விஜய்சேதுபதி கொடுத்த ஒரு லட்சம் ஒரு கோடிக்கு சமம்.. போண்டா மணி வெளியிட்ட லேட்டஸ்ட் வீடியோ!
சென்னை: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காமெடி நடிகர் போண்டா மணியின் நிலையை அறிந்த நடிகர் விஜய்சேதுபதி ஒரு லட்சம் ரூபாய் கொடுத்து உதவி செய்துள்ளார் என போண்டா மணி வெளியிட்டுள்ள வீடியோ அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
சிறுநீரகம் இரண்டும் செயலிழந்த நிலையில், போண்டா மணி சென்னையில் உள்ள ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வடிவேலு, பார்த்திபன் உள்ளிட்ட பிரபலங்கள் உதவி செய்வதாக கூறி வரும் நிலையில், விஜய்சேதுபதி முதல் ஆளாக பண உதவி செய்துள்ளார்.

மருத்துவமனையில் போண்டா மணி
பவுன்னு பவுனு தான் படத்தில் நடிக்க தொடங்கிய போண்டா மணி, பருவ காதல் படம் வரை 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். வடிவேலு, விவேக் உள்ளிட்ட முன்னணி காமெடி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள அவர், தற்பொது சிறுநீரகம் செயலிழந்த நிலையில், தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அரசு உதவி
சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் சமீபத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள போண்டா மணியை சந்தித்து நலம் விசாரித்தார். மேலும், அவருக்கு உரிய சிகிச்சை அளிக்க அனைத்து ஏற்பாடுகளையும் அரசு வழங்கும் என அறிவித்து ஆறுதல் கூறியுள்ளார்.

வடிவேலு உறுதி
சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த வடிவேலுவிடம் போண்டா மணிக்கு ஏதாவது உதவி செய்வீங்களான்னு கேள்வி எழுப்ப, தன்னால் முடிந்த உதவியை கண்டிப்பாக தனது நண்பர் போண்ட மணிக்கு செய்வேன் எனக் கூறியுள்ளார் வடிவேலு. தற்போது போண்டா மணி வெளியிட்டுள்ள வீடியோவிலும் வடிவேலுவுக்கு நன்றி தெரிவித்து பேசியுள்ளார் போண்டா மணி.

ஒரு லட்சம் ஒரு கோடி மாதிரி
இந்நிலையில், போண்டா மணி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தி அறிந்ததும் உடனடியாக அவரது வங்கிக் கணக்கில் ஒரு லட்சம் ரூபாயை நடிகர் விஜய்சேதுபதி போட்டுள்ளார் என்றும், அவர் கொடுத்த ஒரு லட்சம் எனக்கு ஒரு கோடிக்கு சமம் என மனதார வாழ்த்தி உள்ளார். விஜய்சேதுபதிக்கு தனது நன்றிகளையும் வீடியோ வெளியிட்டு தெரிவித்துள்ளார் போண்டா மணி.

சந்திக்கும் நண்பர்கள்
கிங்காங், பெஞ்சமின் உள்ளிட்ட காமெடி நடிகர்கள் நடிகர் போண்டா மணி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதை அறிந்ததும் அவரை நேரில் சென்று சந்தித்து ஆறுதல் அளித்து வருகின்றனர். விஜய்சேதுபதி, வடிவேலு மற்றும் நண்பர்களின் செயல்களால் நான் இப்பவே பாதி குணமாகிட்டேன் என மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவிக்கும் வீடியோ ரசிகர்களை நெகிழச் செய்கிறது.


Click it and Unblock the Notifications











