Blackmail X Review: ஜி.வி. பிரகாஷ், ஸ்ரீகாந்த் நடித்துள்ள பிளாக்மெயில் படம் எப்படி இருக்கு?.. தேறுமா?
சென்னை: இந்த வாரம் தமிழ் சினிமாவில் 10க்கும் மேற்பட்ட படங்கள் திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கின்றன. ஜி.வி. பிரகாஷ், தேஜு அஷ்வினி, ஸ்ரீகாந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ள பிளாக்மெயில் படத்தின் சிறப்புக் காட்சி திரையிடப்பட்ட நிலையில், அதன் ட்விட்டர் விமர்சனங்கள் வெளியாகி உள்ளன.
ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைப்பாளராக ஏகப்பட்ட வெற்றிப் படங்களை கொடுத்து வரும் நிலையில், ஹீரோவாக தொடர்ந்து சொதப்பி வருகிறார். ஆனாலும், முயற்சியை கை விடாமல் விடாமுயற்சியாக தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.

அவர் நடிப்பில் வெளியாகும் ஒரு சில படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன. அந்த வரிசையில் பிளாக்மெயில் திரைப்படம் இடம்பெறுமா என்பது குறித்த ட்விட்டர் விமர்சனத்தை இங்கே பார்க்கலாம் வாங்க..
ஜி.வி. பிரகாஷ் குமாரின் பிளாக்மெயில்: உதயநிதி ஸ்டாலினின் கண்ணை நம்பாதே, அருள்நிதியின் இரவுக்கு ஆயிரம் கண்கள் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் மு. மாறன் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் குமார், ஸ்ரீகாந்த், தேஜு அஸ்வினி, பிந்து மாதவி, ரமேஷ் திலக் உள்ளிட்ட பல பிரபல நடிகர்கள் நடித்துள்ள பிளாக்மெயில் திரைப்படம் செப்டம்பர் 12ம் தேதி திரைக்கு வருகிறது. கிரைம் த்ரில்லர் படமாக இந்த படம் உருவாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.
செம த்ரில்லர் படம்: வெறும் 2 மணி நேரத்தில் செம க்ரிப்பான ஒரு த்ரில்லர் படத்தை ஜி.வி. பிரகாஷ் இந்த முறை ரசிகர்களுக்கு கொடுக்க காத்திருக்கிறார். படத்தின் 10வது நிமிடத்தில் ஆரம்பிக்கும் டென்ஷன் படம் முடியும் வரை பரபரப்பாக ஏகப்பட்ட ட்விஸ்ட்டுகளுடன் ரசிகர்களை சீட் எட்ஜுக்கு கொண்டு வரும் வகையில் இயக்குநர் பக்காவாக இயக்கியிருக்கிறார். இந்த படத்துக்கு 5க்கு 3.5 ரேட்டிங் கொடுக்கலாம் என ஹரிசரண் என்பவர் தனது விமர்சனத்தை முன் வைத்துள்ளார்.
யூகிக்க முடியாத திரைக்கதை: "எதிர்பாராத காட்சி திருப்பங்களும் , யூகிக்க முடியாத திரைக்கதையால் புது விதமான அனுபவத்தை #blackmail திரைப்படம் கொடுக்கிறது. ஜி.வி. பிரகாஷ் குமார் மற்றும் தேஜு அஸ்வினி ஜோடிப் பொருத்தம் சிறப்பாக உள்ளது. பிந்து மாதவி, ரமேஷ் திலக் சிறப்பாக நடித்துள்ளனர். இயக்குநர் மு. மாறன் சிறப்பான பணியை செய்துள்ளார். படத்தின் இசையும் அருமையாக உள்ளது என சண்முகம் முத்துசாமி பதிவிட்டுள்ளார்.
குழந்தை கடத்தல்: குழந்தையை கடத்தி வைத்துக் கொண்டு பிளாக்மெயில் செய்வது தான் படத்தின் மையக் கதையாக உள்ளது. ஆனால், அதில் உள்ள ட்விஸ்ட் அண்ட் டர்ன்ஸ் தான் படத்தை சுவாரஸ்யமாக்குகிறது என ஸ்ரீதர் பிள்ளையும் தனது பாசிட்டிவான விமர்சனத்தை கொடுத்துள்ளார். போதை பொருள் வழக்கில் சிக்கிய பிறகு ஸ்ரீகாந்த் நடித்துள்ள படம் வெளியாகிறது. நேற்று குடும்பத்துடன் திருப்பதிக்கு சென்று சாமி தரிசனம் செய்து வந்தார் ஸ்ரீகாந்த் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே அவரது பெற்றோர்கள் திருப்பதியில் தான் வசித்து வருகின்றனர் என்பது கூடுதல் தகவல்.
ஜி.வி. பிரகாஷுக்கு வெற்றி கிடைக்குமா?: தொடர்ந்து ஜி.வி. பிரகாஷ் குமார் வித விதமான கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். ஆனால், அவருக்கு வெற்றிகரமான படமாக எதுவுமே அமையவில்லை. இந்த பிளாக்மெயில் திரைப்படம் நாளை 10க்கும் மேற்பட்ட படங்களுடன் மோதவுள்ள நிலையில், ஜி.வி. பிரகாஷுக்கு பாக்ஸ் ஆபீஸ் வெற்றி கிடைக்குமா என்பதை வெயிட் பண்ணி பார்ப்போம். அதர்வாவின் தணல், அர்ஜுன் தாஸின் பாம், ஏற்கனவே ஓடிக்கொண்டிருக்கும் மதராஸி உள்ளிட்ட படங்களுடன் பிளாக்மெயில் மோத காத்திருக்கிறது.


Click it and Unblock the Notifications











