நித்தம் ஒரு வானம் ஷூட்டிங்கில் நடந்த அதிசயம்… அசோக் செல்வன் பகிர்ந்த சுவாரஸ்யம்…
சென்னை: அசோக் செல்வன் நடித்துள்ள 'நித்தம் ஒரு வானம்' திரைப்படம் நவம்பர் 4ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
அசோக் செல்வனுடன் ரிது வர்மா, அபர்ணா பாலமுரளி, ஷிவாத்மிகா நடித்துள்ள இந்தப் படத்தை ரா கார்த்திக் இயக்கியுள்ளார்.
இந்நிலையில், நித்தம் ஒரு வானம் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில், படப்பிடிப்பின் போது நடந்த சுவாரஸ்யமான நிகழ்வை அசோக் செல்வன் பகிர்ந்துள்ளார்.

நித்தம் ஒரு வானம்
அசோக் செல்வன் நடித்துள்ள 'நித்தம் ஒரு வானம்' படத்தை ரா கார்த்திக் இயக்கியுள்ளார். அசோக் செல்வனுடன் ரிது வர்மா, அபர்ணா பாலமுரளி, ஷிவாத்மிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்தை வயாகாம் 18, ரைஸ்ஈஸ்ட் என்டர்ட்டையின்மெண்ட் இணைந்து தயாரித்துள்ளது. இந்தப் படத்தின் டீசர் சில தினங்களுக்கு முன்னர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. 'நித்தம் ஒரு வானம்' நவம்பர் 4ம் தேதி ரிலீஸாகவுள்ள நிலையில், அதன் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில், அசோக் செல்வன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

ஃபீல் குட் மூவி
அப்போது நித்தம் ஒரு வானம் படம் குறித்து நடிகர் அசோக் செல்வன் பேசினார். "இந்தப் படம் என்னுடைய திரையுலக பயணத்தில் ஸ்பெஷலாக இருக்கும். இது ஒரு மோட்டிவேஷனல் கதையாகவும் ஃபீல் குட் மூவியாகவும் இருக்கும். இந்தப் படத்தில் சிறப்பாக நடிக்க வேண்டும் என்ற எண்ணத்தை கதை தான் ஏற்படுத்தியது. 'ஓ மை கடவுளே' ஏற்படுத்தியதை விடவும் இந்தப் படம் கூடுதலான தாக்கத்தை ஏற்படுத்தும். அதேபோல், நித்தம் ஒரு வானம் படப்பிடிப்பில் ஒட்டுமொத்த படக் குழுவினருக்கும் அதிசயமான அனுபவம் கிடைத்தது" என்றார்.

பனிப் பொழிவு
அந்த அதிசயமான அனுபவம் குறித்து பேசிய அசோக் செல்வன், "இமயமலையில் ரோதங் பாஸ் என்ற இடத்தில் அதிகமாக பனிப் பொழிவு காணப்படும். அங்கே ஷூட்டிங் நடத்த திட்டமிட்டு, நாங்கள் அனைவரும் அங்கு சென்ற பின்னர் தான், இது பனிப் பொழிவு சீசன் இல்லையென்று தெரியவந்தது. இதனால் ரொம்பவே ஏமாற்றம் அடைந்த நாங்கள், இவ்வளவு தூரம் வந்ததற்காக படப்பிடிப்பு நடத்த முடிவு செய்தோம். அந்த நேரம் வெயில் வெளுத்து வாங்கியது. ஆனால், எனக்கும் ரிது வர்மாவிற்குமான காட்சிகளைப் படமாக்கத் தொடங்கிய சில மணி நேரங்களிலேயே நாங்கள் எதிர்பார்த்த அளவுக்கு பனி பொழியத் தொடங்கியது" என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

அதிசயம் ஆனால் உண்மை
தொடர்ந்து இந்த சுவாரஸ்யம் குறித்து பேசிய அசோக் செல்வன், "நாங்கள் எங்களுக்குள் ஒருவரை ஒருவர் பார்த்து ஷாக்கிங் ஆகிவிட்டோம். அங்கிருந்த மக்களோ இந்த சீசனில் பனிப் பெய்து 18 ஆண்டுகளாகிவிட்டது என சொன்ன போது, நாங்கள் உண்மையாகவே ஆச்சரியப்பட்டுப் போனோம். அந்த அதிசய அனுபவத்தை உணர்ந்துகொண்டே படப்பிடிப்பை நடத்தினோம். சிலத் தருணங்களில் நாம் ஏதாவது ஒன்றை வேண்டும் என்று விரும்பினால், அதனை இந்த பிரபஞ்சம் நமக்கு கொடுத்துவிடும் என்பார்கள். அதனை நாங்கள் அந்த தருணத்தில் நிஜமாகவே உணர்ந்தோம்" என தெரிவித்தார். அசோக் செல்வன் பகிர்ந்த இந்த அனுபவம் அங்கிருந்தவர்களை பரசவத்தில் ஆழ்த்தியது. சில நேரங்களில் சில மனிதர்கள், மன்மதலீலை என வெரைட்டியாக படங்களில் நடித்து வரும் அசோக் செல்வனுக்கு, நித்தம் ஒரு வானம் படமும் அருமையான கம்பேக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











