தயவு செஞ்சு படிக்க மட்டும் வைங்க.. ஒட்டுமொத்த திருநங்கைகளின் குரலாய் ஒலித்த நமீதா மாரிமுத்து !
சென்னை: ஒவ்வொரு திருநங்கை வாழ்விலும் எந்தளவுக்கு சோகமும் துயரமும் இருக்கும் என்பதை உலகிற்கே பிக் பாஸ் ஷோ மூலம் உரக்க சொல்லி உள்ளார் நமிதா மாரிமுத்து.
சர்வதேச அளவில் அழகி பட்டங்களை வென்ற நமிதா மாரிமுத்துவின் உடல் முழுக்க இருக்கும் ரணங்களும் காயங்களும் அவரது ஒவ்வொரு சொல்லில் இருந்தும் உதிர்ந்து விழுகின்றன.
ஆணாக இருந்த ஒருவர் பெண்ணாக மாறும் போது பெற்றவர்களே ஏற்றுக் கொள்ள மறுக்கும் உண்மையையும் தனது பெற்றோர்களால் தான் பட்ட துயரத்தையும் கூறி ஒட்டுமொத்த ரசிகர்களையும் அழ வைத்துள்ளார் நமிதா மாரிமுத்து.

வரலாறு
பிக் பாஸ் தமிழ் வரலாற்றிலேயே முதல் முறையாக திருநங்கை போட்டியாளராக நமிதா மாரிமுத்து கலந்து கொண்டு கலக்கி வருகிறார். ஸ்பெயின் உள்ளிட்ட பல வெளிநாடுகளில் அழகி பட்டம் மற்றும் தூதுவர் உள்ளிட்ட பொறுப்புகளையும் பெற்றுள்ள நமிதா மாரிமுத்து இந்த சீசனின் ஆரம்பத்திலேயே ரசிகர்களின் மனங்களை கொள்ளையடித்து வின்னர் ஆகி உள்ளார்.

ஊசி போட்டு கொல்லப் பார்த்தாங்க
ஆண் வாரிசுன்னு ஆசையா வளர்த்த பெத்தவங்களுக்கு எனக்குள்ள இருக்குற பெண்மை வெளிப்பட்டதும் அடி அடின்னு அடிச்சு மரத்து போகுற அளவுக்கு அடிச்சாங்க. வீட்டில் இருந்து தப்பிச்சு போக நினைச்ச என்னை ஊசிப் போட்டு கொல்ல பார்த்தாங்கன்னு நினைச்சேன். ஏகப்பட்ட கஷ்டத்தை அனுபவிச்சேன் என அழுதபடியே நமிதா மாரிமுத்து சொல்ல சொல்ல போட்டியாளர்கள் கண்ணீர் கடலில் ஆழ்ந்தனர். ரசிகர்களும் நமிதாவின் கதையை கேட்டு அழ ஆரம்பித்து விட்டனர்.

அடியாட்களை வச்சி அடிச்சாங்க
வீட்டில் இருந்து தப்பிச்சு போனாலும் எப்படியாவது தேடி கண்டுபிடிச்சு அடியாட்களை வச்சி அடிச்சு மனநலம் பாதிக்கப்பட்டவள் என முத்திரையே குத்தி ஒரு இருட்டு அறையில் தள்ளிட்டாங்க. மூணு மாசம் அந்த இருட்டு ரூமிலேயெ இருந்தேன். ரொம்ப பயமா இருந்துச்சு என அவர் உடல் நடு நடுங்க கூற கூற ஒவ்வொரு போட்டியாளர்களாக ஹார்ட்டீன்களை அள்ளி வீச ஆரம்பித்தனர்.

செத்தோம்னு நினைச்சேன்
அந்த நரகத்தில் இருந்து பல முறை முயற்சி செய்து ஒரு வழியா தப்பிச்சு வெளியே வந்தேன். வெளியே வந்து என் ஃபிரண்ட் கிட்ட சொன்னேன். அவன் உடனே எங்க அப்பா அம்மாவ கூட்டிட்டு வந்துட்டான். அவ்ளோ தான் செத்தோம்னு நினைச்சேன். ஆனால், மறுபடியும் அந்த ஹோம்ல என்னை சேர்த்துக்க மறுத்துட்டாங்க அதனால், வீட்டில் 18 வயசு ஆகுற வரைக்கும் அமைதியா இருப்போம் என நினைத்து இருந்தேன் என்றார்.

