Bison Review - பைசன் விமர்சனம்.. மாரி செல்வராஜும், துருவ் விக்ரமும் பாய்ந்தார்களா?.. பம்மினார்களா?

Rating:
3.0/5
Star Cast: Dhruv Vikram, Anupama
Director: Mari Selvaraj

சென்னை: மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்திருக்கும் பைசன் காளமாடன் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. மாரியின் இயக்கம் என்பதால் இப்படத்தின் மீது உச்சக்கட்ட எதிர்பார்ப்பு எழுந்திருந்தது. இந்நிலையில் பைசன் திரைப்படத்தின் விமர்சனத்தை இதில் பார்க்கலாம்.

தென் மாவட்டத்தில் கபடி கிறுக்கு பிடித்த ஒரு இளைஞர் தன்னை சுற்றி போடப்பட்டிருக்கும் வேலிகளை உடைத்துக்கொண்டு வேலியே போட முடியாத உயரத்துக்கு எப்படி சென்றார் என்பதை மாரி செல்வராஜ் தன்னுடைய பாணியில் கூறியிருக்கிறார். திரைப்படம் ஆரம்பிக்கும்போதே இது மணத்தி கணேசனின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்டாலும் அதில் தன்னுடைய புனைவும், தென் மாவட்ட இளைஞர்களின் வலியும், வாழ்வும் இருக்கிறது என்று Disclaimer போட்டு தொடங்குகிறார் மாரி செல்வராஜ்.

மாரியின் ஸ்டைலில் மாற்றம்: மாரி செல்வராஜ் தன்னுடைய முதல் படத்திலேயே தனக்கென்று தனி பாணியை உருவாக்கிக்கொண்டவர். அவரது பாணி ஒவ்வொரு படத்திலும் விமர்சிக்கவும்பட்டிருக்கிறது, கொண்டாடவும் பட்டிருக்கிறது. முக்கியமாக எதற்கும் யாருக்கும் அஞ்சாமல் சாதிய கொடுமைகளையும், சாதியை வைத்து நடக்கும் அரசியலையும் அப்பட்டமாக பேசிய அவர் இந்தப் படத்தில் கொஞ்சம் மாறுபட்ட கோணத்தில் பேசியிருக்கிறார். இரண்டு பேரின் பகை எப்படி ஊர் பகையாக மாறுகிறது, அதனால் எத்தனை பேர் பலியாகிறார்கள் என்பதை காட்சிப்படுத்திய விதத்தில் மாரி செல்வராஜ் அசால்ட்டாக ஸ்கோர் செய்கிறார்.

சொந்த சாதியிலேயே பிரச்னைதான்: அதிலும் சொந்த சாதிக்குள்ளேயே இருக்கும் முரண்கள், பகைகளை ராவாகவே காண்பித்திருப்பதை பாராட்டித்தான் ஆக வேண்டும். மேலும், தங்களுக்குள் தீராத பகை இருந்தாலும் புழுதி காட்டிலிருந்து ஒருவன் சாதிக்க புறப்படும்போது அவனுக்கு பாதை அமைத்துக்கொடுக்க வேண்டுமே தவிர அந்தப் பாதையை அடைக்கக்கூடாது என்பதை அமீர், லால் கதாபாத்திரங்களை வைத்து பொட்டில் அடித்து கூறியிருக்கிறார் இயக்குநர்.

வசனங்களும், குறியீடுகளும் கூர்மை: மாரியின் படங்களில் வசனங்களும், குறியீடுகளும் கூர்மையாக இருக்கும். பரியேறும் பெருமாள், மாமன்னனில் நாய், கர்ணனில் கழுதை, வாழையில் மாடு ஆகிய விலங்குகளில் குறியீடு வைத்த அவர் இந்த படத்தில் ஆட்டில் வைத்திருக்கிறார். ஆட்டை வைத்து அவர் வைத்த ஒவ்வொரு ஷாட்டும் பிரமிப்பாகவே இருக்கிறது. அதேபோல் வசனங்களிலும் அடித்து ஆடியிருக்கிறார்.

Bison Review in Tamil Mari Selvaraj and Dhruv Vikram have given a mediocre film together
Photo Credit:

இந்தியா - பாகிஸ்தான் விளையாடும் எந்த விளையாட்டாக இருந்தாலும் அதில் தீராத பகையை உருவாக்கி வைத்திருக்கும் அரசியல்வாதிகளுக்கு சம்மட்டி அடி கொடுக்கும் விதமாக'நாம இங்கே விளையாட வந்திருக்கிறோம். பகையை வளர்ப்பதற்கு இல்லை', 'ஊர்ல நீயும் நானும் அடிச்சிக்கிறது ஏன் என்று நமக்கு தெரியுமா? அதுபோல்தான் இதுவும்' என கபடி டீம் கேப்டன் தனது வீரர்களிடம் சொல்லும் வசனம் அவ்வளவு அற்புதம். குறிப்பாக சமீபத்தில் இரண்டு அணிகளும் விளையாடிய ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் வீரர்களுக்கு இந்திய வீரர்கள் கை கொடுக்காமல் சென்றதை பலரும் கொண்டாடிய நிலையில் இப்படி ஒரு வசனத்தை எழுதிய மாரி செல்வராஜுக்கு மகிழ்ச்சியோடு கை குலுக்கலாம்.

கேமராவும், இசையும் சூப்பர்: படத்தின் மிகப்பெரிய ப்ளஸ்களில் இசைக்கும் கேமராவுக்கும் முக்கிய இடம் உண்டு. நிவாஸ் கே. பிரசன்னா பின்னணி இசையிலும், பாடல்களிலும் புகுந்து விளையாடியிருக்கிறார். சந்தோஷ் நாராயணன் இல்லையே என்று பயந்தவர்களுக்கு நான் ஒன்றும் சளைத்தவன் இல்லை என இசையால் பதில் சொல்லியிருக்கிறார். அதேபோல் எழில் அரசுவின் கேமரா கதை நடக்கும் நிலத்துக்கு நம்மை அபப்டியே அழைத்து செல்கிறது.

