»   »  பார்வையாளர்களை விரட்டும் திரைப்படங்கள் - ஒரு பழைய கதை

பார்வையாளர்களை விரட்டும் திரைப்படங்கள் - ஒரு பழைய கதை

Posted By:
Subscribe to Oneindia Tamil

- கவிஞர் மகுடேசுவரன்

இறைவி என்ற படத்திற்குப் பிறகு நான் தமிழ்ப் படங்களைப் பார்ப்பதற்குத் திரையரங்குக்குச் செல்வதை நிறுத்திவிட்டேன். இடையில் பாகுபலி இரண்டாம் பாகத்தை மட்டும் அரங்கில் சென்று பார்த்தேன். அது தெலுங்குப் படப்பிரிவில்தானே வரும் ? தமிழ்ப் படங்களை இவ்வாறு இடைநிறுத்திப் பார்ப்பதன் வழியாகத்தான் என்னைக் காட்சி ஊடகத்தின் பார்வையாளனாக நிலைநிறுத்திக் கொள்கிறேன். எப்போது நாம் காணும் திரைப்படம் மனத்தை ஈர்க்கவில்லையோ, அரைகுறையாய் நினைவிருக்கிறதோ அப்போது நம்மிடம் இயங்கும் பார்வையாளர் மனம் களைத்துப் போயிருக்கிறது என்று பொருள். அந்நேரத்தில் நாம் திரையரங்குகள் இருக்கும் திக்கத்திற்கே செல்லக்கூடாது. அப்படிக் கட்டுப்படுத்தினால்தான் நம்மிடமுள்ள சுவைஞர் எஞ்சுவார்.

Bad Movies which forced viewers out of Theaters

இறைவி என்ற திரைப்படத்தில் அதன் இயக்குநர் தமக்குக் கிடைத்த வாளை எதிர்ப்பட்ட எல்லார்மீதும் வீசும் பொறுப்பட்டவராகத் தென்பட்டார். ஒரு திரைப்பட வாய்ப்பில் அவ்வியக்குநர் தன்வெறிப்போக்கோடு செயல்பட்டதாகத் தோன்றியது. உங்களிடம் ஒரு வாள் தரப்பட்டவுடன் எதிர்ப்படும் வாழைகளை எல்லாம் வெட்டுவீர்களா ? அப்படித்தான் அந்தப் படத்தில் அவ்வியக்குநர் தமக்குக் கிடைத்த வாய்ப்பைக்கொண்டு எதிர்ப்பட்ட எல்லாக் கீழ்மைகளையும் படமாக்கித் தள்ளினார் என்று நினைக்கிறேன். ஓர் இயக்குநரின் தற்போக்கில் அவர் எண்ணியவற்றையெல்லாம் எடுத்துக் கோக்கப்படும் திரைப்படங்கள் நம் நாட்டைப்போன்ற எந்தக் கட்டுப்பாடுமற்ற மக்கள் திரளுக்கு எவ்விதத்திலும் ஒவ்வாதவை என்றே கருதுகிறேன். உள்ளதைச் சொல்கிறேன் என்று மலக்கழிப்பைப் படமாக்க முடியுமா ? திரைப்படங்களைப் பார்த்தே திரைப்படங்கள் எடுக்கும் எவரையும் நான் மதிப்பதிலை. அவ்வமயம் தமிழ்த் திரைப்படப் போக்கும் அத்தகையோரின் கரங்களில் இருந்தமையால் மிகவும் கடுமையாக என் முடிவை எடுத்தேன்.

தொண்ணூறுகளில் வெளியான பெரும்பாலான திரைப்படங்களை அவை வெளியான முதற்பத்து நாள்களுக்குள்ளாகவே திரையரங்கில் சென்று பார்த்தேன். என்னைப் பீடித்திருந்த திரைப்பட மயக்கத்திற்குச் செம்மையான தீனி கிடைத்த ஆண்டுகளாக அந்தப் பத்தாண்டுகளைச் சொல்வேன். அவ்வமயம்தான் தமிழ்த் திரைப்படங்கள் பல விதங்களில் சிறப்பாகவும் போட்டி போட்டுக்கொண்டும் வெளியாயின. அமைதிப்படை, தேவர்மகன், அரண்மனைக்கிளி, கேப்டன் பிரபாகரன், ஜென்டில்மேன், காதல்கோட்டை, துள்ளாத மனமும் துள்ளும் என அப்போது வெளியான திரைப்படங்களின் நிறம் மணம் குணம் சுவையே வேறு.

