பிரபலங்கள் வெளியிட்ட விதார்த்தின் கார்பன் டிரைலர்... குவியும் பாராட்டுக்கள்
சென்னை : டைரக்டர் லிங்குசாமி இயக்கிய மைனா படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் விதார்த்த. அதைத் தொடர்ந்து அஜித் நடித்த வீரம் உள்ளிட்ட படங்களில் கேரக்டர் ரோல்களில் நடித்துள்ளார்.
தற்போது ஆயிரம் பொற்காசுகள், அன்பறிவு, என்றாவது ஒரு நாள், ஆற்றல், அஞ்சாமை, கார்பன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார். இதில் உறுமீன் படத்தை இயக்கிய சக்திவேல் பெருமாள்சாமி இயக்கி உள்ள படம் கார்பன்.
விதார்த்த ஹீரோவாக நடித்துள்ள இந்த படத்தில் லட்சுமி பிரியா ஹீரோயினாக நடித்துள்ளார். கருணாகரன், சரித்திரன், செளமியா, கவிதாலயா கிருஷ்ணன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அச்சுமணி இசை அமைத்துள்ள இந்த படத்தை டி.விஜய ராகவேந்திரா, பெஞ்ச்மார்க் ஃபிலிம்ஸ் பேனரில் தயாரித்துள்ளார்.

விதார்த்தின் 25வது படம்
உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட கார்பன் படத்தில் படப்பிடிப்பு நிறைவுபெற்று, போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. விதார்த்தின் 25 வது படமாக தயாரிக்கப்பட்டுள்ள இந்த படம் இந்த ஆண்டு இறுதியில் ரிலீஸ் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இன்று கார்பன் படத்தின் டிரைலர் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.

டிரைலர் வெளியீடு
நடிகர் ஆர்யா, மாநாடு படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி உள்ளிட்ட பிரபலங்கள் ஒன்றிணைந்து கார்பன் படத்தின் டிரைலரை வெளியிட்டுள்ளனர். இந்த டிரைலர் பலரிடமும் பாராட்டை பெற்றுள்ளது. ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்று, படத்தின் மீதான ஆர்வத்தை தூண்டி உள்ளது. 2.06 நிமிடங்கள் கொண்ட இந்த டிரைலர் லைக்குகளையும் அள்ளி வருகிறது.

ஆர்வத்தை தூண்டிய டிரைலர்
ஹீரோவான விதார்த் காணும் கனவுகளில் வரும் சம்பவங்கள் அனைத்தும் நிஜத்திலும் நடக்கின்றன. தனது அப்பா விபத்து ஏற்படுவதையும் கனவில் பார்க்கிறார் விதார்த். பிறகு தனது அப்பாவிற்கு நடந்தது விபத்து இல்லை, கொலை முயற்சி என்பதை கண்டுபிடிக்கிறார். தான் காணும் கனவின் மூலமே அப்பாவை கொலை செய்ய முயற்சிப்பது யார் என்பதை கண்டுபிடிக்க முயற்சிக்கிறார் விதார்த்.

ரிலீஸ் எப்போது
இந்த டிரைலர் அனைவரையும் கவர்ந்துள்ளது. படத்தை எப்போது ரிலீஸ் செய்ய போகிறீர்கள் என ரசிகர்கள் கேட்க துவங்கி விட்டனர். கார்பன் படம் நேரடியாக ஓடிடி.,யில் ரிலீஸ் செய்யப்பட உள்ளதாகவும் தகவல் பரவி வருகிறது. இந்த படம் தியேட்டரில் ரிலீஸ் செய்யப்பட போகிறதா அல்லது ஓடிடி.,யில் ரிலீஸ் செய்யப்பட போகிறதா என்பது விரைவில் அறிவிக்கப்பட உள்ளதாம்.


Click it and Unblock the Notifications











