Bison Saattai Durai Murugan Review: யாரை ஏமாற்றுகிறார் மாரி செல்வராஜ்.. பைசன் சாட்டை துரைமுருகன் விமர்சனம்!
சென்னை: இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படமான பைசன் படத்திற்கு ரசிகர்கள் தொடங்கி, விமர்சகர்கள் வரை அனைவரும் பாராட்டி வருகிறார்கள். இப்படி இருக்கும்போது, இந்த படம் எப்படி உள்ளது என்பது குறித்து சாட்டை துரைமுருகன் தனது விமர்சனத்தை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், " உண்மையான வரலாற்றை அருகில் இருந்து ரத்தமும் சதையுமாக இந்த படத்தை உருவாக்கி உள்ளார் மாரி செல்வராஜ். அதுவும் உண்மையாக நடந்த சம்பவங்களை ஒரு கபடி வீரனின் பார்வையில் கதையைச் சொல்லி உள்ளார். வெளிப்படையாக சொல்ல போனால் பசுபதி பாண்டியனுக்கும் வெங்கடேச பண்ணையாருக்கும் இடையில் நடைபெற்ற வாய்க்கால் தகராறு எப்படி இரண்டு சமூகங்களுக்கும் இடையிலான பிரச்னையாக மாறுகிறது என்பதை அப்பட்டமாக காட்டியுள்ளார். வெங்கடேச பண்ணையாரின் பெயர் கந்தசாமி பண்ணையார் என பெயர் மாற்றப்பட்டுள்ளது, இந்த கதாபாத்திரத்தை லால் நடித்துள்ளார். பசுபதி பாண்டியன் பெயர் பாண்டியராஜ் என்று மாற்றப்பட்டுள்ளது, இந்த கதாபாத்திரத்தை அமீர் நடித்துள்ளார்.

இவர்களுக்கு இடையிலான பிரச்னையில் இவர்கள் இருவருக்கும் சம்பந்தமில்லாத ஒரு இளைஞன் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவனின் வாழ்க்கையை எப்படி மாற்றி போடுகிறது என்பதுதான் படத்தின் கதை. கதாநாயகனை கபடி வீரராக அவரது வாத்தியார் மாற்றுகிறார். ஆனால் அவனை உள்ளூரில் அவனுடைய சொந்த சாதிக்காரனே உள்ளூர் அணியில் சேர்த்துக் கொள்ள மறுக்கிறார், உள்ளூர் கபடி அணியின் கேப்டன். அதன் பின்னர் அந்த வாத்தியாரின் முயற்சியால் மாவட்ட அளவிலான கபடி போட்டியில் கதாநாயகன் கலந்து கொள்கிறார். அவரை பெரிய அளவில் கபடி வீரனாக மாற்ற லால் ஆசைப்படுகிறார். ஆனால் துருவ்-வின் அப்பா பசுபதியோ உங்களது சாதிப் பகை எனது மகனின் வாழ்க்கையை பாதிக்கும் என்று மறுக்கிறார். அதன் பின்னர் லால் உத்தரவாதம் கொடுத்த பின்னர் பசுபதி ஒத்துக் கொள்கிறார்.
மொத்த சமூகத்தையும் நோக்கி கேள்வி: இந்த படத்தில் ஒட்டுமொத்தமாக ஒரு சமூகத்திற்கு எதிராக மாரி செல்வராஜ் பேசிவிட்டார் என்று யாராலும் சொல்ல முடியாது. மிகவும் சென்சிட்டிவான பிரச்னை இது, பசுபதி பாண்டியன், வெங்கடேச பண்ணையாருக்கு இடையிலான பிரச்னையை யூடியூப் தளத்தில் கூட பேச முடியாது. அவர்களுக்குள் பிரச்னை எங்கு தொடங்கியது என்று யாராலும் கூறவே முடியாது. இருபுறமும் தவறுகளும், அவரவர் தரப்பு நியாயங்களும் இருக்கும். அதை மிகச் சிறப்பாக கையாண்டுள்ளார், மாரி. இந்த கதாபாத்திரங்களின் மூலம் மொத்த சமூகத்தையும் கேள்வி கேட்டுள்ளார். யார் என்கவுண்டர் செய்யப்பட்டார்கள், யார் வீட்டிற்குள் இருக்கும் போது கொலை செய்யப்பட்டார்கள் என்று அனைவருக்கும் தெரியும். அதை அப்படியே காட்சி படுத்தி உள்ளார்.

அமீர் - லால்: பாரதி ராஜாவுக்கு பிறகு, மேக்கப் மேனையே அதிகம் பயன்படுத்தாத இயக்குநராக மாரி செல்வராஜ் தான் இருக்க முடியும் என்று நினைக்கிறேன். அமீர் தனது கதாபாத்திரமாகவே வாழ்ந்துள்ளார். அவரது கதாபாத்திரத்தின் வழியே கோபமும், வெறியும், சோகமும் வெளிப்பட்டுக் கொண்டே உள்ளது. அதேபோல் லால் பசுபதி பண்ணையார் கதாபாத்திரமாகவே வாழ்ந்துள்ளார். அவர் தரப்பு நியாயங்கள் உடனே படத்தில் காட்டப்பட்டுள்ளார்.
பாராட்டு: அனுபமா பரமேஸ்வரன், பசுபதி, துருவ் விக்ரம் என பலரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்கள். துருவ் இந்த படத்திற்காக பெரும் உழைப்பைக் கொட்டி தீர்த்துள்ளார். இந்த படத்திற்கு பின்னர் துருவின் திரைப்பயணம் வேறு மாதிரி இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்து வேண்டாம். ஒளிப்பதிவு, இசை என மொத்த படமும் அருமை. தமிழ் சமூகம் கொண்டாடி படிக்க வேண்டிய பாடம் இந்த காளமாடன் என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











