»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil
திருப்பூரில் சந்திரமுகி படத்தின் சுவர் விளம்பரங்கள் தார் பூசி அழிக்கப்பட்டன. ரஜினி மன்றத்துக்குள் நிலவும் கோஷ்டிப் பூசலே இதற்குக் காரணம் என்று தெரிய வந்துள்ளது.

தமிழ்ப் புத்தாண்டையொட்டி ரஜினியின் படம் ஏப்ரல் 14ம் தேதி ரிலீஸ் ஆகிறது. இதற்காக தியேட்டர்களை அலங்கரிக்கவும், படத்துக்கு பிரமாண்டமான விளம்பரங்கள் செய்யும் ரஜினி மன்றங்கள் திட்டமிட்டுள்ளன.

இப்போது இந்தப் படத்துக்கு சுவர் விளம்பரங்கள் செய்ய ஆரம்பித்துவிட்டனர். இந் நிலையில் கோவையில் சந்திரமுகி விளம்பரங்கள் சுவர்களில் எழுதப்பட்டன.

மனித தெய்வம் (??) ரஜினிகாந்த் மக்கள் பொது நல இயக்கம் என்ற பெயரில் திருப்பூரில் இயங்கி வரும் ரஜினி ரசிகர் மன்றத்தினர் ரயில் நிலையம், பழைய பஸ் ஸ்டாண்டு, தாராபுரம் ரோடு, மேம்பாலம், பி.என். ரோடு ஆகிய இடங்களில் கொட்டை எழுத்துக்களில் சந்திரமுகி படத்துக்காக விளம்பரங்களை வரைந்தனர்.

ரஜினியின் படங்களோடு இந்த விளம்பரங்கள் எழுதப்பட்டன. இதற்காக கை காசை ஏகத்துக்கும் செலவிட்டனர் ரஜினி ரசிகர்கள்.

இந் நிலையில் இரவோடு இரவாக இந்த விளம்பரங்கள் மீது தாரைப் பூசி நாறடித்துவிட்டது ஏதோ ஒரு பிரிவினர். அவர்கள் யார் என்று தெரியவில்லை. ஆனால், எங்கெல்லாம் சந்திரமுகி விளம்பரம் எழுதப்பட்டிருந்ததோ, அங்கெல்லாம் விடாமல் சென்று தார் பூசி காலி பண்ணிவிட்டனர்.

இது குறித்து பொது மக்களும் ஆவலாகக் கூடி நின்று, தார் பூசியது பாமகவினராக இருக்குமோ, விடுதலைச் சிறுத்தைகளாக இருக்குமோ என்று ஓப்பனாகவே விவாதித்துக் கொண்டிருக்க, ரஜினி ரசிகர்கள் மட்டும் குசுகுசுவென பேசிக் கொண்டிருந்தனர்.

அவர்களுக்குள் புகுந்து காதைத் தீட்டியபோது தான் தெரிந்தது, இந்த தார் பூச்சு விழாவை நடத்தியது மன்றத்திலேயே உள்ள இன்னொரு கோஷ்டி என்பது.

பிரச்சனை பெரிதாகாமல் தடுக்க இடையில் புகுந்த போலீசார், எதற்கும் ஒரு புகாரை கொடுங்க, மிச்சத்தை அப்புறம் பார்த்துக்கலாம் என்று மனித தெய்வம் ரஜினிகாந்த் மக்கள் பொது நல இயக்கத்தினரை சமாதானப்படுத்தினர்.

இதையடுத்து இந்த மன்றத்தின் தலைவர் முருகேசன் திருப்பூர் வடக்கு வாசல் போலீசாரிடம் ஒரு புகாரைக் கொடுத்தார். அதில், மன்றத்தில் ஏற்பட்ட கோஷ்டிப் பூசலால் மன்றத்தினர் சிலரே தார் பூசியுள்ளதாக புகார் கூறியுள்ளார் முருகேசன்.

நல்லவேளை பாமக, வி.சிறுத்தைகள் மீது புகார் தந்து விவகாரமாக்காமல் விட்டார்களே என்ற நிம்மதியுடன் இது தொடர்பாக ஒரு வழக்கைப் பதிவு செய்துள்ளனர் போலீசார்.

போலீசுக்கு என்னென்ன வேலைப்பா...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil