சூர்யா – ஹரியிடம் வம்பிழுத்த ப்ளு சட்டை மாறன்… சிங்கம் 4 அப்டேட் வரும் முன்னே பஞ்சாயத்து!
சென்னை: சூர்யா - இயக்குநர் ஹரி கூட்டணியில் வெளியான 'சிங்கம்' படத்தின் முதல் பாகம் 2010ம் ஆண்டு வெளியானது.
அதனைத் தொடர்ந்து சூர்யா - ஹரி காம்போவில் சிங்கம் படத்தின் அடுத்த இரண்டு பாகங்களும் வெளியாகின.
இந்நிலையில், விரைவில் சிங்கம் படத்தின் 4ம் பாகம் உருவாகும் என தகவல் வெளியான நிலையில், அதுகுறித்த ப்ளு சட்டை மாறனின் டிவிட்டர் பதிவு வைரலாகி வருகிறது.

சூர்யா – ஹரி காம்போ
சூர்யாவுடன் ஹரி இணைந்த ஆறு, வேல், ஆகிய படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றன. அதனைத் தொடர்ந்து சூர்யா நடிப்பில் ஹரி இயக்கிய சிங்கம் திரைப்படம் 2010ம் ஆண்டு வெளியானது. சூர்யாவுடன் அனுஷ்கா, பிரகாஷ்ராஜ், விவேக், நாசர் உள்ளிட்ட பலர் நடித்திருந்த சிங்கம், ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்தது. 20 கோடி பட்ஜெட்டில் உருவான இந்தப் படம், பாக்ஸ் ஆபிஸில் சுமார் 90 கோடி வரை வசூலித்து மரண மாஸ் காட்டியது. சூர்யாவின் கேரியரில் சிங்கம் ஒரு மாஸ் ஹிட் படம் என ரசிகர்கள் கொண்டாடினர்.

சிங்கம் 4ம் பாகம்
சிங்கம் சூப்பர் ஹிட் அடித்ததால், அடுத்த பாகத்தை எடுக்க முடிவு செய்தார் ஹரி. அதன்படி, சூர்யா, அனுஷ்கா, ஹன்சிகா நடிப்பில் உருவான சிங்கம் 2, 2013ம் ஆண்டு வெளியானது. அதனைத் தொடர்ந்து சிங்கம் 3ம் பாகம் 2017ம் ஆண்டில் வெளியானது. சிங்கம் முதல் பாகம் அளவிற்கு அடுத்து வெளியான இரண்டு பாகங்களும் வெற்றி பெறவில்லை. முதல் பாகத்தில் சூர்யாவின் ஆக்சன் காட்சிகளும் திரைக்கதையின் வேகமும் அசுர வேகத்தில் இருந்தன. ஆனால், சிங்கம் இரண்டாவது, மூன்றாவது பாகங்களில் சூர்யா - ஹரி மேஜிக் மிஸ்ஸிங் என ரசிகர்கள் கூறியிருந்தனர்.

வம்பிழுக்கும் ப்ளு சட்டை மாறன்
ஆறு, வேல், சிங்கம் 3 பாகங்கள் என மொத்தம் 5 படங்களில் சூர்யா - ஹரி கூட்டணி மாஸ் காட்டியுள்ளது. இந்நிலையில், சிங்கம் படத்தின் 4ம் பாகம் விரைவில் உருவாகவுள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்கான கதையை ஹரி தயார் செய்துவருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், இதுகுறித்து ட்வீட் செய்துள்ள ப்ளு சட்டை மாறன், 2010ல் வெளியான சூர்யாவின் சிங்கம் திரைப்படம் தான் அவருக்கு ரியலான ஹிட் என்றும், அதன்பிற்கு அப்படியொரு ஹிட் படத்தை ஹரி கொடுக்கவில்லை எனவும் கூறியுள்ளார். மேலும், சிங்கம் 4ம் பாகம் உருவானால், சூர்யாவும் ஹரியும் 12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒரு தரமான வெற்றியை கொடுக்க முயற்சிக்க வேண்டும் என பதிவிட்டுள்ளார்.

கடுப்பான சூர்யாவின் ரசிகர்கள்
சிங்கம் 4ம் பாகம் குறித்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. அப்படி இருக்க சூர்யா, ஹரி இருவரிடமும் ப்ளு சட்டை மாறன் வம்பிழுத்துள்ளது ரசிகர்களை கோபம் அடைய செய்துள்ளது. சிங்கம் படத்துக்குப் பிறகு சூர்யா வேற ஹிட்டே கொடுக்கவில்லையா, ப்ளு சட்டை மாறன் மனசாட்சி இல்லாமல் இப்படி சொல்லலாமா என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். சில தினங்களுக்கு முன்னர் கார்த்தியின் சர்தார் படம் 100 கோடி ரூபாய் வசூலிக்கவில்லை, எல்லாம் பொய் என ட்வீட் செய்துவிட்டு உடனடியாக அதனை டெலிட் செய்தார் ப்ளு சட்டை மாறன். இப்போது சிங்கம் படத்திற்கு பிறகு சூர்யா ஹிட்டே கொடுக்கவில்லை என பஞ்சாயத்தை கூட்டி சோஷியல் மீடியாவை பற்ற வைத்துள்ளார். ப்ளு சட்டை மாறனின் இந்த டிவீட்டுக்கு சூர்யாவின் ரசிகர்களும் பதிலடி கொடுத்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











