For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  3 ஆண்டுகால உழைப்பில் உருவான பாகுபலி - ரசிகர்கள் காத்திருப்பு வீணாகவில்லை

  By Manjula
  |

  சென்னை: ஒரு சரித்திரப் படத்தை இயக்க வேண்டும் என்ற ராஜமௌலியின் ஆர்வமும், வெளிநாட்டுப் படங்கள் மாதிரி ஒரு நல்ல சரித்திரப் படங்கள் நம்ம நாட்டில் வெளியாகதா என்ற ரசிகர்களின் ஏக்கமும் சேர்ந்ததில் உருவாகி இருக்கும் படம் பாகுபலி.

  இன்றும் கூட சரித்திரத் தொடர்களுக்கு மக்களிடம் சற்றும் வரவேற்பு குறையவில்லை, சின்னத்திரைகளில் சரித்திரம் தொடர்பாக வரும் எல்லா தொடர்களுமே ஹிட்டடித்து ரசிகர்களின் ஆவலை வெளிப்படையாக சொல்லி விடுகின்றன.

  தொடர்களை மட்டுமே பார்த்து வந்த மக்களுக்கு பிரமாண்டமான ஒரு படம் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தால் விடுவார்களா? மக்களின் இந்த அபரிமிதமான ஆவல்தான் 3 ஆண்டுகள் படப்பிடிப்பில் இருந்த பாகுபலி திரைப்படத்தை வெளியான முதல் நாளே வெற்றிப் படமாக மாற்றியிருக்கிறது.

  இன்று வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் பாகுபலி, திரைப்படத்தின் பிரமாண்டத்தைப் பற்றி இங்கு பார்க்கலாம்.

  பாகுபலி - கதை இதுதான்

  பாகுபலி - கதை இதுதான்

  இரு சகோதரர்களுக்கு இடையே நடக்கும் போரில் பிரபாஸ்( பிரபாஸிற்கு இதில் 2 வேடங்கள்) உயிரிழந்து விடுகிறார், அவரின் மனைவி அனுஷ்கா சிறைப்பிடிக்கப் படுகிறார். இவர்களின் மகன் கைக்குழந்தையாக இருக்க, அந்தக் குழந்தையை காப்பாற்றும் நோக்கில் முதுகில் தைத்த அம்பையும் பொருட்படுத்தாமல் கையில் தூக்கிக் கொண்டு வருகிறார் ரம்யா கிருஷ்ணன்.

  இறக்கும் நிலையில் அந்தக் குழந்தையை பழங்குடி மக்களிடம் கொடுத்து சைகையிலேயே அவன் யாரென்று விளக்கி விட்டு இறந்து விடுகிறார். பழங்குடி மக்களிடம் வளரும் பிரபாஸ், கொள்கைக்காகப் போராடும்(கொள்கை என்னவென்று படத்தில் தெரிந்து கொள்ளுங்கள் ) தமன்னாவை சந்தித்து காதல் வயப்படுகிறார்.

  காதலி தமன்னாவின் கொள்கைக்காக அவருக்கு உதவும் பொருட்டு பிரபாஸ் நாட்டிற்குள் செல்கிறார், அங்கு பிரபாசை அனைவரும் கடவுளாகப் பார்க்கின்றனர். ஒருகட்டத்தில் உண்மைகள் அனைத்தும் பிரபாஸிற்கு தெரியவர, எதிரிகளைச் சமாளித்து அரியணையையும், தாயையும் காப்பாற்றினாரா? பிரபாஸ் என்பதைப் பிரமாண்டமான போர்க்களக் காட்சிகளுடன் கூறியிருக்கிறார் இயக்குநர் ராஜமௌலி.

  பாகுபலியின் உண்மையான ஹீரோ- எஸ்.எஸ்.ராஜமௌலி

  பாகுபலியின் உண்மையான ஹீரோ- எஸ்.எஸ்.ராஜமௌலி

  பாகுபலி திரைப்படத்தின் உண்மையான ஹீரோ யார் என்றால் இயக்குநர் ராஜமௌலியைத் தான் சொல்ல வேண்டும். படப்பிடிப்பில் 3 ஆண்டுகள் மற்றும் கதை உருவாக்கத்தில் சில ஆண்டுகள், என்று பல ஆண்டுகளை இந்தப் படத்திற்காக செலவு செய்து இருக்கிறார் ராஜமௌலி. எல்லாவற்றிற்கும் மேலாக அவர் மனக்கண்ணில் விரிந்த காட்சிகளை, ரசிகர்களிடம் கொண்டு சேர்த்ததில் உண்மையிலேயே ஒரு இயக்குனராக ஜெயித்திருக்கிறார் ராஜமௌலி.இந்தியாவின் பிரம்மாண்ட இயக்குநர் என்று ராஜமௌலியை இனி தாராளமாகச் சொல்லலாம்.

