அதுக்குள்ள இறுதிப் போட்டியா... பிக்பாஸை கலாய்க்கும் ரசிகர்கள்
சென்னை : அதிகம் எதிர்பார்க்கப்பட்ட டிவி ஷோவான பிக்பாஸ் நிகழ்ச்சி அக்டோபர் 3 ம் தேதி பிரம்மாண்ட விழாவுடன் துவங்கியது. கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியில் 18 பேர் போட்டியாளர்களாக கலந்து கொண்டுள்ளனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் கிராண்ட் ஓப்பனிங் விழா, தொடர்ந்து 5 மணி நேர நிகழ்ச்சியாக விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட்டது. போட்டியாளர்களின் வெரைட்டி பெர்ஃபாமன்ஸ் ஏதும் பெரிதாக இல்லை என்றாலும், போட்டியாளர்கள் அறிமுக நிகழ்ச்சி பிரம்மாண்டமாக, ரசிகர்கள் விரும்பும் வகையில் நடத்தப்பட்டது.

முந்தைய சீசன்கள்
இதற்கு முன் நடத்தப்பட்ட நான்கு சீசன்களிலும் அனைவருக்கும் தெரிந்த சினிமா நடிகர், நடிகைகள், சின்னத்திரை பிரபலங்கள் அதிகமாக இருப்பார்கள். ஒரு சில போட்டியாளர்கள் மட்டும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு பிரபலமாவார்கள். தெரிந்த முகம், ஏற்கனவே அவர் யார் என்ற பின்புலம் ஓரளவிற்கு தெரியும் என்பதால் பிக்பாஸ் வீட்டில் அவர் எப்படி இருக்க போகிறார் என தெரிந்து கொள்ளும் ஆர்வம் அதிகம் இருக்கும்.

யாருடா இவரு
ஆனால் இந்த சீசனில் இமான் அண்ணாச்சி, விஜய் டிவி பிரியங்கா, சின்ன பொண்ணு போன்ற ஒரு சிலரை தவிர மற்ற அனைத்து போட்டியாளர்களும், "யாருடா இவரு ?" என கேட்கும் அளவிற்கு தான் உள்ளார்கள். அவர்களை பற்றி கூகுளில் தேடி, சோஷியல் மீடியாவில் அவர்கள் என்ன பெயரில் இருக்கிறார்கள் என தெரிந்து கொள்வதே பெரும்பாடாக உள்ளது. முதலில் பெயரை ஞாபகம் வைத்துக் கொள்ளவே முடியவில்லையே என புலம்புகிறார்கள் ரசிகர்கள்.

ஜாலியான முதல் நாள்
இருந்தாலும் பிக்பாஸ் நிகழ்ச்சி மீதான ஆர்வம் காரணமாக, புதிதாக வந்தவர்கள் என்ன தான் செய்கிறார்கள் என பார்க்கும் என்ற பாணியில் மக்கள் நிகழ்ச்சியை பார்க்க துவங்கி உள்ளனர். முதல் நாளான நேற்று கொஞ்சம் ஜாலியாகவே சென்றது. ஓகே பரவாயில்லை, பார்க்கலாம் என்ற எண்ணம் ரசிகர்கள் மத்தியில் உருவாகி உள்ளது.

கிராண்ட் ஃபினாலேவா
இந்நிலையில் பிக்பாஸ் தமிழ் சீசன் 5 கிராண்ட் ஃபினாலே நடைபெறும் தேதி பற்றிய தகவல் வெளியாகி உள்ளது. 2022 ம் ஆண்டு ஜனவரி மாதம் 16 ம் தேதி பிக்பாஸ் இறுதிப் போட்டி மிக பிரம்மாண்டமாக நடத்தப்பட உள்ளதாம். இந்த விழாவையும் தொடர்ந்து 5 மணி நேர நிகழ்ச்சியாக ஒளிபரப்ப விஜய் டிவி திட்டமிட்டுள்ளதாம். இந்த தகவலை கேட்டு பிக்பாஸ் ரசிகர்கள் அதிர்ச்சியும், மகிழ்ச்சியும் அடைந்துள்ளனர்.

இப்போ தான ஆரம்பிச்சீங்க
"இப்போ தானப்பா ஆரம்பிச்சீங்க. அதுகுள்ள இறுதிப் போட்டியா?", "இன்னும் நாங்க கிராண்ட் ஓப்பனிங் நிகழ்ச்சியையே ஹாட் ஸ்டாரில் முழுவதுமாக பார்த்து முடிக்கவில்லை. அதற்குள் கிராண்ட் ஃபினாலேவா?" என்பது போன்று பல விதங்களில் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

இப்படியா ஷாக் கொடுப்பீர்கள்
முதலில் போட்டியாளர்கள் பெயர்களை நாங்கள் பழகிக் கொள்கிறோம். அதை நினைவில் வைத்து, போட்டியாளர்கள் ஒவ்வொருவர் பற்றியும் ஒரு முடிவுக்கு வருகிறோம். அதற்கு பிறகு தானே யார் பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்க வேண்டும், வெளியேற வேண்டும் என ஓட்டு போட முடியும். அதற்குள் கிராண்ட் ஃபினாலே தேதியை வெளியிட்டு ஷாக் கொடுக்குறீர்களே என்பதே பெரும்பாலானவர்களின் கருத்தாக உள்ளது.


Click it and Unblock the Notifications











