பிக் பாஸ் போட்டியாளர் விக்ரமனுக்கு குவியும் பாராட்டுகள்… எல்லாம் எதுக்குன்னு தெரியுமா?
சென்னை: பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி விஜய் டிவியில் தொடர்ந்து மூன்று வாரங்களாக ஒளிபரப்பாகி வருகிறது.
ஜிபி முத்து, சாந்தி, அசல் கோளாறு ஆகியோர் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய நிலையில், மற்ற போட்டியாளர்களிடையே கடும் போட்டி காணப்படுகிறது.
இந்நிலையில், பிக் பாஸ் வீட்டில் நடைபெற்ற போட்டியில் விக்ரமனின் செயலுக்கு ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

பிக் பாஸ் சீசன் 6
விஜய் டிவியின் டிஆர்பி கண்டெய்னரான பிக் பாஸ் நிகழ்ச்சி, கடந்த 3 வாரங்களாக நடைபெற்று வருகின்றது. ஜிபி முத்து, சாந்தி, அசல் கோளாறு ஆகியோர் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிவிட்ட நிலையில், மற்ற போட்டியாளர்கள் தங்களது திறமையை நிரூபிக்க போராடி வருகின்றனர். இந்நிலையில், பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு தினமும் பல போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த சீசனில் பத்திரிகையாளர், அரசியல்வாதி என பன்முகங்கள் கொண்ட விக்ரமனும் போட்டியாளராக பங்கேற்றுள்ளார்.

விக்ரமனின் நாடகம்
பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்களை இந்த டிவி, அந்த டிவி இரு அணிகளாக பிரிக்கப்பட்டு பல போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதில், விக்ரமன், அமுதவாணன், ரச்சிதா மூவரும் இணைந்து ஒரு நாடகம் நடத்தினர். அதில், மனித கழிவுகளை மனிதனே அகற்றுவதால் ஏற்படும் அவலங்களையும் உயிரிழப்புகளையும் மிக தத்ரூபமாக காட்சிப்படுத்தியிருந்தனர். மனித கழிவுகளை அகற்றி உயிரிழக்கும் நபராக விக்ரமன் நடித்திருந்தார். இதில், விக்ரமன், அமுதவாணன், ரச்சிதா ஆகியோரின் நடிப்பும், அவர்கள் எடுத்து வைத்த கருத்தியலும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. முக்கியமாக பிக் பாஸ் போட்டியாளர்களே கண்ணீர் சிந்தினர்.

நெட்டிசன்கள் பாராட்டு
விக்ரமனின் இந்த முன்னெடுப்பை பிக் பாஸ் ரசிகர்கள் வெகுவாக பாராட்டியுள்ளனர். "எல்லாவற்றையும் நொட்டம் சொல்லி, விலகி ஓடி, குறுங்குழுவாக உட்கார்ந்து தூய்மை வாதம் பேசுவது எளிது. வெகுமக்களை சென்றடையும் வடிவங்களில் முற்போக்கு குரல்கள் ஒலிக்க வேண்டியது அவசியம். Main stream மீடியாவில் முற்போக்கு சிந்தனையாளர்களின் இருப்பு இதனால் தான் அவசியமாகிறது" என ஒருவர் விக்ரமனுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். அதேபோல் மேலும் பலரும் விக்ரமனின் இந்த முயற்சிக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.

பெருகும் ஆதரவு
பிக் பாஸ் வீட்டில் ஆரம்பம் முதலே கவனிக்கப்படும் போட்டியாளராக விக்ரமன் செயல்பட்டு வருகின்றார். அசீமின் கோபத்தை கட்டுப்படுத்துவதிலும் போட்டியாளார்களின் வரம்பு மீறல்களை தட்டிக் கேட்கும் ஒருவராக விக்ரமன் இருப்பதாக, பிக் பாஸ் போட்டியாளர்களே பாராட்டி வருகின்றனர். ஆனாலும், சில நேரங்களில் அவரது நடவடிக்கைகள் விமர்சனத்துக்கு உள்ளாகின்றன. இந்நிலையில், கடந்த வாரம் மனித கழிவுகளை மனிதனே அகற்றுவது குறித்து கமல் வகுப்பு எடுத்திருந்த நிலையில், இந்த வாரம் விக்ரமன் அதை நாடகமாகவே நடித்துக் காட்டியது ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications











