'யானை' இந்தியில் எடுத்தால் இவர்தான் ஹீரோயின்...அருண்விஜயின் சாய்ஸ் யார் தெரியுமா?
சென்னை : அருண் விஜய் நடிப்பில், ஹரி இயக்கத்தில் உருவான 'யானை' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. அருண்விஜய் மற்றும் ஹரி ஆகிய இருவருக்குமே இந்த படம் ஒரு திருப்புமுனையை கொடுத்து உள்ளது.
யானை தந்த வெற்றியை தொடர்ந்து தற்போது இருவருக்கும் அதிக பட வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன. யானை படத்தை தொடர்ந்து அடுத்ததாக அருண் விஜய் நடித்துள்ள வெப்சீரிசான தமிழ் ராக்கர்ஸ் தொடரும் அதிக எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏவிஎம் நிறுவனம் தயாரித்துள்ள முதல் வெப் தொடரான இது ஆகஸ்ட் 19 ம் தேதி வெளியாக உள்ளது.
ஏவிஎம் நிறுவனத்திற்கு மட்டுமல்ல அருண் விஜய்க்கும் தமிழ் ராக்கர்ஸ் தான் முதல் வெப் சீரிசாகும். இதற்கு முன், சூர்யாவின் 2டி என்டர்டைன்மென்ட் தயாரித்த ஓ மை டாக் படத்தில் அருண்விஜய் தனது மகன் அர்னவ் விஜய் மற்றும் அப்பா விஜயக்குமாருடன் இணைந்து நடித்திருந்தார். இந்த படம் ஓடிடி.,யில் ரிலீசாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் 'யானை' திரைப்படத்தை இந்தியில் உருவாக்க முடிவு செய்தால் இந்த படத்தை ரோஹித் ஷெட்டி தான் இயக்க வேண்டும் என்று அருண் விஜய் சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்தார். இந்த படத்தை அவரை தவிர வேறு யார் இயக்கினாலும் நன்றாக இருக்காது என்றும் அவர் மிக அற்புதமான இயக்குனர் என்றும் தெரிவித்தார்.
மேலும் இந்த படத்தின் இந்தி ரீமேக்கில் நானே நடித்தால் எனக்கு ஜோடியாக ஷரதா கபூர் நடிக்க வேண்டும் என்று அவர் தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார். பாலிவுட்டின் ஹாட் ஹீரோயின் என அழைக்கப்படும் நடிகைகளில் ஷரதா கபூரும் ஒருவர் ஆவார்.
'யானை' படத்தில் அருண் விஜய் ஜோடியாக ப்ரியா பவானிசங்கர் நடித்திருந்தார். ஏற்கனவே அருண் விஜய் மற்றும் ஷரதா கபூர் ஆகிய இருவரும் பிரபாஸ் நடித்த 'சாஹோ' திரைப்படத்தில் இணைந்து நடித்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால் யானை இந்தி ரீமேக் வரவும், அதில் அருண்விஜயே ஹீரோவாக நடிக்கவும் அதிக வாய்ப்புள்ளதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். அருணு் விஜய் அடுத்ததாக யாருடைய படத்தில் நடிக்க போகிறார் என்பதை தெரிந்து கொள்ளவும் ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











