ஏ.ஆர்.ரகுமான் தான் என்னை அந்தப் படத்தை சவாலாக எடுத்துக் கொண்டு நடிக்கச் சொன்னார்... நடிகர் ரகுமான்
சென்னை: பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் உத்தம சோழன் என்ற முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகர் ரகுமான்.
இவருடைய கதாபாத்திரத்தை வைத்துதான் ஐஸ்வர்யா ராய் மற்றும் சரத்குமார் கதாபாத்திரங்கள் திட்டம் தீட்டுவார்கள்.
தற்சமயம் ரஹ்மான் அவர்கள் கொடுத்துள்ள ஒரு பேட்டியில் பல சுவாரசியமான தகவல்களை கூறியிருக்கிறார்.

புது புது அர்த்தங்கள்
தமிழில் எனக்கு மிகப் பெரிய அறிமுகம் கொடுத்த படம் புது புது அர்த்தங்கள். தமிழ் மட்டும் இல்லாமல் என்னுடைய சினிமா வாழ்க்கையிலும் அந்தப் படம் முக்கியமான ஒன்று. காரணம், நடிகர்கள் கமல்ஹாசன், ரஜினிகாந்த் போன்ற ஜாம்பவான்களை உருவாக்கிய இயக்குநர் கே.பாலச்சந்தர் அவர்களுடன் பணியாற்றியதுதான். அவருடன் பணியாற்றுவேன் என்று சற்றும் நான் எதிர்பார்க்கவே இல்லை. அந்தப் படத்தில் வருவது போல அப்போது நிஜத்திலும் நிறைய காதல் கடிதங்கள் எனக்கு வந்தன. ஆனால் இப்போது சமூக வலைதளங்கள் இருப்பதால் கடிதங்கள் படிப்பதை இழந்திருக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.

அஜித் படத்தை தவிர்த்தேன்
பில்லா திரைப்படத்தில் வில்லனாக நடிக்க வாய்ப்பு வந்தபோது முதலில் அதனை வேண்டாம் என்று தவிர்த்துவிட்டேன். காரணம் நடிகர் அஜித் பற்றி என்னிடம் நிறைய பேர் தவறான கருத்துக்களை கூறினார்கள். அது மட்டுமின்றி அப்போது பத்திரிகைகளிலும் அவருக்கு எதிராகத்தான் செய்திகள் எழுதுவார்கள். ஆனால் படத்தில் பணிபுரிந்த பின்னர் தான் அவருடைய குணம் தெரிந்தது. thoழில்முறையில் நன்கு பழகக் கூடியவர். பழக்க வழக்கங்களிலும் சிறந்த நபர்தான் நடிகர் அஜித் என்று கூறியிருக்கிறார்.

சங்கமம்
தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை ரகுமானின் கரியரில் சங்கமம் திரைப்படமும் மிக முக்கியமான திரைப்படம். வேறொரு படத்திற்காக ஏ.ஆர்.ரகுமானிடம் சென்றபோது, அவர்தான் சங்கமம் திரைப்படத்தைப் பற்றி கூறி இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணாவிடம் அறிமுகம் செய்தார். கதையை கேட்டபோது நாட்டுப்புற கலைஞனாகவும், தமிழ் கிராமத்து நபராகவும் மக்கள் என்னை ஏற்றுக் கொள்வார்களா என யோசித்தேன்.

ஏ.ஆர்.ரகுமானின் ஊக்கம்
ஆனால் கே.பாலச்சந்தர் அவர்கள் எப்படி எனக்கு சொல்லிக் கொடுத்தாரோ அதேபோல சுரேஷ் கிருஷ்ணாவும் என்னிடம் நடிப்பை வாங்கிவிட்டார். அதற்கு முக்கிய காரணம் ஏ.ஆர்.ரகுமான்தான். அந்தக் காலக்கட்டத்தில் மேற்கத்திய இசையில் பல படங்களுக்கு இசையமைத்துக் கொண்டிருந்த ரகுமானுக்கு தென்னிந்திய இசையில் இசையமைக்கும் வாய்ப்பை சங்கமம் கொடுத்தது. அதனை சவாலாக எடுத்துக் கொண்டுதான் ஒப்பந்தமானார். அதேபோல என்னையும் அதனை சவாலாக நடிக்கச் சொன்னது அவர்தான் என்று நடிகர் ரகுமான் கூறியுள்ளார். இருவரும் உறவினர்கள் என்பது கூடுதல் தகவல்.


Click it and Unblock the Notifications











