விஜய் கட்சி எடுத்திருக்கும் அந்த முடிவு.. தோள் கொடுப்போம்.. இயக்குநர் சேரன் ஓபன்
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் கட்சியை தொடங்கியிருக்கும் விஜய் கரூர் சென்றபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தார்கள். இதுதொடர்பான வழக்கு விசாரணை சிபிஐக்கு மாற்றப்பட்டிருக்கிறது. இது ஒருபக்கம் இருக்க இன்னும் நேரில் சென்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்திக்காத விஜய்க்கு எதிராக பலரும் தங்களது கண்டன குரல்களை எழுப்பிவருகிறார்கள்.
தவெக தலைவரும், நடிகருமான விஜய் 'உங்கள் விஜய் நா வரேன்' என்கிற பெயரில் அரசியல் சுற்றுப்பயணம் செய்தார். கரூருக்கு அவர் தாமதமாக சென்றதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தார்கள். அந்த சம்பவம் நடந்தது தெரிந்தும் விஜய் அங்கிருந்து சென்னைக்கு வந்தது பெரும் கண்டனத்தை உண்டு செய்தது. மேலும் சென்னைக்கு வந்த அவர் பெயருக்கு ஒரு ட்வீட்டை போட்டுவிட்டு; அடுத்ததாக வீடியோ வெளியிட்டார்.
அதிலும் மோசம்தான்: நடந்த அசம்பாவிதத்தை உணர்ந்து விஜய் அந்த வீடியோவில் பேசியிருப்பார் என்று பார்த்தால், 'சி.எம்.சார் பழி வாங்கனும்னா என்னை என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள். வீட்டிலோ இல்லை ஆஃபிஸிலோதான் இருப்பேன். தொண்டர்களை விட்டுவிடுங்கள்' என்று கூறினார். அதனைப் பார்த்த ரசிகர்கள் பலரும் இவ்வளவு நடந்த பிறகும் அவர் தன்மீது இருக்கும் தவறை அவர் உணர்ந்துகொள்ளவே இல்லையே என்று ஆதங்கப்பட்டார்கள்.

சிபிஐக்கு மாற்றம்: இதற்கிடையே தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் மீது வழக்கு தொடரப்பட்டிருந்தது. அதேபோல் கரூர் வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்று தவெக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. அதனை விசாரித்த சுப்ரீம் கோர்ட் சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டது. இந்த உத்தரவு வந்த பிறகுதான் தலைமறைவாக இருந்த புஸ்ஸி ஆனந்த் வெளியே வந்திருக்கிறார்.
தவெகவின் முடிவு: விஜய் இன்னமும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சென்று சந்திக்கவில்லை. அதேசமயம் அவர்களுக்கு 20 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்றும், மாதம் 5,000 ரூபாய் வழங்கப்படும், அந்த குடும்பங்களை விஜய் தத்து எடுத்திருக்கிறார் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இதெல்லாம் செய்வது ஓகேதான்; நேரில் சென்று மக்களை இன்னமும் சந்திக்கவில்லையே என்ற விமர்சனம் தொடர்ந்துகொண்டிருக்கிறது. விரைவில் அவர் நேரிலும் செல்லவிருக்கிறார். அதற்கு அனுமதி கேட்டு டிஜிபி அலுவலகத்திலும் மனு அளிக்கப்பட்டிருக்கிறது.
சேரனின் ட்வீட்: இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு சேரன் தனது எக்ஸ் பக்கத்தில் இதுகுறித்து, "உயிர் இழந்தவர்கள் குடும்பங்களை கூட வரவைச்சுத்தான் ஆறுதல் சொல்லுவிங்களா சார்.. ரொம்ப தவறா இருக்கு நேர்ல ஒவ்வொருவர் வீட்டுக்கு போறதுதான மரியாதை.. அப்போதான உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் கலங்கம் விலகும். அது முடியாதுன்னா எதுக்குமே உங்களால மக்களோட நிக்கமுடியாது" என்று குறிப்பிட்டிருந்தர்.
மேலும் இன்று அவர் போட்டிருக்கும் ஒரு ட்வீட்டில் தவெக செய்யும் உதவியை குறிப்பிட்டு, 'இந்த முடிவு எடுத்தமைக்கு பாராட்டுவோம். இழப்பின் மதிப்பை கணக்கிட முடியாதுதான்.. ஆனாலும் இப்போதைக்கு 41 குடும்பங்களும் ஆறுதல் அடையும். குடும்பத்துக்கு 20 லட்சம் வழங்குவதோடு இந்த உதவிகளும் வழங்கியது பாராட்டுக்குரியது. துயரில் தோள்கொடுப்போம்"என்று பாராட்டியிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











