"ப்ளூ வேல் கேமைவிட ஒரு மோசமான.." - ஜீவா நடிக்கும் 'கீ' ட்ரெய்லர்!
சென்னை : அறிமுக இயக்குநர் காலீஸ் இயக்கத்தில் ஜீவா, நிக்கி கல்ராணி, நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் 'கீ'. இயக்குநர் காலீஸ் செல்வராகவனிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். இப்படத்தில் இன்னொரு கதாநாயகியாக 'காவியத்தலைவன்' படத்தில் நடித்த அனைகா சோடி நடிக்கிறார்.
மேலும், நகைச்சுவை கதாபாத்திரத்தில் ஆர்.ஜே.பாலாஜி நடிக்கிறார். வில்லனாக மலையாள நடிகர் பத்மசூர்யா நடிக்கிறார். மேலும், ராஜேந்திர பிரசாத், சுஹாசினி, மனோபாலா, மீரா கிருஷ்ணன் ஆகியோரும் நடிக்கின்றனர். படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார்.

குளோபல் இன்போடெய்ன்மென்ட் நிறுவனம் மூலம் இப்படத்தை மைக்கேல் ராயப்பன் தயாரிக்கிறார். இது இந்நிறுவனம் தயாரிக்கும் 10-வது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. 'கீ' படத்தின் ட்ரெய்லர் வெளியாகி இருக்கிறது.
'கீ' படத்தில் ஜீவா ஹேக்கராக நடிக்கிறார். தொழில்நுட்பத்தால் ஏற்படும் சிக்கல்களை பேசும் படமாக உருவாகியிருக்கிறது 'கீ'. சில மாதங்களுக்கு முன்பு அனைவராலும் பேசப்பட்ட கொடூரமான விளைவுகளை ஏற்படுத்திய 'ப்ளூ வேல்' எனும் விளையாட்டினைப் போல இந்தப் படத்திலும் மனிதர்களை அடிமையாக்கும் விளையாட்டு மையப்படுத்தப்பட்டிருக்கிறது.
'கீ' படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. படம் விரைவில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











