திரிகையாளர் அந்தணன் அதுகுறித்து பேசியிருக்கிறார்.
வெற்றிமாறன் இயக்குநராக அறிமுகமான பொல்லாதவன் படம்தான் தனுஷும் ஜிவி பிரகாஷும் இணைந்த முதல் படம். அந்தப் படத்தின் பாடல்கள், பின்னணி இசை என அத்தனையும் தரமாக இருந்தது. அந்தப் படத்துக்கு பிறகு ஆடுகளம் படத்தில் மீண்டும் சேர்ந்தார்கள். இந்த முறை இவர்களது கூட்டணி அடுத்தக்கட்டத்துக்கு நகர்ந்தது. தொடர்ந்து இரண்டு படங்களின் ஆல்பம் ஹிட்டானதால் இவர்கள் ராசியான கூட்டணி என்ற இமேஜும் விழுந்தது.
நெருங்கிய நண்பர்கள்: இரண்டு பேரும் சினிமாவுக்கு வருவதற்கு முன்பிருந்தே நெருக்கமான நண்பர்கள். ஒன்றாக அரட்டை அடிப்பது, கிரிக்கெட் விளையாடுவது என பொழுதை கழித்திருக்கிறார்கள். இந்த நட்பு வட்டத்தில் வெற்றிமாறனும் உண்டு. இயல்பாகவே அவர்களுக்குள் நல்ல புரிதல் இருந்ததால்தான் படங்களில் இடம்பெற்ற பாடல்களும், இசையும் பட்டித்தொட்டியெங்கும் ஒலித்துக்கொண்டிருந்தன.

எழுந்த பிரச்னை: நல்லபடியாக போய்க்கொண்டிருந்த அவர்களது நட்பில் இடையில் விரிசல் ஏற்பட்டது. அந்த விரிசலால்தான் ஜிவி இடத்துக்கு அனிருத்தை தனுஷ் கொண்டுவந்ததாக ஒரு பேச்சும் ஓடியது. காலப்போக்கில் அந்த மனஸ்தாபம் சரியாகி மீண்டும் சேர்ந்தார்கள். அப்படி அவர்கள் இணைந்த அசுரன் படமும் மெகா ப்ளாக் பஸ்டர். படத்தின் தீம் இசை, எள்ளு வய பூக்கலையே பாடல் எல்லாம் க்ளாசிக்கல் ஹிட்.
தேசிய விருது: மேலும் சூரரைப் போற்று படத்துக்காக தேசிய விருது வாங்கிய ஜிவி பிரகாஷ், தனுஷ் நடித்த வாத்தி படத்துக்கு இசையமைத்ததற்காகவும் அண்மையில் தேசிய விருதை பெற்றார். இப்போது எந்த மோதலும் இல்லாமல் நல்ல நட்போடு இருக்கிறார்கள். இட்லி கடை ஆடியோ வெளியீட்டு விழாவில்கூட, 'ராயன் படத்தில் ஒரு தம்பி கேரக்டரில் என்னை நடிக்க தனுஷ் கூப்பிட்டார். ஆனால் அந்த கேரக்டர் துரோகம் செய்யும்படி இருந்தது. சினிமாவில்கூட எனது நண்பருக்கு துரோகத்தை கொடுத்துவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். அதனால்தான் நடிக்கவில்லை. கண்டிப்பாக எந்தக் காலத்திலும் நான் அந்த நான்கு பேரில் ஒருவராக இருக்கமாட்டேன்' என பேசியிருந்தார்.
அந்தணன் பேட்டி: அவரது இந்தப் பேச்சு பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்தது. இந்நிலையில் பிரபல பத்திரிகையாளரான அந்தணன் ஒரு பேட்டியில் இவ்விவகாரம் குறித்து பேசுகையில், "ஆங்கில பத்திரிகை ஒருமுறை சிறந்த நடிகர் என்று விஜய்யை அறிவித்தது. ஆனால் நேரில் வந்து அந்த விருதை பெற்றுக்கொள்ள முடியாது என்று அவர் சொல்லிவிட்டார். இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் விழித்த அந்தப் பத்திரிகை தனுஷை தொடர்புகொண்டு நேரில் வர முடியுமா என்று கேட்டது.
இதனால்தான் பிரச்னை: அவரும் ஒத்துக்கொண்டார். எனவே சிறந்த நடிகர் தனுஷ் என்று அறிவித்தது. ஆனால் விஜய்யை ஏற்கனவே அறிவித்திருந்தது ஜிவி பிரகாஷுக்கு தெரியும். இவர் தனது எக்ஸ் பக்கத்தில், 'ஒருவர் வரவில்லை என்பதற்காக சிறந்த நடிகருக்கான விருதை மாற்றலாமா?" என்று கேட்டுவிட்டார். இது தனுஷுக்கும் தெரியவந்தது. இவர் ஏன் இப்போது இப்படியெல்லாம் பேசுகிறார் என்றுதான் ஜிவியை தனுஷ் ஒதுக்கி வைத்திருந்தார்" என்றார்.


Click it and Unblock the Notifications