  போர்க்களக் காட்சிகள் கண்ணுக்கு விருந்து

  போர்க்களக் காட்சிகள் கண்ணுக்கு விருந்து

  படத்தின் கடைசி 45 நிமிடப் போர்க்காட்சிகள் தான் படத்தின் உச்சகட்டமாக விளங்குகின்றது, படம் முழுவதும் நன்றாக வந்திருக்கும் போர்க்காட்சிகளில் பலரின் உழைப்பு தெரிகின்றது. ராணா தனது தேர் முழுவதும் சுழலும் கத்திகளை வைத்துக் கொண்டு போருக்கு வருவது, ஒற்றைக்குதிரையில் பிரபாஸ் சண்டை போடுவது சான்சே இல்லை.

  பாகுபலியாக பிரபாஸ்

  பாகுபலியாக பிரபாஸ்

  பாகுபலி என்றால் தினவெடுத்த தோள்கள் என்று அர்த்தமாம், அதனை இந்தப் படத்தில் நியாயப் படுத்தி இருக்கிறார் பிரபாஸ்.பிரபாஸிற்கு இதில் 2 வேடங்கள், அனுஷ்காவின் கணவர் மற்றும் தமன்னாவின் காதலன் என இரட்டை வேடங்களில் அழகாக ஜொலித்திருக்கிறார். பிரபாஸின் 3 வருட உழைப்பு வீண்போகவில்லை. சிவலிங்கத்தை தனியொரு ஆளாகத் தூக்கிக் கொண்டு போய் மலையில் வைப்பது, தமன்னாவைக் காதலிப்பது மற்றும் போர்க்களக் காட்சிகள் எதிலும் குறை வைக்கவில்லை பிரபாஸ். பிரபாஸின் மூன்று வருட தவம் வீண் போகவில்லை.

  எதிரி மன்னன் ராணா

  எதிரி மன்னன் ராணா

  இயக்குநர் ராஜமௌலி இந்தக் கதையை முதலில் ராணாவிடம் சொல்லியபோது இப்போது தான் ஹீரோவாக நடிக்கத் தொடங்கி இருக்கிறேன், மறுபடியும் வில்லனா? என்று பயந்தாராம். முழுக்கதையையும் கேட்ட பின்னர் கண்டிப்பாக நடிக்கிறேன் என்று சொல்லி, இந்தப் படத்தில் நடித்துக் கொடுத்திருக்கிறார். பாகுபலி அளவுக்கு ராணாவுக்கு இன்னொரு படம் அமையுமா? என்பது சந்தேகம்தான்.

  பல்லாளத் தேவராக பாகுபலியில் நடித்திருக்கிறார் ராணா, காட்டெருமையுடன் அவர் மோதும் காட்சி மற்றும் அறிமுகக் காட்சிகள் எல்லாவற்றிலும் நல்ல நடிப்புத் திறமையைக் காட்டி இருக்கிறார் ராணா.

  சிறையில் வாடும் ராணியாக அனுஷ்கா

  சிறையில் வாடும் ராணியாக அனுஷ்கா

  ராணியாக மற்றும் சிறையில் வாடும் கைதியாக நடித்திருக்கும் அனுஷ்கா, வயதான தோற்றத்திலும் கம்பீரமாக மிளிர்கிறார். ஆனால் ஒருசில காட்சிகள் மட்டுமே அவரைப் பயன்படுத்தியிருக்கிறார் இயக்குநர் ராஜமௌலி, இரண்டாம் பாகத்தில் அனுஷ்காவின் முக்கியத்துவம் அதிகம் இருக்கும் என்று நம்பலாம்.