Bad Movies which forced viewers out of Theaters

எல்லாப் படங்களையும் பார்த்துவிடுவேன் என்றால் அவற்றில் விஜயகாந்த் நடித்து வெளியான படங்களும் அடக்கம். அப்படித் தொடர்ந்து பார்த்துக்கொண்டிருந்தபோது மூன்று திரைப்படங்கள் என்னைத் திசை திருப்பின. அவற்றில் ஒன்று 'சக்கரை தேவன்' என்னும் திரைப்படம். திரைப்படங்களின் அறிவிப்புகள் வெளியாகும் தினத்தந்தி நாளிதழை வைத்துக்கொண்டு என் சோட்டு நண்பர்களோடு அளவளாவுவோம். சின்ன கவுண்டர் திரைப்படத்திற்குப் பிறகு வெளியான விஜயகாந்தின் படங்கள் எல்லாம் நாயக வியத்தலையே கருப்பொருளாக்கி இருந்தன. அத்தகைய படங்களைப் பார்த்து நான் களைத்துப் போயிருந்தேன். இப்போது சக்கரை தேவன் என்ற படத்திற்கு அறிவிப்பு வந்திருக்கிறது.

படத்தின் தலைப்பைப் பார்த்ததும் எனக்கு அந்தப் படத்தின் கதையைத் தெளிவாக ஊகிக்க முடிந்தது. அவ்வாறு ஊகிக்க முடிந்தமைக்கு அதற்கு முன்னர் வெளியாகியிருந்த ஒரே வகையான கதையமைப்புப் படங்களே காரணம். சக்கரை தேவன் என்பது விஜயகாந்தின் பெயராக இருக்கும். படத்தில் அவர் சர்க்கரை காய்ச்சுபவராக வருவார். சிற்றூர்க்குள் சர்க்கரை காய்ச்சுவது என்பது வெல்லம் காய்ச்சுவதாகத்தான் இருக்கும். பூந்தியை உருண்டை பிடித்தால் இலட்டு என்பதைப்போல, கருப்பஞ்சர்க்கரையை உருண்டை பிடித்தால், ஊற்றி வார்த்து எடுத்தால் அது வெல்லம். அவ்வூரில் சக்கரை தேவனின் ஆலையில்தான் நன்கு வெல்லம் காய்ச்சப்படும். அதை வாங்குவதற்குச் சந்தையில் நீ முந்தி நான் முந்தி என்று மக்கள் அணிவகுத்து அடித்துப் பிடித்து நிற்பார்கள். சக்கரை தேவன் காய்ச்சுகின்ற வெல்லத்தைத்தான் எல்லாரும் விரும்புவார்கள். பிறருடைய வெல்ல மண்டியை ஒருவரும் எட்டிக்கூடப் பார்க்க மாட்டார்கள்.

Bad Movies which forced viewers out of Theaters

சக்கரை தேவன் காய்ச்சுகின்ற வெல்லத்தினால் பாதிப்புக்குள்ளாகுபவன் கெட்டவனாக இருப்பான். அவன் படம் முழுக்க சக்கரை தேவனுக்கு எதிராக எல்லாம் செய்வான். கெட்டவனுடைய மகளோ தங்கையோ சக்கரை தேவனையே விரும்புவாள். இப்படித்தான் படத்தின் கதை இருக்கும் என்று நண்பர்களோடு விளக்கிப் பேசிக்கொண்டிருந்தேன். சக்கரை தேவன் படமும் வெளியானது. வழக்கம்போல் அப்படத்திற்குச் சென்றமர்ந்தேன்.

திரைப்படம் தொடங்கியதும் எழுத்தோட்டம் முடிந்து முதற்காட்சி. என்னால் என்னையே நம்ப முடியவில்லை. நான் சொன்னதுபோலவே முதற்காட்சி அமைந்திருந்தது. சந்தையில் வரிசையாக வெல்லக் கடைகள் இருக்கின்றன. சந்தைக்குள் நுழையும் மக்கள் அந்தக் கடைகளைக் கண்டுகொள்ளாமல் ஒரேயொரு கடையில் மொய்க்கிறார்கள். அதுதான் சக்கரை தேவனின் கடை. அவருடைய வெல்லக்கட்டிகள் அனைத்தும் உடனே தீர்கின்றன. பிற கடைக்காரர்கள் "அவரு கடை வெல்லமெல்லாம் தீர்ந்த பிறகுதான் நம்மகிட்ட வராங்க... அப்படி என்னத்தத்தான் போட்டுக் காய்ச்சுவாரோ...!" என்று வியந்து பேசிக்கொள்கிறார்கள். அந்தப் படத்தின் கதை மொத்தமும் நான் விளையாட்டாய் நகைச்சுவையோடு பேசிக்கொண்டது போலவே இருந்தது. எனக்கு எப்படி இருந்திருக்கும்...! அன்றைக்குத் தீர்ந்தது என்னுடைய திரைப்பட மயக்கம்.