துருவ் விக்ரமின் அசுர பாய்ச்சல்: இப்படி மாரி செல்வராஜும், அவரது டீமும் தங்கள் பங்குக்கு சம்பவங்கள் செய்திருக்க; துருவ் விக்ரம் அவர்களை எல்லாம் தூக்கி சாப்பிட்டிருக்கிறார். அவர் ப்ரோமோஷனில் சொன்னதுபோல் இதுதான் அவருக்கு முதல் படம். அர்ஜுனா விருது வென்ற கபடி வீரர் மணத்தி கணேசனிடம் பயிற்சி எடுத்தது நன்றாகவே அவருக்கு உதவியிருக்கிறது. உண்மையான கபடி வீரரின் உடல் மொழி, விளையாடும் முறை என அத்தனையையும் தனக்குள் கொண்டு வந்து அதகளம் செய்திருக்கிறார் துருவ்.

இரண்டு வருடங்களுக்கு வொர்த்துதான்: இந்தப் படத்துக்காக இரண்டு வருடங்கள் துருவ் விக்ரம் காத்திருந்தது வொர்த்துதன். ஒவ்வொரு சீனிலும் படத்தை அவர் தாங்கி பிடித்திருக்கிறார். எமோஷனல், ஆக்‌ஷன் என எந்த பாத்திரத்துக்கும் பொருந்தக்கூடிய நீராகவே தன்னை மாற்றியிருக்கிறார். கண்டிப்பாக இந்தப் படத்திலிருந்துதான் துருவ்வின் பயணம் தமிழ் சினிமாவில் தொடங்கியிருக்கிறது. வாழ்த்துகள் துருவ் விக்ரம். அதேபோல் பசுபதி, மதன், அனுபமா, ரஜிஷா ஆகிய நான்கு பேரும் அவ்வளவு அருமையாக நடித்திருக்கிறார்கள். முக்கியமாக பசுபதியையும், மதனையும் பாராட்டியே ஆக வேண்டும்.

படத்தில் என்ன மைனஸ்: படத்தில் மைனஸே இல்லையா என்றால் இருக்கத்தான் செய்கிறது. இந்தப் படத்தில் மாரி செல்வராஜ் கொஞ்சம் அடக்கி வாசித்திருக்கிறாரோ என்றே தோன்றுகிறது. இரண்டு பேரின் பகை எப்படி ஊர் பகையாக மாறியது என்பதை இன்னும் கொஞ்சம் டீட்டெயிலிங்கோடு காட்டியிருக்கலாம். அதேபோல் ஊருக்குள் நடக்கும் சாதிய கொடுமைகளை எப்போதும் ரத்தமும் சதையுமாக காட்டும் அவர் இந்தப் படத்தில் நடக்கும் கொலையை மட்டும்தான் அப்படி காட்டியிருக்கிறார். பழைய மாரி செல்வராஜ் இதில் மிஸ்ஸிங்தான். வன்முறை காட்சிகளும் அதீதமாகவே இருக்கின்றன.

மேலும் துருவ்வை சுற்றி உருவாகும் பகைகளுக்கு காட்டப்படும் காரணங்களை இன்னும் கொஞ்சம் வலுவாக வைத்திருக்கலாமோ என்று படம் பார்க்கும்போது தோன்றுகிறது. முக்கியமாக எமோஷனல் காட்சிகள் ஒன்றுகூட பெரிதாக கனெக்ட் ஆகவில்லை என்பது படத்துக்கு மிகப்பெரிய மைனஸாக இருக்கிறது. திரைக்கதையை பொறுத்தவரை முதல் பாதியும் சரி இரண்டாம் பாதியும் சரி தடுமாறவே செய்திருக்கிறது. படத்தின் நீளமும் ரொம்பவே சோதிக்கிறது. அதேபோல் படத்தில் பைசன் தலையை நீருக்குள் எறியும் காட்சி கர்ணனில் வாளை தூக்கி எறியும் காட்சியை நினைவுப்படுத்துகின்றன. இன்னும் சில காட்சிகள் பரியேறும் பெருமாள், கர்ணன் உள்ளிட்ட படங்களை நினைவுக்கு கொண்டு வருவதும் மைனஸ்.

அசுர பாய்ச்சல் இல்லை: தேசிய அணியில் ஒரு வீரர் இடம்பெறுவதற்கு பின்னால் இருக்கும் அரசியலை இன்னும் கொஞ்சம் ஆழமாகவும், ஓபனாகவும் பேசுவதில் மாரிக்கு என்ன தயக்கம் இருந்திருக்குமோ தெரியவில்லை. ஆகமொத்தம் பைசனில் துருவ் விக்ரம் அசுர பாய்ச்சல் செய்திருந்தாலும், மாரி செல்வராஜ் கொஞ்சம் அமைதி பாய்ச்சலையே செலுத்தியிருக்கிறார். எது எப்படியோ துருவ் விக்ரமுக்கு நல்ல தொடக்கத்தை கொடுத்ததற்காகவும், ஒருவன் முன்னேறுவதற்கு உள்ளூரில் இருக்கும் வேலிகள் மட்டுமின்றி ஊரை விட்டு வெளியே சென்றாலும் வேலிகள் இருக்கின்றன. அதை உடைப்பதற்கு ஓடிக்கொண்டே இருக்க வேண்டும் என்று கூறியிருக்கும் மாரிக்கு வாழ்த்துகள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X