சர்ச்சை பேச்சு.. வாய் இருந்தா பூமரைக் கூட கூப்பிடுவீங்களா? நடிகரை விளாசிவிட்ட பிரபலம்!
சென்னை: நடிகர் தாமு நடிகராக மட்டும் இல்லாமல், மாணவர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் பேச்சாளராகவும் அறியப்படுகிறார். இதனால் பல பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பேசுவதற்காக அழைக்கப்படுகிறார். இப்படி இருக்கும்போது இவர் மாணவர்கள் மத்தியில் இயக்குநர் பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான மைனா படத்தை மேற்கோள் காட்டி சொன்ன கருத்து சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இதனால் அவரை ப்ளூ சட்டை மாறன் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
நடிகர் தாமு, 1995ல் வெளியான வானமே எல்லை படத்தில் உதவியாளராக அறிமுகமானார். இதன் பிறகு பாட்ஷா, கண்ணுக்குள் நிலவு, பார்த்தேன் ரசித்தேன், துள்ளாத மனமும் துள்ளும் போன்ற படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து, ரஜினி, கமல், விஜய் உள்ளிட்ட பெரிய நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்தார். குறிப்பாக புன்னகை தேசம் படத்தில் வாயில் வாத்தியம் வாசிப்பது போன்ற காட்சிகள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த காட்சிகள் எல்லாம் 90'ஸ் கிட்ஸ்களுக்கு மிகவும் பிடித்த காட்சிகள் என்றே கூறலாம்.

சினிமாவைக் கடந்து, கடந்த 10 ஆண்டுகளாக கல்வித் துறையிலும் கவனம் செலுத்தி வருகிறார். அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் பேச்சுக்களை பேசுகிறார்.பெற்றோரின் தியாகங்கள், ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு குறித்து உருக்கமாக பேசுவதால் மாணவர்களுக்கு பரவலாகப் பேசப்படுகிறது. இதற்காக 2021ல் தேசிய கல்வி வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் 'ராஷ்டிரிய சிக்ஷா கவுரவ் புரஸ்கார்' விருதைப் பெற்றார். "சினிமா நடிகர்கள் உண்மையான ஹீரோக்கள் அல்ல, உங்கள் பெற்றோர் தான் உண்மையான ஹீரோக்கள்" என்று மாணவர்களிடம் அறிவுறுத்துவது அவரது பிரபலமான பேச்சுகளில் ஒன்று.
போதைக்கு எதிர்ப்பு: போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் தீவிரமாக ஈடுபட்டு, சினிமாவில் குடிப்பது, புகைப்பிடிப்பது போன்ற காட்சிகளைத் தவிர்க்குமாறு இயக்குநர்களிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறார். இளைஞர்கள் இவற்றை "கெத்து" என்று நினைத்து பாதிக்கப்படுவதை தடுக்க வேண்டும் என்றும் அவர் தனது உரைகளில் தொடர்ந்து கூறி வருகிறார்.

மாணவர்களிடையே சர்ச்சை பேச்சு: இப்படியான தாமு மாணவர்கள் மத்தியில் உரையாற்றும் போது, இயக்குநர் பிரபு சாலமனின் படமான மைனா படத்தை மேற்கோள் காட்டி பேசிய பேச்சு சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. அதாவது, " மைனா படத்தில் இருவரும் மிகவும் உயிருக்கு உயிராக காதலிப்பார்கள். ஆனால் அவர்கள் இருவரும் இறந்து விடுவார்கள். ஏனென்றால், அவர்கள் இருவரின் பெற்றோரும் மண்ணை வாரி வீசி சாபம் விட்டு இருப்பார்கள். பெற்றோர்கள் ஆசீர்வாதம் இல்லை என்றால் எவ்வளவு பெரிய லவ்வா இருந்தாலும் அவர்கள் வாழ்க்கை சரியாக அமையாது என்பதை பிரபு சாலமன் ரொம்பவும் அழகா காட்டியிருப்பார். இதைத்தான் மாணவர்களுக்கு நான் உதாரணமாக சொல்லுவேன்" என்று அவர் தெரிவித்தது பெரும் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.
ப்ளூ சட்டை மாறன் போஸ்ட்: இது தொடர்பாக ப்ளூ சட்டை மாறன் தனது எக்ஸ் பக்கத்தில் நடிகர் தாமுவை கடுமையாக சாடியுள்ளார். அதாவது, " மாணவர்களிடையே அவ்வப்போது பூமர்த்தனமாக பேசி வருபவர். சமூக வலைத்தளத்தின் ட்ரோல் ராடாரில் இதுவரை பெரிதாய் சிக்கவில்லை. சில பள்ளி, கல்லூரிகளில். மாணவர்களுக்கு தன்னம்பிக்கை தரும் பேச்சாளர்கள். எந்த தகுதியின் அடிப்படையில் அழைக்கப்படுகிறார்கள். வாய் மட்டும் இருப்பதாலேயே? " என்று பதிவிட்டுள்ளார். இவரது இந்த பதிவு சரியான பதிலடி என்று பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











