»   »  நடிகர் சங்கத் தலைமை பதவிகள்: பாரதிராஜா சொல்வதைக் கேளுங்க மக்களே!

நடிகர் சங்கத் தலைமை பதவிகள்: பாரதிராஜா சொல்வதைக் கேளுங்க மக்களே!

Posted By:
Subscribe to Oneindia Tamil

நடிகர் சங்கம் என்பதும் அதற்கான தேர்தல் என்பதும் தமிழகமோ அதன் பிரதிநிதித்துவமோ அல்ல. ஆனால் உணர்ச்சிவசப்பட்டு கண்டபடி உளறும் போக்கு தேர்ந்த கலைஞனிலிருந்து, கத்துக்குட்டி நடிகன் வரை தொடர்கிறது.

தேர்தலுக்கு இன்னும் ஒரே ஒரு நாள் இருக்கும் சூழலில் பாரதிராஜா அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கை:

Bharathiraja's statement on Nadigar Sangam election

தென்னிந்திய நடிகர் சங்கத்தில் நடக்கும் பிரச்சினைகள் நான்கு சுவற்றுக்குள் பேசித் தீர்க்கப்பட வேண்டியவை. ஆனால், அரசியல் கட்சிகள் போல ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டிக்கொண்டும், தூற்றிக்கொண்டும் இருக்க அவை நாள்தோறும் நாளேடுகளிலும், தொலைக்காட்சி மற்றும் இதர ஊடகங்களிலும் அவர்களைப் பற்றிய அவதூறான செய்திகள் வருவது மிகவும் வருத்தத்துக்குரிய ஒன்றாகும்.

நடிகர் சங்கத்தில் முதலில் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினை, படைப்பாளிகளின் நீண்ட நாள் கோரிக்கையான தென்னிந்திய திரைப்பட நடிகர்கள் சங்கத்தை, தமிழ்நாடு திரைப்பட நடிகர்கள் சங்கம் என பெயர் மாற்றச் சொல்லி தொடர்ந்து நாம் வலியுறுத்தி வருகிறோம்.

சரத்குமார் நடிகர் சங்கத் தலைவராக பொறுப்பேற்ற உடனே என் வேண்டுகோளுக்கிணங்க நடிகர் சங்க பொதுக்குழுவில் அனைத்து உறுப்பினர்களின் ஆதரவோடு ஒரு மனதாக தமிழ்நாடு திரைப்பட நடிகர்கள் சங்கம் என பெயர் மாற்றம் செய்ய தீர்மானம் கொண்டுவரப்பட்டது. மிக்க மகிழ்ச்சி அடைந்தோம்.

ஆனால், இன்று வரை அந்தத் தீர்மானம் எந்த காரணத்தினாலோ நடைமுறைக்கு வரவில்லை. மீண்டும் மீண்டும் வலியுறுத்தினோம். ஆனால், இன்று வரை நடிகர் சங்கத்தில் பொறுப்பில் உள்ளவர்கள் அதற்கு செவி சாய்க்கவில்லை. இதற்கு காரணம் சங்கப் பொறுப்பில் உள்ளவர்கள் பெரும்பாலும் பிறமொழியை சேர்ந்தவர்களாக இருப்பதினால்தானோ என சந்தேகிக்கத் தோன்றுகிறது.

தமிழக திரைப்பட வரலாற்றில், ஒரு காலகட்டத்திற்குப் பிறகு அண்டை மாநிலத்தைச் சார்ந்தவர்கள் சங்கத்தைப் பிரித்துக்கொண்டு, அவரவர் மாநிலத்திலேயே புதிய சங்கங்களை உருவாக்கிக் கொண்டார்கள். அதற்கு பிறகு தான் நமது படைப்பாளிகள் எல்லாம் ஒன்று கூடி தமிழ்நாடு இயக்குனர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் என பெயர் மாற்றப்பெற்று மகுடம் சூட்டப்பட்டது. ஆனால், இதுநாள் வரை தென்னிந்திய நடிகர்கள் சங்கம், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை மற்றும் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் ஆகிய அமைப்புகள் பெயர் மாற்றம் செய்ய மறுத்து வருகின்றன.

தமிழக அரசியல் மற்றும் திரைத்துறையிலும் தமிழர்கள் அல்லாதவர்களே ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். அதிகாரமிக்க பதவிகளுக்கு தமிழர்கள் அல்லாதவர்களையே ஆசனத்தில் அமரவைத்து அழகு பார்க்கிறார்கள். இதனால் தமிழர்களின் உரிமைகள் மறுக்கப்படுகின்றன. ஆனால், பிற மாநிலத்தில் தமிழன் ஒருவன் ஒரு வார்டு உறுப்பினராக பதவி வகிப்பதற்குக் கூட தகுதியற்றவனாகக் கருதப்படுகிறான்.

நடிகர்கள் சங்கம் மட்டுமில்லாமல், ஏனைய திரைப்பட சங்கங்களில் பிற மொழியினர் உறுப்பினராக இருப்பதில் தவறில்லை. ஆனால், தலைமைக்கும், நிர்வாக பதவிகளுக்கு தேர்ந்தெடுப்பதில் எனக்கு உடன்பாடில்லை.

இது வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு. உங்களை வரவேற்கிறோம், உபசரிக்கிறோம். ஒருவருக்கொருவர் சகோதரத்தோடு கலாச்சார வேறுபாடின்றி இருக்கிறோம். நீங்கள் தொழில் செய்யலாம். சமுதாய கடமையாற்றலாம். எந்த துறையாக இருந்தாலும் தலைமை பதவிகளுக்கு மட்டும் தமிழன் தான் வரவேண்டும். மண்ணின் மைந்தன் வரவேண்டும் என்கிற தார்மீகம் உங்களுக்குப் புரியாததல்ல.

ஆகையால், தென்னிந்திய திரைப்பட நடிகர்கள் சங்கப் பொறுப்பிற்கு போட்டியிடும் நடிகர்கள், தமிழ்நாடு திரைப்பட நடிகர்கள் சங்கம் எனப் பெயர் மாற்றம் செய்து தமிழர்களின் தன்மானத்தையும், உரிமையையும் காப்பாற்ற முன்வருமாறு வேண்டுகிறேன்.

நடிகர் சங்கத்தில் தமிழகத்தைச் சார்ந்த நாடக நடிகர்கள் மட்டுமே உறுப்பினர்களாக இருக்கும் பட்சத்தில், பின்பு ஏன் தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கம் என பெயர் உள்ளது?

தேர்தலில் வாக்களிக்க காத்திருக்கும் நடிகர்கள் மற்றும் நாடக நடிகர்கள் வாக்களிக்கும் முன் ஒரு முறை சுயமாக சிந்தித்து வாக்களியுங்கள்,''என்று பாரதிராஜா கூறியுள்ளார்.

English summary
Director Bharathiraja urged that only a Tamil actor must hold the top positions in Nadigar Sangam.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil