»   »  திரைத் துளி

திரைத் துளி

Posted By:
Subscribe to Oneindia Tamil

தமிழகத்திற்குக் காவிரியில் நீர் திறந்துவிடக் கூடாது என்று போராடிய கன்னட நடிகர்களுக்கு இயக்குனர்பாரதிராஜா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் தமிழ்படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் கன்னட நடிகர்கள்இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டது உப்புத் துரோம் என்றும் அவர் கூறினார்.

"என் இனிய தமிழ் மக்களே" என்ற தன்னுடைய வழக்கமான "டச்"சுடன் பாரதிராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கடந்த 73 ஆண்டுகளாகத் தீர்க்கப்படாமலேயே இழுத்தடிக்கப்படும் காவிரி நதிநீர் பிரச்சனை மூலம்ஆங்கிலேயர்கள் நம்மைப் பிரித்தாள நினைத்தார்கள். ஆனால் அவர்கள் தீர்வு காண முயற்சிக்கவில்லை என்பதில்ஒரு நியாயம் இருந்தது.

சுதந்திர இந்தியாவில் இப்பிரச்சனை மேலும் சிக்கலாக்கப்பட்டது. எதிர்ப்பு இயக்கங்களும், ஊர்வலங்களும்,தற்கொலைகளும் (தியாகம்?), அறிக்கைகளும் அமளிதுமளிப்படுத்துகின்றன.

இங்கிருந்து கர்நாடகம் போகும் பேருந்துகள் கொளுத்தப்படுகின்றன. தமிழகப் பதிவு எண் கொண்ட வாகனங்கள்தாக்கப்படுகின்றன.

தமிழ்க் கலைஞர்கள் கர்நாடகத்தில் நடத்தும் படப்பிடிப்புகளில் கலகம் நடக்கிறது என்றால், இரண்டும் அண்டைமாநிலங்களா அல்லது அண்டை நாடுகளா என்ற சந்தேகம் வருகிறது.

இனம், மொழி, தேசம் இவற்றையெல்லாம் கடந்து இருக்க வேண்டிய கலைஞர்கள், இத்தகைய பொதுப்பிரச்சனைகளில் பொறுப்பின்றி தலையிடுவதையும், இரட்டை வேடம் போடுவதையும் சகித்துக் கொள்ளவேமுடியாது.

அவர்கள் (கன்னட நடிகர்கள்) நடத்துவது போன்ற ஆர்ப்பாட்டங்களையும் ஊர்வலங்களையும் நடத்தத்தெரியாதவர்கள் தமிழ்த் திரையுலகில் இருக்கிறார்கள் என்றோ, தமிழர்களுக்குள் ஒற்றுமை இல்லையென்றோ,எல்லோரும் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்றோ யாரும் கற்பனையோ, கனவோ காண்பது தவறானது.

இரு மாநிலங்களிலும் வாழும் இரு இன மக்களின் நலன், பொது நன்மை ஆகியவற்றைக் கருதித் தான்பொறுமையுடன் இருக்கிறோமே தவிர, எல்லாவற்றையும் "சகித்துக் கொள்கிற" எருமை மாட்டுத்தனம் தமிழனுக்குஇல்லை.

கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்ட போது அவருடைய விடுதலைக்காக தமிழகமே பிரார்த்தனை செய்தது.ஆனால் தமிழகத்திற்குத் தண்ணீர் தரக்கூடாது என்கிற ஊர்வலத்திற்கு அவரே தலைமையேற்றார்.

சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு விளங்கும் நான்கு மாநிலங்களுக்கும் பொதுவானது என்றுசொல்லப்படுகிற (ஆனால் உண்மையில் ஏமாற்றுகிற) தென்னிந்திய திரைப்பட வர்த்தக சங்கத்தின் தலைவர் கே.சி.கவுடா இந்த நிகழ்வுக்குத் தலைமை வகித்துள்ளார்.

தமிழகத்தில் "பிழைக்கலாம், தொழில் செய்யலாம், சொத்து சேர்க்கலாம், பதவிகள் வகிக்கலாம், எப்படிவேண்டுமானாலும் காலத்தைக் கழிக்கலாம்", பின்னர் உடனே விமானமேறி பெங்களூர் போய் "தமிழகத்திற்குத்தண்ணீர் தராதே" என்று இயக்கமும் நடத்தலாம் என்பது நாகரீகமற்ற நன்றி கெட்ட செயலாகக் கருதப்படும்.

