»   »  அறிவும், துணிவும்.. எதிரெதிர் துருவங்களாய்.. பாலசந்தரின் நாயகிகள்!

அறிவும், துணிவும்.. எதிரெதிர் துருவங்களாய்.. பாலசந்தரின் நாயகிகள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இயக்குநர் பாலசந்தரின் பட நாயகிகள் எப்போதுமே அறிவையும், துணிவையும் பேசுவர்களாகவே அறியப்பட்டவர்கள். ஆனால், அவரது படங்களில் பெரும்பாலும் எதிரெதிர் துருவங்களாக பெண் பாத்திரங்கள் சித்தரிக்கப்பட்டிருக்கும்.

பொதுவாக நாயகி துணிச்சலுடன் அநீதிக்கு எதிராக போராடுபவளாக சித்தரிக்கப் பட்டிருக்கும் சூழலில், அதே படத்தில் மற்றொரு பெண் கதாபாத்திரம் அஞ்சி ஒடுங்கும் வகையில் அமைந்திருக்கும்.

Characters of heroines in Balachandar movies

காலத்தால் அழியாத அவரது காவியங்களில் மக்களின் மனதில் நீங்காத இடம் பிடித்த சில நாயகிகள் குறித்து ஒரு பார்வை...

அவள் ஒரு தொடர்கதை...

சுஜாதா நாயகியாக அறிமுகமான இப்படத்தில் குடிகார அண்ணன், ஓடிப் போன தந்தை இவர்களால் குடும்ப பாரத்தை சுமக்கும் கதாபாத்திரம். தியாகம், எதையும் எதிர் கொள்ளும் துணிச்சல் என வாழ்ந்து காட்டுவார் நாயகி. ஆனால், இதற்கு மாறாக அதே குடும்பத்தில் அவரது அம்மா, அண்ணி, சகோதரிகள் என எதிர்த்துப் பேசக் கூட திராணியற்றவர்களாக சித்தரிக்கப் பட்டிருப்பார்கள்.

சிந்துபைரவி...

இசையையே மூச்சுக் காற்றாக சுவாசிக்கும் பெண்ணிற்கும், இசை மேதை ஒருவருக்கும் இடையேயான காதலைச் சொல்லும் படம். இப்படத்தில் சுஹாசினி தனது காதல் பரிசாக காதலருக்கும், அவரது மனைவிக்கும் குழந்தைப் பெற்றுத் தந்து விட்டு தலைமறைவாகி விடும் புரட்சிப் பெண்ணாக நடித்திருப்பார். ஆனால், இதே படத்தில் சிவக்குமாரின் மனைவியாக வரும் சுலக்‌ஷனா, கல்லானாலும் கணவர், புல்லானாலும் புருஷன் என வாழ்பவராக வருவார்.

கல்கி...

கல்கியும் ஏறக்குறைய சிந்துபைரவியின் கதைக் கருவைக் கொண்டது தான். ஆனால், காதலுக்காக அல்லாமல் ஆண் ஒருவரின் திமிரை அடக்குவதற்காக கர்ப்பம் தரித்து குழந்தை பெற்று அதை அவரின் முதல் மனைவிக்கே பரிசாக அளிப்பார் ஸ்ருதி. இப்படத்தில் மூன்றாவது மனைவியாக ஸ்ருதி புரட்சி செய்திருக்க முதல் மற்றும் இரண்டாவது மனைவிகளாக வரும் கீதா மற்றும் ரேணுகா பயந்த சுபாவத்தில் நடித்திருப்பார்கள்.

இருகோடுகள்...

இரண்டு மனைவிகளைக் கட்டிக் கொண்ட கணவரின் வாழ்க்கையைச் சொல்லும் படம் இது. இப்படத்தில் முதல் மனைவியாக சவுகார் ஜானகி, கணவரால் ஏமாற்றப் பட்டபோதும் படித்து கலெக்டராகி இருப்பார். அதே சமயம், இரண்டாவது மனைவியாக வரும் ஜெயந்தி தன் வாழ்க்கையை மீட்க மட்டுமே போராடிக் கொண்டிருப்பார்.

தண்ணீர் தண்ணீர்...

சரிதா முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்த தண்ணீர் தண்ணீர் படத்தில் சமூகப்பிரச்சினையோடு, பெண்ணியம் குறித்தும் பேசியிருப்பார் பாலசந்தர். தன் சொந்த ஊருக்காகப் பாடுபடும் குற்றவாளி ஒருவருக்காக தனது போலீஸ் கணவரைத் தூக்கி எறியும் கதாபாத்திரம் சரிதாவுக்கு.

புன்னகை மன்னன்:

கமல் நாயகனாக நடித்திருந்த இப்படத்தில் ரேவதி, ரேகா என இரண்டு நாயகிகள். காதலுக்காக உயிரை மாய்த்துக் கொள்ளும் கோழைக் கதாபாத்திரத்தில் ரேகாவும், போராடி ஜெயிக்கும் கதாபாத்திரத்தில் ரேவதியும் நடித்திப்பார்கள்.

மனதில் உறுதி வேண்டும்...

இதேபோல், மனதில் உறுதி வேண்டும் படத்தில் குடும்பத்திற்காகப் போராடும் சுஹாசினி தனது சொந்த வாழ்க்கைத் துயரங்களை மறைத்துப் போராடுவார்.

உன்னால் முடியும் தம்பி...

உன்னால் முடியும் தம்பி படத்தில் தாழ்த்தப்பட்ட குடும்பத்தில் பிறந்தவராக சீதா நடித்திருப்பார். குடிப்பழக்கத்திற்கு எதிராக போராடும் நாயகனையும் மிஞ்சும் வகையில் தனது புரட்சிகரமான நடிப்பில் அசத்தியிருப்பார் சீதா. தன் காதலனின் தந்தையிடம் தன் ஜாதி குறித்து பேசும் ஒரு காட்சியே ஒரு பானை சோற்றிற்கு ஒரு சோறு பதம்.

பார்த்தாலே பரவசம:

பாலசந்தரின் 100வது படமாக வெளியான இப்படத்தில் கணவரின் முன்னாள் காதலை அறிந்து, தாலியைக் கழற்றிக் கொடுத்து விட்டு செல்லும் பெண்ணாக நடித்திருப்பார் சிம்ரன். மேலும், இப்படத்தில் கணவரே தனது மனைவிக்கு இரண்டாம் திருமணத்திற்கு வரன் தேடுவது போல காட்சிகள் அமைத்திருப்பார் கே.பி.

English summary
The most of the Balachandar movies, the character of heroines will be very bold and challenging.
Please Wait while comments are loading...