பேன்ட்ட அவுத்து காட்டினேன்
அப்பா என்ன பத்தி கொஞ்சம் கொஞ்சமாக புரிஞ்சுக்க ஆரம்பிச்சார். நான் பெண்ணா மாறினாதான் நல்லது என நினைத்து யார் பேச்சையும் கேட்காமல் ஆப்பரேஷன் பண்ணிட்டு பெண்ணா மாறிட்டேன். எங்க அம்மா கிட்ட பேன்ட்ட அவுத்து காட்டினேன் அப்புறம் தான் அவங்க கொஞ்சம் கொஞ்சமா என் கிட்ட பேச ஆரம்பிச்சாங்க.. என கண்ணீர் மல்க நமிதா சொல்லும் போதே ஒவ்வொரு திருநங்கைகளின் வலியும் மக்களுக்கு நன்றாக புரிந்திருக்கும்.

நீங்க மாறுங்க
நான் என்னை பெண்ணாவே தான் உணருகிறேன். எந்தவொரு பெண்ணையும் நாங்க திருமணம் செய்து அவங்க வாழ்க்கையை கெடுக்கல.. நாங்க மாறிட்டோம்.. நீங்க மாறுங்க.. உங்க குழந்தைங்க LGBTயா மாறுனா அவங்களுக்கு முதல்ல நீங்க ஆதரவு கொடுங்க என அழுது கொண்டே நமிதா பேச பேச ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்து விட்டனர்.

பிச்சை, பாலியல் தொழில்
திருநங்கைகள் எல்லாம் பிச்சை எடுக்கிறாங்க, பாலியல் தொழில் பண்றாங்கன்னு சொல்றீங்களே அவங்க ஏன் அப்படி செய்றாங்கனா 13 வயசுக்கு மேல அவங்கள படிக்க வைக்க மாட்டாங்க.. வீட்டை விட்டு வெளியே வந்த அவர்கள் வயிற்று பசிக்காக என்ன செய்ய முடியுமோ அதைத் தான் செய்றாங்க என எதையும் ஒளிவு மறைவு இன்றி மொத்தமாக போட்டுடைத்து உயர்ந்து நின்றார் நமிதா.

படிக்க வைங்க
உங்க பசங்க யாரச்சும் இப்படி திருநங்கையாவோ திருநம்பியாகவோ உடல் ரீதியாக மாற்றம் வருதா? அவங்கள ஒதுக்காமல் அவங்களுக்கான கல்வியை மட்டும் கொடுங்க.. அவங்கள படிக்க வைங்க அது போதும் அவங்க வளர்ந்து ஒவ்வொரு துறையிலும் சாதிப்பாங்க.. இப்போ பல திருநங்கைகள் போலீஸாவோ, மருத்துவராகவோ, மாடலாகவோ மாறி இருக்காங்க.. இன்னமும் அவங்க ஒவ்வொரு துறையிலும் சாதிப்பாங்க என கடைசியா அவர் பாடிய பாட்டு மேலும், ரசிகர்களை அழ வைத்தது.

17 ஹார்ட்டீன்
நமிதா மாரிமுத்துவின் சோக கதையை கேட்ட மற்ற 17 போட்டியாளர்களும் ஹார்ட்டீன்களை அவருக்கு கொடுத்து திருநங்கை சமுதாயத்தில் இருந்து வந்து இப்படி உலகமே பார்க்கும் ஒரு நிகழ்ச்சியில் அவர்களின் பிரதிநிதியாக இருந்து அவர்களுக்கு படிப்பு மட்டும் தான் வேண்டும் வேற எதுவும் தேவையில்லை எல்லாத்தையும் அவங்களே பார்த்துப்பாங்கன்னு சொல்லி ஒட்டுமொத்த பாராட்டுக்களையும் அள்ளி உள்ளார் நமிதா மாரிமுத்து. ரசிகர்கள் இப்பவே இந்த சீசனுக்கான டைட்டிலை அவருக்கு கொடுத்துட்டாங்க.. விஜய் டிவி என்ன செய்யப் போகிறது என்பதை வெயிட் பண்ணி பார்ப்போம்.


Click it and Unblock the Notifications