  போராளியாக தமன்னா

  போராளியாக தமன்னா

  தமன்னாவிற்கு நடிக்கவும் வரும் என்பதை அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறது இந்தப் படம், அனுஷ்காவை மீட்கப் போராடும் போராளியாக இந்தப் படத்தில் நடித்திருக்கிறார் தமன்னா. பிரபாஸிற்கும் தமன்னாவிற்கும் இடையிலான காதல் காட்சிகளில் நன்றாக நடித்திருக்கிறார் தமன்னா, இனிமேல் நடிக்க வாய்ப்பு உள்ள படங்கள் தமன்னாவைத் தேடி வரும் என்று நம்பலாம்.

  சகுனியாக நாசர்

  சகுனியாக நாசர்

  படத்தில் ராணாவின் அப்பாவாக நடித்திருக்கிறார் நாசர்.நாசரின் அலட்டிக் கொள்ளாத நடிப்பை மீண்டும் ஒருமுறை பார்த்து ரசிக்கலாம் இந்தப் படத்தில், அலட்டாத பார்வை மற்றும் நக்கலான சிரிப்பின் மூலம் படத்தில் ஸ்கோர் செய்திருக்கிறார் நாசர்.

  படைத்தலைவராக சத்யராஜ்

  படைத்தலைவராக சத்யராஜ்

  விக் வைத்து நடிக்க மாட்டேன் என்று கூறிய சத்யராஜ், தன் கொள்கைகளைத் தளர்த்திக் கொண்டு இந்தப் படத்தில் படைத்தலைவராக நடித்திருக்கிறார். படத்தின் இறுதியில் வருகிற போர்க்களக் காட்சிகள் சத்யராஜின் நடிப்புத் திறமைக்கு ஒரு சான்று.

  ராணியாக ரம்யா கிருஷ்ணன்

  ராணியாக ரம்யா கிருஷ்ணன்

  படையப்பா படத்தில் பார்த்த அதே கம்பீரத்துடன் இந்தப் படத்தில் ராணியாக நடித்திருக்கிறார் ரம்யா கிருஷ்ணன், வயசானாலும் உங்க அழகும் ஸ்டைலும் ரம்யா கிருஷ்ணனை விட்டுப் போகவில்லை எனபதற்கு இந்தப் படம் ஒரு சான்று.

  தூயவசனம் -மதன் கார்க்கி

  தூயவசனம் -மதன் கார்க்கி

  படத்தில் இடம்பெற்று பலரின் நெஞ்சங்களைக் கொள்ளை கொண்ட வசனங்களின் உபயம் மதன் கார்க்கி. படத்தில் போர்க்களக் காட்சிகள் இல்லாத சூழ்நிலையில், வார்த்தைகளால் போர் வரும் அதற்கு ஏற்றவாறு தனது பேனாவைப் பயன்படுத்தியிருக்கும் மதன் கார்க்கி வசனங்களை, அழுத்தமான வார்த்தைகளைக் கொண்டு நிரப்பியிருக்கிறார்.

  அழகான ஒளிப்பதிவுக்கு செந்தில்குமார்

  அழகான ஒளிப்பதிவுக்கு செந்தில்குமார்

  படத்தில் நடைபெறும் போர்க்களக் காட்சிகளைக் கண்முன்னே கொண்டுவந்து நிறுத்தியதில் பெரும்பங்கு ஒளிப்பதிவாளர் செந்தில்குமாருயுடையது. அருவிகளாகட்டும், மலைகளாகட்டும் கண்முன்னே கொண்டுவந்து விடுகிறார். பாகுபலியின் ஒளிப்பதிவு சூப்பர் என்று ரசிகர்களும் சொல்லும் அளவிற்கு படத்தில் சிறப்பாக அமைந்து இருக்கின்றது ஒளிப்பதிவு.

  பின்னணி இசைக்கு எம்.எம்.கீரவாணி

  பின்னணி இசைக்கு எம்.எம்.கீரவாணி

  கீரவாணியின் இசையில் படத்தின் பாடல்கள் நன்றாக அமைந்து இருக்கின்றன, ஆனால் சரித்திரப் படம் என்பதால் பாடல்கள் படத்தின் தடையாக அமைந்து இருப்பது போன்ற ஒரு உணர்வு ஏற்படுகிறது. பின்னணி இசையில் படத்தைத் தாங்கிப் பிடித்திருக்கிறது, கீரவாணியின் இசை.

  பாகுபலி - அடுத்த பாகம் எப்போ வரும்?

  English summary
  Director SS Rajmouli's "Baahubali" ((Bahubali - The Beginning), starring Prabhas, Rana Daggubati, Tamannaah Bhatia and Anushka Shetty.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X