விஜய் பட இயக்குநருடன் கூட்டணி வைக்கும் யோகி பாபு… ஹீரோவாக அடுத்த அவதாரம்…
சென்னை: தமிழ்த் திரையுலகில் முன்னணி காமெடி நடிகரான யோகி பாபுவு டாப் ஹீரோக்களின் படங்களில் கண்டிப்பாக இடம் பிடித்து விடுகிறார்.
ரஜினி, விஜய், சிவகார்த்திகேயன், தனுஷ் உள்ளிட்ட நடிகர்களின் ஃபேவரைட் காமெடியனாக கலக்கி வரும் யோகி பாபு, ஹீரோவாகவும் நடித்து வருகிறார்.
இந்நிலையில், விஜய் பட இயக்குநரின் அடுத்த படத்தில் யோகி பாபு ஹீரோவாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிஸி ஷெட்யூலில் யோகி பாபு
ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டாக பல படங்களில் நடித்துள்ள யோகி பாபு, இன்று கோலிவுட்டில் டாப் காமெடி நடிகனாக கலக்கி வருகிறார். வைகைப்புயல் வடிவேலு சில வருடங்களாக ஒதுங்கி இருந்த நேரத்தில், அந்த கேப்பை செம்மையாக ஃபில் செய்துள்ளார் யோகி பாபு. சூப்பர் ஸ்டார் ரஜினி, விஜய், அஜித், சிவகார்த்திகேயன், தனுஷ் போன்ற டாப் ஹீரோக்களுக்கு அல்டிமேட் காமெடி பார்ட்னராக கலக்கிவரும் யோகி பாபுவின் கால்ஷீட் எப்போதுமே பிஸியாக தான் இருக்கிறதாம். கூர்கா உள்ளிட்ட சில படங்களில் ஹீரோவாக நடித்துள்ள யோகி பாபுவுக்கு அடுத்தடுத்து ஜாக்பாட் அடித்து வருகின்றது.

விஜய் பட இயக்குநருடன் கூட்டணி
யோகி பாபு தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் ஜெயிலர், சூர்யாவின் 42வது படம், பாலிவுட்டில் ஷாருக்கானுடன் ஜவான் உட்பட மேலும் பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். அதுதவிர ரமேஷ் சுப்பிரமணியம் இயக்கும் ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்கவுள்ளார். முக்கியமாக இந்தப் படத்திற்கு கதை, திரைக்கதை, வசனத்தை யோகி பாபு எழுதியுள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கிவிட்ட நிலையில், இதனைத் தொடர்ந்து சிம்புதேவன் இயக்கும் படத்திலும் யோகி பாபு ஹீரோவாக நடிக்கவுள்ளராம்.

விரைவில் அறிவிப்பு
வடிவேலு நடித்த 'இம்சை அரசன் 23ம் புலிகேசி' படம் மூலம் இயக்குநராக அறிமுகமான சிம்புதேவன், அதனைத் தொடர்ந்து அறை எண் 305ல் கடவுள், இரும்புக் கோட்டையில் முரட்டு சிங்கம், புலி, கசடதபற ஆகிய படங்களை இயக்கியுள்ளார். விஜய் நடிப்பில் சிம்புதேவன் இயக்கிய 'புலி' திரைப்படத்துக்கு பெரிய எதிர்பார்ப்பு காணப்பட்டது. ஆனால், அந்தப் படம் வெற்றியாக அமையவில்லை. இந்நிலையில், சிம்புதேவனின் புதிய படத்தில் யோகி பாபு ஹீரோவாக நடிக்கவுள்ள தகவல் ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

காமெடி ஜானரில் புதிய படம்
சிம்புதேவன் எப்போதுமே காமெடிக்கு ஸ்பெஷலானவர். அதனால், யோகி பாபுவுடன் அவர் கூட்டணி வைத்துள்ள படம் முழுக்க முழுக்க காமெடி ஜானரில் தான் இருக்கும் எனக் கூறப்படுகிறது. ஏற்கனவே வடிவேலுவை ஹீரோவாக வைத்து 'இம்சை அரசன் 24ம் புலிகேசி' படத்தை திட்டமிட்டிருந்தார் சிம்புதேவன். அது நடக்காமல் போனதால் இப்போது யோகி பாபுவுடன் இணையவுள்ளதாகவும் கூறப்படுகிறது. தீபாவளி தினத்தில் யோகி பாபுவுக்கு இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்தது. இதனையடுத்து அவர் ஹீரோவாக நடிக்கும் படங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications