பைசன் படத்துக்கு பாராட்டு.. துருவ் விக்ரமுக்கு சூப்பர் சர்ட்டிஃபிக்கேட்.. பாலிவுட் இயக்குநர் வாழ்த்து
சென்னை: மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்த பைசன் திரைப்படம் தமிழ்நாட்டில் பெரும்பாலானவர்களிடம் வரவேற்பை பெற்றது. வசூல் ரீதியாகவும் சக்கைப்போடு போட்ட அந்தப் படம் தமிழ் சினிமாவின் முக்கியமான படங்களில் ஒன்றாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் ஸ்கேம் 1992 உள்ளிட்ட வெப் சீரிஸ்களை இயக்கிய ஹன்சல் மேத்தா பைசன் படத்தை பாராட்டியிருக்கிறார்.
துருவ் விக்ரமுக்கு திரைத்துறையில் பெரிய திருப்புமுனை தேவைப்பட்டது. அப்படிப்பட்ட சூழலில் மாரி செல்வராஜிடம் தன்னை ஒப்படைத்தார் அவர். அர்ஜுனா விருது வென்ற கபடி வீரர் மணத்தி கணேசனின் வாழ்க்கை வரலாறை அடிப்படையாக வைத்து இந்தப் படத்தை இயக்கியிருந்தார் மாரி. அதோடு சமத்துவத்தோடு வாழ வேண்டும் என்பதையும் ஆணித்தரமாக கூறியிருந்தார். படத்துக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்,ரஜினிகாந்த், மணிரத்னம், லிங்குசாமி, வசந்தபாலன் என பலரும் தங்களது பாராட்டை தெரிவித்தார்கள்.
ஹிந்தி இயக்குநர் பாராட்டு: தற்போது பாலிவுட் இயக்குநர் ஹன்சல் மேத்தாவும் பாராட்டு தெரிவித்திருக்கிறார். படம் குறித்து அவர் பேசுகையில், "சாதி, அடையாளம், வன்முறை, பழிவாங்கல், வெறுப்பு, பாரபட்சம், அடிமைத்தனம், சுதந்திரம் ஆகியவைகள் வேரூன்றிய மோதல்களை ஆராய்வதற்கு அனைத்து முரண்பாடுகளுக்கும் எதிரான மன உறுதியை கொண்ட ஒரு சிறந்த படத்தை மாரி செல்வராஜ் உருவாக்கியிருக்கிறார்.

அதெல்லாம் மிகைப்படுத்தவில்லை: படத்தின் கதைய விட்டு விலாகத ஒளிப்பதிவின்மூலம் கபடி, ஆக்ஷன் காட்சிகள் நுட்பமாக உருவாக்கப்பட்டிருக்கின்றன. மாரி செல்வராஜ் நேர்மையுடன் தனது கதையில் குறியீடுகளை பயன்படுத்தி உணர்ச்சிகளை ரசிகர்களுக்கு கடத்தியிருக்கிறார். வன்முறை காட்சிகள் அதிகம் இருக்கின்றனதான். ஆனால் அது எதுவும் மிகைப்படுத்தப்படவில்லை. அது இயல்பாகவே இருக்கிறது.
கிளர்ச்சியூட்டும் இசை: அதேபோல் படத்தின் இசை கிளர்ச்சியூட்டும் விதமாக இருக்கிறது. உணர்ச்சிப்பூர்வமாக இருக்கிறது. உள்ளூர் கபடி காட்சிகளும், அவற்றுக்கு பயன்படுத்தப்பட்ட இசையும் புத்திசாலித்தனமாக கையாளப்பட்டிருந்தன. துருவ் விக்ரம் மிகப்பெரிய திறமைசாலி. உடல்ரீதியாக மட்டுமின்றி ஏற்றுக்கொண்ட கதாபாத்திரத்தின் வலி, கோபம், பலவீனம் என அனைத்தையும் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
வயதுக்கு மீறி சாத்தியப்படுத்தியுள்ளார்: அவர் வயது மீறி அதனை எல்லாம் சாத்தியபப்டுத்தியிருக்கிறார். அவர் மட்டுமின்றி படம் முழுவதும் சிறந்த நடிகர்களை நான் பார்த்தேன். அதில் நிறைய பேரை எனக்கு தெரியாது. இந்த அற்புதமான அனுபவத்தை கொடுத்தமைக்காக அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட், சமீர் நாயர், பா.இரஞ்சித், மாரி செல்வராஜ் மற்றும் படக்குழுவுக்கு நன்றியும் பாராட்டும். பைசன் பெரிய திரைக்காக உருவாக்கப்பட்ட படம்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











