அடிச்சும் பார்த்தாச்சு.. அதட்டியும் பார்த்தாச்சு... அசராத அசீம்... ராபர்ட் மாஸ்டருக்கு அறிவுரை வேற
சென்னை: பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது.
கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் சீரியல் நடிகர் அசீம் தொடர்ந்து ரசிகர்களிடம் வெறுப்பை சம்பாதித்து வருகிறார்.
எப்போதும் சக போட்டியாளர்களை தரக்குறைவாக பேசும் அசீம்க்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

சர்ச்சை நாயகன் அசீம்
பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கடந்த வாரம் அசீம், ஆயிஷா, விக்ரமன் மூவருக்கும் இடையில் சண்டை எழுந்தது. அப்போது விக்ரமன், ஆயிஷா ஆகியோரை ஒருமையில் பேசிய அசீம், ரொம்பவே தரக்குறைவான வார்த்தைகளாலும் வசை பாடினார். ஆனால், இறுதிவரை மரியாதையுடனும் கண்ணியமாகவும் பதிலளித்தார் விக்ரமன். இந்த சம்பவத்தால் அசீம்க்கு பிக் பாஸ் போட்டியாளர்கள் மட்டும் இல்லாமல், பார்வையாளர்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர். அதுமட்டும் இல்லாமல், போட்டியாளர்கள் அசீம்க்கு ரெட் கார்டு கொடுத்தனர்.

மன்னிப்புக் கேட்ட அசீம்
இதனையடுத்து இந்த சம்பவத்துக்கு அசீம் மன்னிப்பு கேட்டதோடு, இனி அப்படி நடந்துகொள்ள மாட்டேன் என விளக்கம் கொடுத்தார். ஆனால், அடுத்த வாரமே நானும் பொம்மை நீயும் பொம்மை டாஸ்க்கில் வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறியது. இந்த முறை தனலட்சுமி, ஷிவின் இருவரையும் டார்க்கெட் செய்த அசீம், ஷெரினாவை தள்ளிவிட்டது அவர்கள் தான் என குற்றம்சாட்டி கடுமையாக சண்டை போட்டார். இந்த சம்பவத்துக்கு நேற்றைய எபிசோடில் குறும்படம் போட்டு அசீமின் குற்றச்சாட்டு பொய் என நிரூபித்தார் கமல். அப்போதும் பெயரளவுக்கு எல்லோரிடம் மன்னிப்புக் கேட்ட அசீம், அவரது தவறை உணர்ந்ததாக தெரியவில்லை.

கண்டிப்பு போதாது
தொடர்ந்து சக போட்டியாளர்களை தரக்குறைவாக பேசுவதோடு, அவர்களை பாடி ஷேமிங் செய்து கடுப்பேற்றிய அசீமை கமல் கண்டித்தார். அப்போது அவர் அசீம் தனது மகனை நினைத்து பொது இடத்தில் நடந்துகொள்ள வேண்டாமா என குட்டு வைத்தார். உண்மையும் அதுவே, அசீம் தரக்குறைவாக சண்டை போட்டதை அவரது மகன் பார்த்திருந்தால், தந்தை மீது அவனுக்கு வெற்றுப்புணர்வு வந்துவிடாதா, இதையெல்லாம் யோசிக்க வேண்டாமா என்பதே இப்போது பலரின் கேள்வியும். ஆனால், இதையெல்லாம் அசீம் உணர்ந்து விளையாடுவாரா என்பதும் சந்தேகமே.

ராபர்ட் மாஸ்டருக்கு அட்வைஸ்
தொடர்ந்து இரண்டு வாரங்களாக அசீம் மீதான விமர்சனங்கள் அதிகரித்து வரும் நிலையில், அவர் ஒவ்வொரு முறையும் மன்னிப்புக் கேட்டு சமாளித்து வருகிறார். இந்தமுறை கமல் ரொம்பவே கண்டித்திருந்தாலும் அவர் இன்னும் யதார்த்தத்தை தெரிந்துகொள்ளவில்லை என்றே தெரிகிறது. அவரே மற்றவர்களை ஆட்டுவிக்கும் சாட்டையாக இருந்துகொண்டு, அமுதவாணன் சொல்வதையே ராபர்ட் மாஸ்டர் பேசுவதாக குற்றம்சாட்டுகிறார். அதற்கு என அசீமிடம் பேசினால் மரியாதை குறைவாக பேசிவிடுவாரோ என பயமாக இருக்கிறது என, ராபர்ட் மாஸ்டரும் நச்சென்று பதில் கொடுத்து அசீமின் வாயை அடைத்துவிட்டார். ஆக ஒவ்வொரு முறையும் மற்றவர்களை பழிவாங்கும் நோக்கில் செயல்படும் அசீம் மீது தொடர்ந்து ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











