»   »  கங்காரு பட மோசடி: சிங்காரவேலனிடம் ரூ 4.5 கோடி நஷ்ட ஈடு கேட்கும் சுரேஷ் காமாட்சி!

கங்காரு பட மோசடி: சிங்காரவேலனிடம் ரூ 4.5 கோடி நஷ்ட ஈடு கேட்கும் சுரேஷ் காமாட்சி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

கடந்த ஆறு மாதங்களாக ரஜினி மற்றும் லிங்காவின் பெயரைப் பயன்படுத்தி ஏகத்துக்கும் பப்ளிசிட்டி பார்த்துவிட்ட சிங்காரவேலன் என்ற விநியோகஸ்தர் மீது அடுத்தடுத்து மோசடிப் புகார்கள் கிளம்ப ஆரம்பித்துள்ளன.

லிங்கா படத்துக்காக கலைப்புலி தாணு மூலம் நஷ்ட ஈடு என்ற பெயரில் கணிசமான தொகையைப் பெற்றுக் கொண்ட சிங்கார வேலன், இப்போது அதே தாணுவுக்கு எதிராகப் பேச ஆரம்பித்துள்ளார். லிங்கா பிரச்சினை முடிந்துவிட்டதாக முன்பு பத்திரத்தில் ஒப்பந்தம் போட்டு தாணுவுடன் அவர் போஸ் கொடுத்த புகைப்படம் சமூக வலைத் தளங்களில் உலாவர ஆரம்பித்துள்ளது.

Cheating allegations on Singaravelan

லிங்காவுக்குப் பிறகு இந்த சிங்காரவேலன் வெளியிட்ட படம் கங்காரு. இந்தப் படத்தை 150 அரங்குகளில் வெளியிடுவதாக உறுதியளித்து தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியிடம் உரிமை பெற்றிருக்கிறார்.

ஆனால் சொன்னபடி அத்தனை அரங்குகளில் படத்தை வெளியிடவில்லையாம். சென்னையில் சத்யம் சினிமாஸுக்கு சொந்தமான அரங்குகளில் வெளியிட்டுள்ளதாக விளம்பரத்தில் குறிப்பிட்டிருந்தார் சிங்கார வேலன். ஆனால் உண்மையில் சத்யம் சினிமாஸின் எந்த அரங்கிலுமே படம் வெளியாகவில்லையாம்.

அதேபோல முக்கிய ஏரியாவான திருச்சி - தஞ்சையில் ஒரு தியேட்டரில் கூட கங்காரு படத்தை வெளியிடவில்லையாம். 'மீடியாவில் பாஸிடிவாக விமர்சனங்கள், செய்திகள் வந்தும், என் படத்தை கொன்று விட்டார் இந்த சிங்கார வேலன்.. ஒரு பெரிய ஏரியாவில் படமே வெளியாகாமல் போவது ஒரு தயாரிப்பாளருக்கு எவ்வளவு பெரிய அவமானம்!' என்று இப்போது பலரிடமும் புலம்பி வருகிறாராம் சுரேஷ் காமாட்சி.

'லிங்கா விவகாரத்தில் கலைப்புலி தாணு எனக்கு பணம் கொடுக்காததால் திருச்சி தஞ்சையில் படம் வெளியாகவில்லை' என்று ஒரு மாதம் கழித்து இப்போது காரணம் சொல்கிறாராம்.

படத்துக்காக விளம்பரம் கொடுத்தேன் என்ற பெயரிலும் சில லட்சங்கள் பொய்க் கணக்கு காட்டியுள்ளாராம். சில இணையதளங்களின் பெயரைக் குறிப்பிட்டு அவர்களுக்கு விளம்பரம் தந்ததாக பட்டியலிட்டுள்ளாராம். உண்மையில் அவற்றுக்கு இவர் விளம்பரமே தரவில்லையாம். படமே வெளியாகாத சத்யம் தியேட்டரில் பேனர் வைத்ததாகக் கூறி, பேனர் பொருத்திய செலவு என்று வேறு ஒரு தொகையைக் குறிப்பிட்டுள்ளாராம் சிங்கார வேலன்.

கங்காரு படத்துக்காக அதன் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சிக்கு இதுவரை வசூல் தொகை என ஒத்தை ரூபாயைக் கூட கணக்குக் காட்டவில்லையாம்.

'லிங்கா படப் பிரச்சினையில் அத்தனை தீவிரமாக மூக்கை நுழைத்து பஞ்சாயத்து பண்ணியவர்கள் இப்போது எங்கே..?' என்று கேட்கும் சுரேஷ் காமாட்சி, தனக்கு நஷ்ட ஈடாக ரூ 4.5 கோடி வரை சிங்கார வேலன் தரவேண்டும் என தயாரிப்பாளர் சங்கத்தில் முறையிட்டிருக்கிறார். இதில் சரியான தீர்வு கிடைக்காவிட்டால் நீதிமன்றத்துக்குப் போகும் முடிவிலும் உள்ளாராம்.

இன்னும் சில தினங்களில் பிரஸ் மீட் வைத்து, தன்னை சிங்கார வேலன் எப்படியெல்லாம் மோசடி செய்தார் என்பதைச் சொல்லப் போகிறாராம் சுரேஷ் காமாட்சி!

இந்த குற்றச்சாட்டுகளுக்கு என்ன பதில் சொல்லப் போகிறார் சிங்கார வேலன்?

English summary
Kangaroo producer Suresh Kamatchi has charged cheating allegations on distributor Singaravelan.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil