»   »  ரஜினியை அரசியலுக்குக் கொண்டுவர கடைசிவரை 'பகீரத முயற்சி' எடுத்த சோ!

ரஜினியை அரசியலுக்குக் கொண்டுவர கடைசிவரை 'பகீரத முயற்சி' எடுத்த சோ!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மறைந்த மூத்த பத்திரிகையாளர் சோ எஸ் ராமசாமி, தன் நண்பரும் நடிகருமான ரஜினிகாந்தை தமிழக அரசியலில் தலைமைத்துவத்துக்கு கொண்டு வர பெரும் முயற்சி மேற்கொண்டார்.

அது பற்றிய ஒரு ப்ளாஷ்பேக்...

ரஜினியும் சோவும் எழுபதுகளின் பிற்பகுதியிலிருந்தே நெருக்கமான நண்பர்கள்தான். ஆனால் ரஜினியை அரசியல் களத்தை நோக்கி நகர்த்த சோ முற்பட்டது 1992-க்குப் பிறகுதான்.

Cho's efforts to bring Rajini to politics

அப்போது முதல்வராக இருந்தவர் மறைந்த ஜெயலலிதா. அவரது ஆட்சி மீது பல்வேறு விமர்சனங்கள் இருந்த நேரம். அப்போதுதான் ரஜினிக்கும் ஜெயலலிதாவுக்கும் நேரடியாகவே உரசல் ஏற்பட்டது. குறிப்பாக செவாலியே பட்டம் பெற்ற சிவாஜிக்கு விருது வழங்கும் விழாவில்.

இந்த விழாவில் பேசிய ரஜினி, முதல்வரை நேரடியாகப் பார்த்து விரல்நீட்டி எச்சரிக்கும் வகையில், 'முதல்வர் அவர்களே... திரைப்பட நகருக்கு உங்கள் பெயரைச் சூட்டியது தவறு. எம்ஜிஆர் அல்லது சிவாஜி பெயரைச் சூட்டியிருக்க வேண்டும். தவறு செய்கிறீர்கள்.. திருத்திக் கொள்ளுங்கள்," என்றார். இது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. அதன் பிறகு தொடர்ச்சியாக சில சம்பவங்கள். பாட்ஷா படத்தின் வெற்றி விழாவில் ரஜினியின் வெடிகுண்டுப் பேச்சு, பாட்ஷா படம் குறித்து ஜெயலலிதாவின் காரசாரமான விமர்சனம் என ரஜினி முழுமையாக தமிழக அரசியலுக்குள் வந்துவிட்டார்.

இந்த நேரத்தில் சோ தான் ரஜினியின் முழுமையான ஆலோசகர். அப்போது சோவின் துக்ளக் பத்திரிகைக்கு ஒரு மினி தொடர் எழுதினார் ரஜினி. இந்த மினி தொடர் எதற்காக என்றால், மாதமிருமுறை இதழாக இருந்து, வாரப் பத்திரிகையாக மாறியிருந்த துக்ளக்குக்கு உதவவும், தான் ஏன் ஜெயலலிதாவை எதிர்க்கிறேன் என்பதை விளக்கவும்தான் என ரஜினியே காரணம் கூறியிருந்தார்.

5 வாரங்கள் வெளியான அந்த மினி தொடரில் தனக்கும் ஜெயலலிதாவுக்குமான அறிமுகம், சந்திப்பு, எதிர்ப்பு ஏன் என்பதையெல்லாம் விளக்கமாகவே ரஜினிகாந்த் எழுதியிருந்தார்.

அதன்பிறகு வந்த 1996 சட்டமன்றத் தேர்தலில் ரஜினியை நேரடியாக களத்தில் இறக்கி, முதல்வர் வேட்பாளராக்கவும் ஆலோசனை நடந்தது.

அப்போது காங்கிரஸ் உடையவில்லை. காங்கிரஸ் - அதிமுக கூட்டத் தவிர்க்க, ரஜினி தலைமையில் தேர்தலைச் சந்திப்பதாகத் திட்டம். இதில் ரஜினியை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தினார் சோ. அதை ஜிகே மூப்பனாரும், ப சிதம்பரமும் கூட ஏற்றுக் கொண்டார்கள். அதற்காக அன்றைய பிரதமர் நரசிம்மராவுடன் ரஜினியைச் சந்திக்க வைத்தனர்.

ஆனால் ரஜினி மட்டும் ஏனோ இந்த டீலை ஏற்கவில்லை. காங்கிரஸ் உடைந்து மூப்பனார் தலைமையில் தமாக உருவான போதும்கூட, இந்த ஆஃபர் ரஜினிக்குத் தரப்பட்டது. அப்போதும் ரஜினி தமாகவுக்கு தன் ஆதரவை மட்டும் தந்தார். அவரது ஆதரவுடன் திமுகவுடன் கூட்டணி உருவானது. திமுக ஆட்சியைப் பிடித்தது.

ஆனால் அன்றைய சூழலில் திமுக ஆட்சிக்கு வந்ததை சோ ஒப்புக் கொண்டாரே தவிர, ரஜினி தலைமையில் தமிழகத்தில் ஒரு ஆட்சி நிலவ வேண்டும் என்பதில் தீவிரமாக இருந்தார். நேரம் கிடைக்கும் போதெல்லாம் இதுகுறித்து அவர் பேசத் தவறியதில்லை.

"ரஜினிகாந்த் நல்ல மனிதர். பணம் சேர்க்க வேண்டும் என்ற ஆசை இல்லாதவர். மக்களுக்கு உண்மையாகவே நல்லது செய்யக் கூடியவர். அவருக்கும் அந்த ஆசை இருக்கிறது. ஆனால் எதற்காகவே தயங்குகிறார். அவர் அரசியலுக்கு வந்து, மாநிலத்தின் ஆட்சிப் பொறுப்பேற்றால் நாட்டுக்கு நல்லது. அவர் வராவிட்டால் நஷ்டம் அவருக்கல்ல.. நாட்டுக்கு..."

2014-ல் ரஜினிக்கு அவர் விடுத்த கடைசி அழைப்பு இது.

English summary
Cho Ramaswamy's efforts to bring Rajinikanth to active politics has continued from 1990's to till his death.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil