டிவி டூ சினிமா... அழகிய தமிழ் பேச்சால் நடிகையான தமிழ் செய்தி வாசிப்பாளர்கள்
சென்னை : சமீப காலமாக சின்னத்திரையில் இருந்து சினிமாவிற்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. டிவி தொகுப்பாளர்களாக இருந்து அதன் மூலம் சினிமா வாய்ப்பு கிடைத்து, பிரபலமானவர்களும் பலர் உள்ளனர்.
ஆனால் தங்களின் அழகிய தமிழ் உச்சரிப்பால் மக்களின் மனங்களை கவர்ந்த டிவி சேனல் செய்திவாசிப்பாளர்கள் பலர் நடிகையாகி வருவதும் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. செய்திவாசிப்பாளர், சின்னத்திரை, சினிமா என அனைத்திலும் இவர்கள் பிரபலமாகி வருகிறார்கள். அப்படி செய்திவாசிப்பாளர்களாக இருந்து நடிகையான சிலரை பற்றி இங்கே பார்க்கலாம்.

ஃபாத்திமா பாபு
கிட்டதட்ட 25 ஆண்டுகளுக்கும் மேலாக டிடி பொதிகையில் செய்திவாசிப்பாளராக இருந்தவர் ஃபாத்திமா பாபு. தொடர்ந்து பல்வேறு சேனல்களிலும் செய்திவாசிப்பாளராக இருந்த இவர் சில சீரியல்களில் நடித்துள்ளார். கல்கி படத்தின் மூலம் சினிமாவிலும் அறிமுகமானார். தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் பல படங்களில் நடித்த ஃபாத்திமா பாபு, பிக்பாஸ் சீசன் 3 ல் போட்டியாளராகவும் கலந்து கொண்டார்.

உமா பத்மநாபன்
சன் டிவியில் பிரபல செய்தி வாசிப்பாளராக இருந்த உமா பத்மநாபன், உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் படத்தின் மூலம் நடிகையானார். பல படங்களில் சிறிய வேடங்களில் நடித்த உமா, பல டிவி சேனல்களில் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் இருந்துள்ளார். ஜெயா டிவியில் ஒளிபரப்பான வீட்டுக்கு வீடு லூட்டி என்ற சீரியல் மூலம் சின்னத்திரைக்குள் நுழைந்தார். தற்போது சன் டிவியில் சித்தி 2 சீரியலில் நடித்து வருகிறார்.

பிரியா பவானிசங்கர்
புதிய தலைமுறை சேனலில் செய்திவாசிப்பாளராக இருந்த பிரியா பவானிசங்கர், விஜய் டிவியில் கல்யாணம் முதல் காதல் வரை சீரியல் மூலம் நடிகையானார். மேயாத மான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் என்ட்ரியானார். களத்தில் சந்திப்போம், கசடதபற, ஓ மணப்பெண்ணே, பிளட் மணி என வரிசையாக இவர் நடித்த படங்கள் ரிலீசாகி வருகின்றன. தற்போதும் தனுஷின் திருச்சிற்றம்பலம், கமலின் இந்தியன் 2 உள்ளிட்ட 9 படங்களில் நடித்து வருகிறார். தமிழ் சினிமாவின் டாப் ஹீரோயின்களில் இவரும் ஒருவராகி உள்ளார்.

லாஸ்லியா
இலங்கை தமிழ் டிவி சேனலில் செய்திவாசிப்பாளராக இருந்த லாஸ்லியா, பிக்பாஸ் சீசன் 3 ல் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமானார். அந்த நிகழ்ச்சியில் கவின், லாஸ்லியா இடையேயான காதல் விவகாரம் பெரிய அளவில் பேசப்பட்டது. பிக்பாஸிற்கு பிறகு விளம்பரங்களில் நடித்த லாஸ்லியா, ஃபிரண்ட்ஷிப் படத்தின் மூலம் ஹீரோயின் ஆகி உள்ளார். அதைத் தொடர்ந்து கூகுள் குட்டப்பன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார்.

அனிதா சம்பத்
சன் டிவியில் செய்திவாசிப்பாளராக இருந்த அனிதா சம்பத், பிக்பாஸ் சீசன் 4 ல் போட்டியாளராக கலந்து கொண்டு மிகவும் பிரபலமானார். இதனால் கிடைத்த புகழால் விஜய் நடித்த சர்க்கார் படத்தில் சிறிய ரோலில் நடித்து, நடிகையானார். இவர் தற்போது பல படங்களில் நடிக்க கமிட்டாகி வருகிறார்.

சரண்யா துரைசுந்தர்ராஜ்
செய்தி வாசிப்பாளராக இருந்து, சின்னத்திரை நடிகையானவர்களில் ஒருவர் சரண்யா துரை சுந்தரர்ராஜ். ஆயுத எழுத்து சீரியல் மூலம் நடிகையான சரண்யா, தற்போது விஜய் டிவி.,யில் ஒளிபரப்பாகி வரும் வைதேகி காத்திருந்தாள் சீரியலில் லீட் ரோலில் நடித்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











