twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    படத்துக்குப் பெயர் வைப்பதில் யார் சிறந்தவர்கள்? - கவிஞர் மகுடேசுவரன்

    By Shankar
    |

    எந்தக் கலைப்படைப்பானாலும் சரி, அதற்குத் தலைப்பு வைப்பது பெரிய வேலை. தமிழ்க் கவிதை நூல்களில் ஒவ்வொரு கவிதைக்கும் தலைப்பு வைத்திருப்பார்கள். சங்கக் கவிதை நூல்களை எடுத்துப் பாருங்கள், அகநானூற்றையோ புறநானூற்றையோ எடுத்துப் பார்த்தால் அங்குள்ளவை தனித்தனிக் கவிதைகள்தாம். அவற்றுக்குத் தலைப்பு இடப்பட்டிருக்கவில்லை. ஆனால், பிற்காலக் கவிதைகளுக்குத் தலைப்புகள் வைக்கப்பட்டன. தலைப்பு கொடுத்து கவிதை எழுதச் சொல்லும் போக்கும் வளர்ந்தது. என் முதற்கவிதைத் தொகுப்புகளில் உள்ள கவிதைகளுக்குத் தலைப்பு வைத்தேன். பிறகு அவ்வழக்கத்தை விட்டுவிட்டேன். மொத்தம் இருபது சொற்களாலான ஒரு கவிதை நான்கு சொற்களில் தலைப்பு வைப்பானேன், மேலும் அது நம் தொல்வழக்கு இல்லை என்பது என் துணிபு. ஆனால், கவிதைகளைத் தொகுத்தால் அந்நூலுக்குப் பெயர் வைத்துத்தான் ஆகவேண்டும். சிறுகதைக்கோ நெடுங்கதைக்கோ தலைப்பு ஓர் அடையாளம். நாடகத்துக்கும் திரைப்படத்துக்கும் தலைப்பு கட்டாயம். கலைப்பொருளுக்குத் தலைப்பு வைப்பதும் ஒரு கலைதான். ஆக்கத்துக்கும் தலைப்புக்கும் இழையளவுகூட வேறுபடாதபடி பொருத்தமாய் வைக்க வேண்டும்.

    தொடக்கக் காலப் படங்கள் மேடை நாடகங்களின் பதிவாக்கங்களாகவே இருந்தன. அந்தந்த நாடகங்களுக்கு என்னென்ன பெயர்கள் வைக்கப்பட்டனவோ அப்பெயர்களே திரைப்படங்களுக்கும் வைக்கப்பட்டன. சம்பூர்ண இராமாயணம், கிருஷ்ண விஜயம், பக்த பிரகலாதா, காளிதாஸ், தசாவதாரம் என்று புராண நிகழ்வுகள் திரைப்படங்களாகையில் அதே பெயர்களைச் சூடி நின்றன. இவற்றுக்கிடையே தியாகராஜ பாகவதரின் படங்களுக்கு இடப்பட்ட பெயர்கள் அருமையாகத் திகழ்ந்தன. பவளக்கொடி, சிந்தாமணி, அம்பிகாபதி, ஹரிதாஸ், சிவகவி, புதுவாழ்வு என்று அவருடைய படப்பெயர்கள் கச்சிதமாகவும் பொருத்தமாகவும் அமைந்தன. அப்பெயர்களால் ஆகிய திரைப்படங்களை நாம் பார்த்ததில்லை என்றாலும் அவை தியாகராஜ பாகவதரின் படங்கள் என்ற நினைப்பைத் தோற்றுவிக்கத் தவறுவதில்லை.