Bad Movies which forced viewers out of Theaters

இது வெறும் திட்டமிட்ட செயல்பாடு. ஒன்றைப்போலவே இன்னொன்றைச் சிந்திப்பது, அவ்வாறே போலச்செய்வது. இதைத் தொடர்ந்து பார்த்து மண்டைக்குள் இறக்கிக்கொள்வதால் ஆவது ஒன்றுமில்லை. எளிய களிகூறுகளை விரும்பும் பாமரர்களுக்கு வேண்டுமானால் இத்தகைய கதைகளில் பொழுது போகக்கூடும். நமக்கினி புதிதாய்ப் பெற்றுக்கொள்ள ஒன்றுமில்லை என்று தோன்றியது. இந்தத் தெளிவு வந்ததும் புதிய படங்களைப் பார்க்கும் ஆர்வம் தணிந்தது.

அடுத்து ஒரு படம் பார்த்தேன். தினமும் என்னைக் கவனி என்பது படப்பெயர். அந்தப் படத்தையும் சக்கரை தேவனைத் தயாரித்த இப்ராகிம் இராவுத்தர்தான் தயாரித்திருந்தார் என்று நினைவு. என்னால் அந்தப் படத்தில் உட்காரவே முடியவில்லை. வாழ்க்கையில் முதன்முறையாக ஒரு படத்திற்குச் சென்று பார்க்க முடியாமல் திரையரங்குக்கு வெளியே படிக்கட்டில் அமர்ந்திருந்துவிட்டு வந்தேன்.

Bad Movies which forced viewers out of Theaters

என்னைத் திரையரங்கை விட்டுத் துரத்திய மூன்றாவது படம் 'நினைத்தேன் வந்தாய்'. இவ்வளவு செயற்கையாகவா ஒரு படத்தை எடுத்து வைப்பார்கள் என்று தோன்றியது. இத்தனைக்கும் அப்படத்தின் பாடல்கள் நன்றாகத்தான் இருக்கும். தெலுங்கில் வெற்றி பெற்ற படமும்கூட. ஆனால், முழுப்படத்தையும் எவ்விதக் கூர்மையுமில்லாமல் எடுத்து வைத்திருந்தார்கள். "என்னவளே... என்னவளே எங்கிருந்தாய் நீதான்," என்ற பாடலில் ஆடிய குழுவினர் ஒத்திசைவேயின்றி தற்போக்கில் கையை காலை உதறினார்கள். கொடுமையாக இருக்கும். அதன்பிறகு நான் திரையரங்கின் பக்கமே செல்லவில்லை. அந்தப் பட்டறிவுகளே நல்ல இலக்கியக் கொள்முதலுக்கு வழிவகுத்தன. இப்போதுவரையிலும் என் நோன்பு தொடர்கிறது.

தவிர்க்க முடியாத படங்கள் என்றால்தான் அரங்குக்குச் செல்ல வேண்டும் என்று உறுதியாக இருக்கிறேன். என்னைப்போல் பாதிப்புற்றவர்களே மிகுதியாக இருந்திருக்க வேண்டும். அத்தகையவர்கள் தொலைக்காட்சிப் பக்கம் ஒதுங்கிவிட்டார்கள். அதனால்தான் தற்போதைய திரைப்படங்களைத் தொடர்ந்து பார்ப்பவர்களாக அகவையில் சிறியவர்களே எஞ்சியிருக்கிறார்கள். அவர்களைக் குறிவைத்தே எல்லாப் படங்களும் எடுக்கப்படுகின்றன. சிறியவர்களுக்காக சிறியவர்களால் சிறியவை குறித்து எடுக்கப்படும் படங்களாகவே பெரும்பான்மையான படங்கள் இருக்கின்றன. நாம் அரங்குக்குச் செல்வதும் செல்லாததும் நம் தேர்வாக அமைந்துவிட்டன.

English summary
Some movie are forcing the audience from theaters due to its worst content.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X