»   »  சென்சார் குழுவை மாபியா என்பதா? - அமீர் மீது போலீஸில் புகார்

சென்சார் குழுவை மாபியா என்பதா? - அமீர் மீது போலீஸில் புகார்

Posted By:
Subscribe to Oneindia Tamil
Ameer
திரைப்பட தணிக்கை குழுவை மாபியா கும்பல் என்று கூறிய டைரக்டர் அமீர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மத்திய திரைப்பட தணிக்கை குழு உறுப்பினர் புகார் தெரிவித்துள்ளார்.

அமீர் இயக்கி, சமீபத்தில் திரைக்கு வந்த 'ஆதி-பகவன்' படத்திற்கு தணிக்கை குழு ஏ சான்றிதழ் கொடுத்துள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்த அமீர், யு சான்றிதழ் பெற தணிக்கை குழுவினர் கட்டணம் வசூலிக்கிறார்கள் என்றும், ஒரு மாபியா கும்பல் போல் தணிக்கைக் குழு செயல்படுவதாகவும் குற்றம்சாட்டியிருந்தார்.

அமீரின் இந்த கருத்து சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், மத்திய திரைப்பட தணிக்கை குழு உறுப்பினர் ஆர்.என்.அமிர்தராஜா என்பவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று புகார் மனு ஒன்றை கொடுத்தார். அதில், "5-2-2013 அன்று திரைப்பட இயக்குனர் அமீர், ஆதி-பகவன் திரைப்படத்தை தணிக்கை செய்வதற்கு சமர்ப்பித்தார். அந்த படத்தை தணிக்கை செய்தபோது அதில் அதிகமாக ஆபாச காட்சிகள் இருந்ததால் ஏ சான்றிதழ் மட்டுமே வழங்கப்படும் என்று குழுவின் சார்பாக அவரிடம் தெரிவிக்கப்பட்டது.

அதற்கு இயக்குனர் அமீர், அந்த காட்சிகள் இருந்தால்தான் எனது திரைப்படம் தியேட்டர்களில் நல்ல நிலையில் வெற்றிகரமாக ஓடும் என்றும், அதை அனுமதிப்பதற்கு உங்களுக்கு எவ்வளவு பணம் வேண்டும் என்றாலும் நான் தர தயார் என்றும் பேசினார்.

அதற்கு அவரை கண்டித்து உறுப்பினர்கள் மறுத்துவிட்ட நிலையில் சில காட்சிகளையாவது எடுத்துவிடுகிறேன் ஏ சான்றிதழ் இல்லாமல் தாருங்கள் என்று கேட்டார்.

அதற்கும் தணிக்கை குழு மறுத்துவிட்டு, உங்கள் படத்திற்கு ஏ சான்றிதழ் மட்டுமே வழங்க முடியும் என்று கூறி ஏ சான்றிதழ் வழங்கிவிட்டோம். அதன்பிறகு இயக்குனர் அமீர், நான் யார் என்று தமிழ்நாட்டிற்கே தெரியும். நீங்கள் எனது படத்திற்கு யு சான்றிதழ் வழங்கவில்லை என்றால் தணிக்கை குழுவினரைப் பற்றி அவதூறான செய்திகளை பத்திரிகைகளில் வெளியிடுவேன் என்றும், பல பத்திரிகைகளின் பேட்டிகள் மூலம் உங்கள் பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவேன் என்றும் மிரட்டினார்.

நாங்கள் அவர் மிரட்டலுக்கு எல்லாம் அடிபணியாமல் ஆதி-பகவன் படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்கியுள்ளோம். அதன்பிறகு திரைப்படம் தியேட்டரில் வெளியான பிறகு இயக்குனர் அமீர் திரைப்பட தணிக்கை குழு உறுப்பினர்களை கேவலமாக திட்டியும், மிரட்டியும் உள்ளார்.

தற்போது இந்திய திரைப்பட தணிக்கை குழு ஒரு மாபியா கும்பல் போல் செயல்படுகிறது என்றும், மேலும் எல்லாம் படத்திற்கும் பணம் கொடுத்தால்தான் சான்றிதழ்கள் வழங்குகிறார்கள் என்றும் தவறான செய்தியை தெரிவித்துள்ளார்.

இதனால் இந்திய அரசின் மத்திய தணிக்கைக்குழுவின் நற்பெயரையும், புகழையும் களங்கப்படுத்தி, என்னை போன்ற மத்திய தணிக்கை குழு உறுப்பினர்களுக்கு தீராத மன உளைச்சலையும், வேதனையையும் ஏற்படுத்தி உள்ளார்.

எனவே, இந்திய அரசின் மத்திய தணிக்கை குழு உறுப்பினர்கள் பற்றி எந்தவித அடிப்படை ஆதாரமுமின்றி அவதூறாக பேசிய இயக்குனர் அமீர் மீது தகுந்த நடவடிக்கை எடுத்து, அவரிடம் இருந்து எங்களுக்கு மிரட்டல் வந்துள்ளதால் தகுந்த பாதுகாப்பு அளிக்கும்படியும் கேட்டுக்கொள்கிறேன்," என்றார்.

ஏற்கெனவே விஸ்வரூபம் படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்கியதில் பணம் விளையாடியிருக்கிறது என்று நீதிமன்றத்திலேயே தமிழக அரசு குற்றம் சாட்டியது நினைவிருக்கலாம்.

English summary
Amirtharaja, one of the censor board member has filed a complaint on director Ameer for his allegations on censor board.
Please Wait while comments are loading...