    Best titlers in Tamil cinema

    பழங்காலப் படங்களுக்கு வடமொழிச் சொற்களாலான தலைப்புகள் இடப்பட்டன. சாரங்கதாரா, சுபத்ராபரிணயம், மாயாபஜார், லங்காதகனம் போன்ற வடமொழிப் பெயர்கள் மிக எளிதாகப் பயன்படுத்தப்பட்டன. தியாகபூமி என்ற சமூகத் திரைப்படத்திற்குக்கூட வடமொழிப் பெயர்தான். சென்ற நூற்றாண்டின் நடுப்பகுதி வரையிலும் திரைப்படங்களின் தலைப்புகள் கலவை மொழியில் மிகுந்திருந்தன. குலேபகாவலி என்றும் ஒரு படத்திற்குப் பெயர் வைக்கப்பட்டது. அதன் பொருள் என்னென்பது பலர்க்குத் தெரியாது. படத்தில் பகாவலி என்றொரு நாடு வரும். அங்கு மலரும் மலரின் பெயர்தான் குலே. அலிபாபாவும் நாற்பது திருடர்களும், பாக்தாத் திருடன் என்றெல்லாம் பெயர்வைத்து பாரசீகக் கதைகளைப் படமாக்கிக்கொண்டிருந்தார்கள்.

    திரைப்படங்களுக்கு அருமையான தலைப்புகளைச் சூட்டுவதில் முன்னணியில் நின்றவர்கள் நாயகர்களே. எம்.ஜி.ஆருக்கும் சிவாஜிக்கும் ஜெமினி கணேசனுக்கும் என்றும் நினைவை விட்டு நீங்காத தலைப்புகள் அமைந்தன. நாடோடி மன்னன் என்பது அருமையான முரண்தொடராகும். திருடாதே, தாய் சொல்லைத் தட்டாதே, நீதிக்குத் தலைவணங்கு என்று பெயர்வைக்கப்பட்டபோது எல்லாரும் ஏறிட்டுப் பார்த்திருப்பார்கள். பாசமலர், பாகப்பிரிவினை, திருவிளையாடல் என்று அமைந்த சிவாஜியின் படத்தலைப்புகள் படத்துக்கு நூறு விழுக்காட்டுப் பொருத்தங்களோடு அமைந்தன. தில்லானா மோகனாம்பாள் என்பது நாயகிக்குரிய தலைப்பு என்றாலும் அதில் நடிப்பதற்கு அவர் தயங்கவே இல்லை.

    தாய்மையை உயர்த்திச் சொல்லும் ஒரு தலைப்பு வேண்டும். தாயின் கருப்பையில்தானே குழந்தை பத்துத் திங்கள்களாகக் குடியிருந்தது ? அந்தப் பொருளில் 'குடியிருந்த கோயில்' என்று தம் படத்துக்குத் தலைப்பு வைக்கிறார் எம்.ஜி.ஆர். தமிழ்த்திரைப் படங்களுக்கு வைக்கப்பட்டதில் மிகச்சிறந்த ஒரேயொரு தலைப்பைச் சொல்லுங்கள் என்றால் நான் குடியிருந்த கோயிலைத்தான் சொல்வேன். இவ்வளவு பொருட்செறிவான தமிழ்த்தொடரை இன்று யாரேனும் தம் படங்களுக்கு வைக்கின்றார்கள் என்று சொல்ல முடியுமா ?

