அம்மாவா நடிக்கிறீங்களான்னு கேட்கிறாங்க.. கேலி பண்றாங்க.. சூரரைப் போற்று நடிகைக்கே இந்த நிலைமையா?
சென்னை: 27 வயதாகும் நடிகை அபர்ணா பாலமுரளியை அதற்குள் அம்மா கதாபாத்திரத்தில் நடிக்கிறீங்களா என சிலர் உருவ கேலி செய்ததாக பேசி இருப்பது பரபரப்பை கிளப்பி உள்ளது.
மலையாள நடிகையான அபர்ணா பாலமுரளி 2015ம் ஆண்டு வெளியான ஒரு செகண்ட் கிளாஸ் யாத்ரா படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.
8 தோட்டாக்கள் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான அவருக்கு சூர்யாவுடன் சூரரைப் போற்று படத்தில் பொம்மியாக வாழ மிகப்பெரிய வாய்ப்பு கிடைத்தது.

ஜிவி பிரகாஷ் ஜோடி
8 தோட்டாக்கள் படத்தில் நடித்து முடித்த பிறகு மீண்டும் ஏகப்பட்ட மலையாள படங்களில் நடிக்க ஆரம்பித்தார் அபர்ணா பாலமுரளி. அதன் பின்னர், ராஜீவ் மேனன் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடிப்பில் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் உருவான சர்வம் தாள மயம் படத்தில் ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாக நடித்திருந்தார். அதன் பின்னர், ஜி.வி. பிரகாஷ் இசையில் உருவான சூரரைப் போற்று படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்தார் அபர்ணா பாலமுரளி.

பொம்மி போல பொண்டாட்டி
இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றிப் பெற்ற தேசிய விருதுகளை குவித்த சூரரைப் போற்று படத்தில் பொம்மி கதாபாத்திரத்தில் நடித்து தேசிய விருதையும் வென்றார் நடிகை அபர்ணா பாலமுரளி. பொம்மி போல ஒரு பொண்டாட்டி வேண்டும் என ஏகப்பட்ட இளைஞர்கள் எதிர்பார்க்கும் அளவுக்கு அவரது நடிப்பு காட்டுத்தனமாக இருந்தது.

பெரிய நடிகருக்கு ஜோடியாவருன்னு
சூர்யாவுக்கு ஜோடியான நிலையில், அடுத்ததாக விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடிப்பார் என எதிர்பார்த்த நிலையில், அவருக்கு சரியாக பட வாய்ப்புகள் தமிழில் அமையவில்லை. கடைசியாக ஆர்.ஜே. பாலாஜி நடிப்பில் வெளியான வீட்ல விசேஷம் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

உருவ கேலி
ஒல்லியாக இருந்தால் தான் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு கிடைக்குமா? என்கிற கேள்வியை எழுப்பி உள்ளார் அபர்ணா பாலமுரளி. முன்னணி நடிகர்கள் பூஜா ஹெக்டே, ராஷ்மிகா மந்தனா, திஷா பதானி போல ஸ்லிம்மாக இருக்கும் நடிகைகளுக்கே முன்னுரிமை கொடுத்து வரும் நிலையில் தனக்கு இண்டஸ்ட்ரியில் நேர்ந்த உருவ கேலி விஷயங்கள் பற்றி ஓப்பனாக பேசி உள்ளார். ஆரம்பத்தில் அதற்கு கவலைப் பட்டதாகவும், அதன் பிறகு அதை பொருட்படுத்தவில்லை என்றும் கூறியுள்ளார்.

அம்மா கேரக்டர்
கொஞ்சம் குண்டான நடிகையை பார்த்து விட்டால் போதும், உடனடியாக அம்மா கேரக்டரில் நடிக்கிறீங்களான்னு கேட்கிறாங்க என பேசி பரபரப்பை கிளப்பி உள்ளார் அபர்ணா பாலமுரளி. விஜய்சேதுபதி, தனுஷ் உள்ளிட்ட நடிகர்கள் அவர்கள் உருவத்தை வைத்து சாதிக்கவில்லை என்றும் நடிகர்களை போலவே நடிகைகளிடமும் திறமையை பார்த்தால் நல்லா இருக்கும் என பேசி உள்ளார் அபர்ணா பாலமுரளி.

நித்தம் ஒரு வானம்
கடந்த செப்டம்பர் 11ம் தேதி தனது பிறந்தநாளை கொண்டாடி இருந்தார் அபர்ணா பாலமுரளி. அவரது பிறந்தநாளை முன்னிட்டு, அவர் நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள நித்தம் ஒரு வானம் படத்தின் போஸ்டரும் வெளியானது. அசோக் செல்வன், ரிது வர்மா, அபர்ணாபாலமுரளி, கல்யாணி பிரியதர்ஷன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி வரும் இந்த படத்தை ரா. கார்த்திக் இயக்கி உள்ளார்.


Click it and Unblock the Notifications











