»   »  சின்னத்திரை நடிகர் சங்கத்தலைவரானார் சிவன் ஸ்ரீநிவாஸ் - புதிய கட்டடம் கட்ட உறுதி

சின்னத்திரை நடிகர் சங்கத்தலைவரானார் சிவன் ஸ்ரீநிவாஸ் - புதிய கட்டடம் கட்ட உறுதி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பரபரப்பாக நடைபெற்ற சின்னத்திரை நடிகர் சங்கத்தேர்தலில் சீரியல் நடிகர் சிவன் ஸ்ரீநிவாஸ் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சின்னத்திரை நடிகர் சங்கத்திற்கு கட்டடம் கட்டப்படும் என்று புதிய தலைவராக வெற்றிப் பெற்றுள்ள சிவன் ஸ்ரீநிவாஸ் உறுதி அளித்துள்ளார்.

Chinnathirai Nadigar Sangam Election:Sivan Srinivas new president

தொலைக்காட்சி சீரியல் நடிகர்கள், நடிகைகள், தொகுப்பாளர்களுக்காக தென்னிந்திய சின்னத்திரை நடிகர் சங்கம் 2003ம் ஆண்டிலிருந்து செயல்பட்டு வருகிறது. இதில் 1,340 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். தலைவர், துணைத்தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர், செயற்குழு உறுப்பினர்கள் என மொத்தம் 23 பதவிகள் இருக்கின்றன. இதற்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்பட்டு நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படுவது வழக்கம்.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்ற தேர்தலில் தலைவராக நளினி, பொதுச்செயலாளராக பூவிலங்கு மோகன், பொருளாளராக வி.டி.தினகர் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்களது பதவிக்காலம் 2017ம் ஆண்டு வரை உள்ளது. ஆனாலும், சங்க நிர்வாகிகளுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பொருளாளர் வி.டி.தினகர், துணைத் தலைவர் ராஜ்காந்த், இணை செயலாளர்கள் பாபூஸ், கன்யா பாரதி மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் 16 பேர் திடீரென தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். இதை தொடர்ந்து தலைவர் பதவியில் இருந்து நளினியும் விலகினார்.

சின்னத்திரை நடிகர் சங்கத்திற்கு தேர்தல்

இந்தநிலையில் புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுக்க சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தல் நேற்று சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் திருமணம் மண்டபத்தில் நடைபெற்றது. இந்த தேர்தலில் மூன்று அணிகள் போட்டியிட்டன. இந்த தேர்தலில் மொத்தம் 69 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

மும்முனைப் போட்டி

வசந்தம் அணி சார்பில் தலைவர் பதவிக்கு சிவன் ஸ்ரீநிவாஸ், துணைத் தலைவர் பதவிகளுக்கு கமலேஷ், வி.சோனியா, செயலாளர் பதவிக்கு போஸ் வெங்கட், இணைச் செயலாளர் பதவிக்கு பரத், கவிதா ஆகியோர் போட்டியிட்டனர்.புதிய அலைகள் அணி சார்பில் தலைவராக பானு பிரகாஷ், துணைத் தலைவர்களாக மனோபாலா, சுந்தர், பொதுச் செயலாளராக பாபூஸ், பொருளாளராக விஜய் ஆனந்த் ஆகியோர் போட்டியிட்டனர்.

உழைக்கும் கரங்கள் அணி சார்பில் தலைவராக ரவி வர்மா, பொதுச் செயலாளராக எஸ்.கனகப்பிரியா, பொருளாளராக ஜெயந்த், துணைத் தலைவர்களாக லஷ்மி பிரசன்னா, வின்சன்ட் ராய் ஆகியோர் போட்டியிட்டனர்.

விறுவிறுப்பான வாக்குப்பதிவு

காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெற்றது. இந்த தேர்தலில், தொலைக்காட்சி நடிகர்-நடிகைகள் திரளாக வந்து வாக்களித்தார்கள். மேலும், வாக்களிக்க வந்த நடிகர்-நடிகைகளை காண ரசிகர்கள் கூட்டமாக குவிந்தனர். இந்த தேர்தலில் 14 தபால் வாக்குகள் பதிவானது. நேரில் பதிவான வாக்குகள் 691 என மொத்தம் 705 வாக்குகள் பதிவானது.

சிவன் ஸ்ரீநிவாஸ்

வாக்குப்பதிவு முடிவடைந்ததும், தேர்தல் அதிகாரி லியாகத் அலிகான் முன்னிலையில் மாலை 6 மணிக்கு வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. முதலில் தபால் வாக்குகளும், அதைத்தொடர்ந்து தேர்தலில் பதிவான வாக்குகளும் எண்ணப்பட்டன. இதில் சங்க தலைவராக சிவன் ஸ்ரீநிவாஸ் 280 ஓட்டுகள் பெற்று தலைவராக வெற்றி பெற்றார். ரவிவர்மா 207 ஓட்டுகளும், பானு பிரகாஷ் 202 ஓட்டுகளும் பெற்றனர்.

தனியாக கட்டடம்

இந்த தேர்தலில் வெற்றி பெற்ற நடிகர் சிவன் ஸ்ரீநிவாஸ், சின்னத்திரை நடிகர் சங்கத்திற்கென தனியாக கட்டடம் கட்டப்படும் என்றும், வேலை கிடைக்காத சங்க உறுப்பினர்களுக்கு வேலை கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி அளித்துள்ளார்.

வசந்தம் அணியினரின் வாக்குறுதி

இந்த தேர்தலில் போட்டியிட்ட வசந்தம் அணியினர், நாங்கள் இளைஞர் சக்தி. தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் நாசர், விஷால் தலைமையிலான குழு எப்படி வெற்றி பெற்றதோ அதேபோல நாங்களும் வெற்றி பெற்று சொந்த கட்டிடம், வேலைவாய்ப்புக்கான சூழல் உள்ளிட்ட பல விஷயங்களை புதிய உத்வேகத்துடன் செயல்படுத்துவோம் என்று தெரிவித்தனர். இப்போது சங்கத்தலைவராக வசந்தம் அணியின் தலைவர் சிவன் ஸ்ரீநிவாசன் வெற்றி பெற்றுள்ளார் வாக்குறுதியை நிறைவேற்றுவாரா பார்க்கலாம்.

English summary
Actor Sivan Srinivasan has been elected as president of ChinaThirai Nadigar sangam.Chinnathirai Nadigar Sangam Election vote polling is to be happened on December 25.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil