பட ரிலீசுக்கு மட்டும் தான் முதல்வர்களை பார்ப்பீங்களா...சர்ச்சையை கிளப்பிய ப்ளூ சட்டை மாறன்
சென்னை : பீஸ்ட் படம் ரிலீசாகிறது என்றதும் மட்டும் தமிழக, புதுவை முதல்வர்களை சந்திப்பீர்களா என தமிழக மக்கள் விஜய்யிடம் கேள்வி கேட்பதாக ப்ளூ சட்டை மாறன் போட்டுள்ள ட்வீட் சர்ச்சையை கிளப்பி உள்ளது.
விஜய் நடித்த பீஸ்ட் படம் ஏப்ரல் 13 ம் தேதி ரிலீசாக உள்ளது. இந்த சமயத்தில் விஜய், சமீபத்தில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை சந்தித்தார். இந்த போட்டோக்களை வைத்தே பீஸ்ட் படத்திற்கு போஸ்டர் தயாரித்து ஒட்டி உள்ளனர் புதுச்சேரி விஜய் ரசிகர்கள்.

முதல்வர்களை சந்தித்த விஜய்
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை மட்டுமல்ல, இரண்டு நாட்களுக்கு முன் சென்னையில் திருமண விழா ஒன்றிற்கு சென்ற போது அங்கு வந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினையும் சந்தித்து பேசி உள்ளார் விஜய். முதல்வர் - விஜய் சந்தித்த போட்டோக்கள் இணையத்தில் பரவி, செம டிரெண்ட் ஆனது. இது தற்செயலாக நடந்த சந்திப்பு என கூறப்பட்டது.

பீஸ்ட் டிக்கெட் கட்டணம் உயர்வு
இந்நிலையில் இன்று, முதல்வர்கள் உடனான விஜய்யின் சந்திப்பை குறிப்பிட்டு ப்ளூ சட்டை மாறன் போட்டுள்ள ட்வீட் பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது. பீஸ்ட் படத்திற்கான டிக்கெட் விலையை 3 மடங்கு வரை உயர்த்த புதுச்சேரி அரசு முடிவு செய்திருப்பதாகவும், திரையரங்க உரிமையாளர்களின் கோரிக்கையை ஏற்று கட்டண உயர்வுக்கு புதுச்சேரி அரசு அனுமதி அளித்துள்ளதாக வெளியான பத்திரிக்கை செய்தியை குறிப்பிட்டு, சமீபத்தில் புதுவை முதல்வரை விஜய் சந்தித்தது இதற்கு தானா? என சினிமா ரசிகர்கள் கேள்வி எழுப்புவதாக ட்வீட் போட்டுள்ளார்.

ரிலீசுக்கு மட்டும் பாப்பீங்களா
மற்றொரு ட்வீட்டில், தலைவா, மாஸ்டர், பீஸ்ட் என தனது பட ரிலீஸ் சமயத்தில் மட்டும் 100 சதவீத அனுமதி, டிக்கெட் உயர்வு, சிறப்புக்காட்சி அனுமதி கேட்டு தமிழக, புதுவை முதல்வரை சந்திக்கிறாரா விஜய்? இதே போல ரிலீஸ் சமயம் அல்லாத நாட்களில் மக்கள் நலனுக்காக அடிக்கடி முதல்வர்களை சந்திப்பாரா ? - தமிழக மக்கள் கேள்வி என பதிவிட்டுள்ளார்.

அவர் ஏன் போய் பார்க்கனும்
இதற்காக ப்ளூ சட்டை மாறனை விஜய் ரசிகர்கள் வச்சு செய்து வருகின்றனர். அவர் என்ன அரசியல்வாதியா இல்ல எம்.பி., எம்எல்ஏ.,வா மக்கள் பிரச்சனைக்காக முதல்வரை சந்திக்க. இவரு நடிகர். அதனால் அதற்கான வேலையை தான் பார்க்குறாரு. அண்ணாத்த ரிலீஸ் சமயத்துல ரஜினி, வலிமை ரிலீஸ் சமயத்துல அஜித், இப்போ பீஸ்ட் ரிலீசாக போறதால விஜய்யை விமர்சித்து பேரு வாங்க வந்துட்டாரு போல. விஜய் புதுவை சென்றாரா இல்லை புதுவை முதல்வர் விஜய்யின் இல்லத்திற்கு வந்தாரா? உண்மையை தெரிந்துக்கொண்டு கருத்து பேசு என கண்டபடி விளாசி தள்ளி வருகின்றனர்.

நாங்க ஆதரிக்க மாட்டோம்
மக்கள் பிரச்சனைக்காக விஜய் தான் பேசனும்ன்னா இவ்ளோ கோடி செலவு பண்ணி தேர்தலில் ஜெயித்த எம்பி, எம்எல்ஏ, கவுன்சிலர் லாம் எதுக்கு இருக்காங்க. அவர் நடிக்கிற படம்ன்னா அவர் தான் போய் பேசணும். அவரை நம்பி பணம் போட்டவங்களுக்கு அவர் செய்யும் வேலை. நீ விஜய்யை எதிர்த்து போடுற ட்வீட்டை ரஜினி, அஜித் ரசிகர்கள் ஆதரிப்போம்ன்னு மட்டும் நினைக்காத என கழுவி ஊற்றி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