    எவ்வளவிற்கு ஓர் இயக்குநரோ நடிகரோ தம் படங்களில் வெற்றிக்கொடி நாட்டினரோ அவ்வளவிற்கு அருமையான படத்தலைப்புகள் அவர்களுக்கு அமைந்தன என்று உறுதியாகச் சொல்லலாம். பாலசந்தரின் தலைப்புகள் படத்துக்கு நெருக்கமான தொடர்புடைய பொருட்செறிவான தொடர்களாக இருக்கின்றன. மூன்று முடிச்சு, அவள் ஒரு தொடர்கதை, வறுமையின் நிறம் சிவப்பு, நினைத்தாலே இனிக்கும், புதுப்புது அர்த்தங்கள், அழகன் என்று அவர் வைத்த தலைப்புகள் அவர் படங்களைப்போலவே அருமையானவை. அச்சமில்லை அச்சமில்லை என்ற தலைப்பை வைத்துக்கொண்டு அப்போதைய ஆளுங்கட்சியினரைச் சாடுகின்ற படத்தை எடுத்தவர். பாலசந்தருக்கு அடுத்த இடம் பாக்யராஜுக்குத்தான். சுவரில்லாத சித்திரங்கள், ஒரு கை ஓசை, மௌன கீதங்கள், அந்த ஏழு நாட்கள், முந்தானை முடிச்சு, தாவணிக் கனவுகள் என்று அவர் வைத்த பெயர்கள் தனித்த வகையானவை. அதுவரை செந்தமிழ்த் தொடர்களாக இருந்த படப்பெயர்கள் பேச்சு வழக்குக்கு மாறின. அதைத் தொடங்கியவர் பாக்யராஜாக இருக்கலாம். பேச்சு வழக்கில் 'தூறல் நின்னு போச்சு' என்று ஒரு படத்துக்குப் பெயர் வைத்தார். பிறகு பேச்சு வழக்கில் கொச்சைத் தமிழில் பெயரிடுவதும் வழக்கமாயிற்று. 'எங்கள் ஊர்ப் பாட்டுக்காரன்' என்று வைக்காமல் 'எங்க ஊரு பாட்டுக்காரன்' என்று பெயர் வைத்தார்கள்.

    திரைப்படங்களுக்குத் தலைப்பு வைப்பதில் தனித்தன்மை, தமிழ்த்தன்மை, கதைத்தன்மை, காலப்புதுமை என எல்லாவற்றிலும் முதலிடம் பெறுபவர் இயக்குநர் ஸ்ரீதர்தான். அவருடைய படத்தலைப்புகள் தமிழ்ச்சுவை பயக்கும் புதுமையான சொற்றொடர்களாக இருப்பதைக் கவனிக்கலாம். அவருடைய முதல்படமான 'கல்யாணப் பரிசு' தொடங்கி பிற்காலப் படமான 'தந்துவிட்டேன் என்னை' வரைக்கும் அத்தன்மையை அவர் கைவிடவில்லை. இளமை ஊஞ்சலாடுகிறது என்னும் தலைப்பை அவரைத் தவிர வேறு யார் வைக்க முடியும்? நெஞ்சில் ஓர் ஆலயம், வெண்ணிற ஆடை, உரிமைக்குரல், அழகே உன்னை ஆராதிக்கிறேன், தென்றலே என்னைத் தொடு, அவளுக்கென்று ஒரு மனம் என அவர் வைத்த படத்தலைப்புகள் ஒரு கவிதைத் தொகுப்பின் தலைப்பினைப்போல் விளங்கின.

    பிற்கால இயக்குநர்களில் தலைப்பு வைப்பதில் கவனம் காட்டியவர் இயக்குநர் வசந்த். கேளடி கண்மணி, நீ பாதி நான் பாதி, ஆசை, நேருக்கு நேர் என்று அவருடைய தொடக்கக் காலப்படங்கள் நல்ல தலைப்புகளோடு இருந்தன. மணிரத்னத்தின் தலைப்புகளில் பிறமொழிக் கலப்பு மிகுதி. ஷங்கர் வைக்கும் பெயர்களில் உயிர்ப்பில்லாத செயற்கையை உணர்கிறேன். பாலுமகேந்திராவும் நல்ல தலைப்புகளைத் தேர்ந்தெடுத்தவர்தான். கௌதம் மேனன் தூய தமிழ்த்தொடர்களைத் தலைப்பாக வைத்தாலும் அது ஒரு பாவனையே என்று நம்புகிறேன். தென்மேற்குப் பருவக்காற்று, நீர்ப்பறவை, இடம் பொருள் ஏவல் என்று தலைப்பு வைத்த சீனு இராமசாமியும் பாராட்டுக்குரியவர்.

    English summary
    An analysis of best titles in Tamil cinema.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X