பிடிவாதத்தில் பாலா... மீண்டும் தொடங்கும் வணங்கான்... சூர்யாவுக்கு பதிலாக அருண் விஜய்?
சென்னை: நந்தா, பிதாமகன் படங்களைத் தொடர்ந்து சூர்யா - பாலா கூட்டணி வணங்கான் படத்தில் இணைந்தது.
இதில் சூர்யா ஹீரோவாக கமிட் ஆனது மட்டும் இல்லாமல், தனது 2 டி நிறுவனம் மூலம் தயாரித்தும் வந்தார்.
இந்நிலையில், வணங்கான் படத்தின் கதையில் சூர்யாவுக்கு அதிருப்தி இருந்ததால் அதிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.

எதிர்பார்ப்பில் இருந்த ரசிகர்கள்
சூர்யாவின் கேரியரில் மிகப் பெரிய கம்பேக் கொடுத்தது நந்தா திரைப்படம். அதன் மூலம் இயக்குநர் பாலாவின் தம்பியாக மாறினார் சூர்யா. அதன்பின்னர் இந்த ஜோடி மீண்டும் பிதாமகன் படத்தில் இணைந்தது. இந்த முறை பாலாவின் ஃபேவரைட்டான சியான் விக்ரமும் பிதாமகன் படத்தில் முக்கியமான கேரக்டரில் நடித்தார். சூர்யா - பாலா கூட்டணிக்கு ரசிகர்களிடம் அதிகம் எதிர்பார்ப்பு இருந்தும், இருவரும் ஒன்று சேராமல் இருந்தனர். இந்நிலையில், பல வருடங்களுக்குப் பிறகு வணங்கான் திரைப்படத்திற்காக சூர்யா - பாலா கூட்டணி மீண்டும் இணைந்தது.

வணங்கான் கூட்டணியில் வருத்தம்
வண்ங்கான் படத்தில் சூர்யா ஜோடியாக கிருத்தி ஷெட்டி நடிக்க, இசையமைப்பாளராக ஜிவி பிரகாஷ் கமிட் ஆனார். இதனையடுத்து இந்தப் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கன்னியாகுமாரி பகுதிகளில் தொடங்கியது தொடர்ந்து பல நாட்கள் நடைபெற்ற வணங்கான் படப்பிடிப்பில் சூர்யாவும் கலந்துகொண்டார். அதேபோல் வணங்கான் ஷூட்டிங் ஸ்பாட்டில் சூர்யா - பாலா இணைந்து எடுத்துக்கொண்ட போட்டோவும் வைரலானது. ஆனால், திடீரென வணங்கான் கைவிடப்படுவதாக பாலா அறிவித்தார். சூர்யா - பாலா இடையே ஏற்பட்ட மனவருத்தம் தான் இதற்கு காரணம் என சொல்லப்பட்டது.

அறிக்கை வெளியிட்ட பாலா - சூர்யா
கதையில் இருக்கும் மாற்றங்கள் சூர்யாவுக்கு செட் ஆகாது என்பதால், அவர் நலன் கருதி வணங்கான் படத்தை கைவிடுவதாக பாலா தெரிவித்திருந்தார். சூர்யாவும் வணங்கான் படத்தில் இருந்து வெளியேறிவிட்டதாக அறிக்கை விட்டு விளக்கம் கொடுத்திருந்தார். இதனால் வணங்கான் திரைப்படம் என்ன ஆகும் என்ற கேள்வி எழுந்தது. ஏற்கனவே பாலாவின் ஃபேவரைட் நடிகரான விக்ரம், பாலா இயக்கத்தில் தனது மகன் துருவ் நடித்த 'வர்மா' படத்தை டிராப் செய்தார். இப்போது சூர்யாவும் வணங்கான் படத்தில் இருந்து வெளியேறியது கோலிவுட்டை பரபரப்புக்குள்ளாக்கியது. ஆனால், வணங்கான் படத்தை எப்படியாவது முடித்தே ஆகவேண்டும் என்பதில் பிடிவாதமாக இருக்கிறாராம் பாலா.

சூர்யாவுக்கு பதிலாக அருண் விஜய்
வணங்கான் படத்தின் கதை மீது பாலாவுக்கு அதிக நம்பிக்கை இருப்பதாக சொல்லப்படுகிறது. அதனால் சூர்யாவுக்குப் பதிலாக இன்னொரு ஹீரோவை தேடிக் கொண்டிருந்த பாலா, இப்போது அருண் விஜய்யை படத்தில் கொண்டு வர முடிவு செய்துள்ளாராம். பல வருடங்களாக தோல்வியின் பிடியில் இருந்த அருண் விஜய், அஜித்தின் 'என்னை அறிந்தால்' படம் மூலம் கம்பேக் கொடுத்தார். அதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து தரமான படங்களில் நடித்து வரும் அருண் விஜய், முதன்முறையாக பாலாவுடன் இணைய ரெடியாகிவிட்டாராம். இந்தக் கூட்டணி உறுதியாகிவிட்டதாகவும், அதனால் வணங்கான் படத்தின் ஷூட்டிங்கை பிப்ரவரி மாதம் தொடங்கவும் பாலா திட்டமிட்டுள்ளாராம். இதுகுறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என சொல்லப்படுகிறது.


Click it and Unblock the Notifications











