twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மலையாள நடிகை 'செம்மீன்' ஷீலா காங்.கில் சேருகிறார்- சென்னையிலிருந்து கேரளாவுக்கு இடம் பெயருகிறார்!

    By Sudha
    |

    Chemmeen Sheela
    சென்னை: பழம்பெரும் மலையாள நடிகை 'செம்மீன்' ஷீலா காங்கிரஸ் கட்சியில் இணைய தீர்மானித்துள்ளார். தனக்கு நல்ல பதவி கொடுத்தால், தற்போது வசித்து வரும் சென்னையிலிருந்து சொந்த மாநிலமான கேரளாவுக்கு இடம் பெயரவும் அவர் முடிவு செய்துள்ளார்.

    கேரள பெண்கள் மற்றும் சிறார்களின் நலனுக்காக தான் பாடுபடத் தயாராக இருப்பதாகவும் ஷீலா கூறியுள்ளார்.

    டெல்லியில் நேற்று கேரளாவைச் சேர்ந்தவரும், மத்திய பாதுகாப்பு அமைச்சருமான ஏ.கே.அந்தோணியைச் சந்தித்துப் பேசினார் ஷீலா. அதன் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், நேரம் வரும்போது அனைத்தும் தெரிய வரும். விரைவில் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும்.

    கேரள பெண்கள் மற்றும் சிறார்களின் நலனுக்காக பாடுபடத் தயாராக இருக்கிறேன். எனக்குப் பதவி கொடுக்கப்பட்டால் அதை ஏற்பேன். அப்படி ஒரு நிலை வந்தால் நான் சென்னையிலிருந்து கேரளாவுக்கு நிரந்தரமாக இடம் பெயரவும் தயாராக இருக்கிறேன்.

    அரசியலில் சேருவது என்பது எளிதான முடிவாக இருக்கவில்லை. பல மாதங்கள் யோசித்த பின்னர்தான் இந்த முடிவுக்கு வந்தேன். அரசியலில் நுழைந்து எந்தப் பலனையும் நான் அனுபவிக்கப் போவதில்லை. அதில் விருப்பமும் இல்லை. மக்களுக்காகப் பணியாற்றும் திருப்தி கிடைக்கும். அது போதும்.

    சினிமாக்காரர்களை கேரளாவில் அரசியல்வாதிகளாக மக்கள் பார்ப்பதில்லை. இருப்பினும் அரசியலால் நான் பணம் சம்பாதிக்கவோ அல்லது புகழைப் பெறவோ வரவில்லை என்பதால் மக்கள் என்னை ஏற்பார்கள் என்று நம்புகிறேன் என்றார் ஷீலா.

    மறைந்த எம்.ஜி.ஆரால் சினிமாவுக்கு கொண்டு வரப்பட்டவர் ஷீலா. அவர் நடித்த பாசம் படத்தில் நடிகையாக அறிமுகமானார் ஷீலா. அப்போது அவருக்கு வயது 19தான். அதன் பின்னர் அவர் மலையாளத்தில் நடிக்க ஆரம்பித்தார். பிரேம் நசீருடன் இணைந்து 110 படங்களில் ஜோடியாக நடித்து உலக சாதனை படைத்தவர். இந்த சாதனை இன்று வரை முறியடிக்கப்படவில்லை.

    மலையாளம், தமிழ், கன்னடம், தெலுங்கில் 500 படங்களுக்கும் மேல் நடித்துள்ளார் ஷீலா.

    இவர் நடித்த செம்மீன் படம் மிகவும் புகழ் பெற்றது. இந்தப் படத்திற்குப் பிறகு இவர் செம்மீன் ஷீலா என்று அழைக்கப்படலானார்.

    தமிழில் இவர் கடைசியாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் சந்திரமுகி படத்தில் நடித்திருந்தார்.

    மலையாள ரசிகர்களை ஒரு காலத்தில் தனது கவர்ச்சியாலும், நடிப்பாலும் கவர்ந்த ஷீலாவுக்கு தற்போது வயது 70 ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Veteran Malayalam actress Sheela will soon join the Congress Party and take up issues concerning women and children in Kerala. She made her intention public after a meeting with Defence Minister A K Antony in New Delhi yesterday. “You’ll know everything when the time comes and there’ll be an official announcement soon,” Sheela, 70, told reporters.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X