சம்பந்தப்பட்ட மாநில அரசுகளும், மத்திய அரசும், நீதிமன்றமும் ஏதாவது செய்து தொலைக்கட்டும். "உப்புத்துரோகம்" செய்கிறவர்கள் எந்த இனமாக இருந்தாலும் களையப்பட வேண்டிய விஷச் செடிகள்.

இனப்பற்று என்பது எல்லோருக்கும் தான் இருக்கிறது. தமிழர்கள் ஒற்றுமையாக இல்லை, உறங்கிக் கொண்டும்,சிதறுண்டும் கிடக்கிறார்கள் என்று நினைப்பவர்களின் கனவை எங்களால் எளிதாகக் கலைக்க முடியும்.

இங்கும் அங்குமாக இரட்டை வேடம் போடும் "உப்புத் துரோகிகளை"த்தான் முதலில் எச்சரிக்கிறோம்.

இந்த அறிக்கை இரட்டை வேடம் போடுபவர்களை எச்சரிப்பதற்காக மட்டுமல்ல. எந்த எதிர் வினையும் காட்டாமல்இருக்கும் (மெத்தனமாக இருப்பதாக மற்றவர்களால் கருதப்படுகிற) தமிழ்த் திரைப்படக் கலைஞர்கள் என்னசெய்யப் போகிறார்கள்?

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு என்ன கருத்து இருக்கிறது? ஆயிரக்கணக்கான தமிழ்த்திரைப்படத் தொழிலாளர்களுக்கு இதில் அக்கறை இருக்கிறதா?

தங்கள் நலன்களைப் புதிது புதிதாய் பெற இயலாது போனாலும், இருப்பதையும் தமிழன் இழக்காமல் இருக்கஎன்ன செய்யப் போகிறோம்?

நம்மை வாழ வைக்கும் தமிழர்களுக்கு நமது கைம்மாறு நன்றிக் கடன் என்ன?

சிந்தியுங்கள், ஏதாவது செய்யலாம், இணைந்து முன் வாருங்கள் என்று அவ்வறிக்கையில் பாரதிராஜா கூறியுள்ளார்.

நடிகர் சங்கமும் அதிரடி அறிக்கை:

பாரதிராஜாவின் இந்த அறிக்கைக்குப் பிறகு தான் தென்னிந்திய நடிகர் சங்கம் தன் வாயைத் திறந்துள்ளது. இன்றுஇந்தச் சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

காவிரி பிரச்சனை ஒன்றும் இரண்டு நாடுகளுக்கு இடைப்பட்ட பிரச்சனை அல்ல. இந்தியாவில் உள்ள அனைத்துநதிகளும் இந்தியர்களுக்கே சொந்தம். காவிரி நதியை தங்களுக்கு மட்டும் சொந்தம் என்று கூறிக் கொண்டுதமிழகத்திற்கு கர்நாடகம் நீர் திறந்துவிட மறுப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.

கர்நாடகத் தலைவர்கள் இதைத் தேவையில்லாமல் அரசியலாக்கிக் கொண்டிருக்கின்றனர். பேச்சுவார்த்தைமூலமாகத் தான் காவிரிப் பிரச்சனைக்குத் தீர்வு காண வேண்டும்.

தமிழகத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளின் நிலையையும் கர்நாடக விவசாயிகள் எண்ணிப்பார்க்க வேண்டும். எனவே தமிழகத்திற்கு நீர் திறந்துவிடப்படுவதை அவர்கள் தடுத்து நிறுத்தக் கூடாது.

தமிழக விவசாயிகளை அழைத்துக் கொண்டு நாங்களும் சென்னையில் பதிலுக்குப் பெரும் போராட்டம் நடத்தமுடியும். ஆனால் இந்தப் போராட்டத்தால் தேவையில்லாத பிரச்சனைகள் ஏற்பட்டு, அது வன்முறையில் நடந்துமுடியலாம் என்று கருதுவதால் தான் நாங்கள் அமைதியாகவே இருக்கிறோம்.

தமிழக விவசாயிகளின் கண்ணீரைத் துடைக்கும் விதமாக காவிரியில் தமிழகத்திற்கு கர்நாடக அரசு உடனடியாகதண்ணீரைத் திறந்துவிட வேண்டும் என்று அவ்வறிக்கையில் கூறியுள்ளார் விஜயகாந்த்.

நடிகர் சங்கத்தின் துணைத் தலைவர்களான எஸ்.எஸ். சந்திரன் மற்றும் நெப்போலியன், பொதுச் செயலாளர்சரத்குமார், பொருளாளர் கே.என். காளை உள்ளிட்ட பலரும் இந்த அறிக்கையைக் கூட்டாக வெளியிட்டுள்ளனர்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil