»   »  தினம் புதுப்புது கரும்புகள் கேட்கும் திரைத்துறை எனும் கரும்பாலை!

தினம் புதுப்புது கரும்புகள் கேட்கும் திரைத்துறை எனும் கரும்பாலை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

- கவிஞர் மகுடேசுவரன்

ஒருநாள் என் பதிப்பாளரைப் பார்ப்பதற்காக சென்னை இராயப்பேட்டையின் கிளைச்சாலை ஒன்றில் சென்றுகொண்டிருந்தேன். அத்தெருவில் ஓரிரண்டு கட்டடங்கள் புதிதாய்த் தோன்றி பளபளப்பு கூடியிருந்தன. சில வீடுகள் இன்னும் அதே பழைமை மாறாமல் ஓட்டு வீடுகளாக இருந்தன. சென்னைக்கே உரித்தான கம்பியிடப்பட்ட இரட்டைக் கதவுகள்.

நான் சென்றுகொண்டிருந்தபோது பழைய வீடொன்றின் இரட்டைக் கதவை ஒருவர் திறந்து நின்றார். நான் அவரைப் பார்க்க அவர் என்னைப் பார்க்க... இருவரும் ஓரிரு மணித்துளிகள் நிலைப்பட்டவர்களாக நின்றோம். அவரை நான் எங்கேயோ பார்த்திருக்கிறேன், அந்தக் குழிவிழும் கன்னங்களும் தேங்காய்க் கீற்றுச் சிரிப்பும் எனக்குப் புதியவையல்ல.

Cinema Industry is like a Sugarcane Machine

சென்னையில் எனக்குத் தெரிந்தவர்கள் என்று பெருந்தொகையினரும் இல்லை. இவர் யார் ? இவரை எங்கே பார்த்திருக்கிறேன் ? என் மூளையோட்டத்தை அவரும் கணித்துவிட்டார். மென்மையான ஒரு புன்னகையை எனக்குத் தந்தபடி உள்ளிருந்த ஈருருளியை எடுத்து வெளியே நிறுத்தினார். அவர் தம் வேலையில் இறங்கிவிட்டதை உணர்ந்தேன். என் எண்ணத்தைத் தோண்டியவாறே அவ்விடம் விட்டு அகன்றேன். ஆம்... நினைவு வந்துவிட்டது. அவர் ஒரு திரைப்பட நடிகர்.

அவரை ஒரு திரைப்படத்தில் மிகவும் நல்ல குணச்சித்திரத்தில் பார்த்திருக்கிறேன். அத்திரைப்படம் 'ஒரு புல்லாங்குழல் அடுப்பூதுகிறது.' மௌலி இயக்கிய படம். அத்திரைப்படத்தில் நண்பர்கள் குழுவில் ஒருவராக அந்நடிகர் வந்திருக்கிறார். அவர் பெயர் 'ராக்கெட் ராமநாதன்'. அந்தப் பெயர் சரிதானா என்று மீண்டும் திரும்பி வருகையில் அவ்வீட்டைத் தற்செயலாகப் பார்ப்பதுபோல் பார்த்தேன். ஆம். வீட்டின் கதவு முகப்பில் அப்பெயர் பொறிக்கப்பட்டிருந்தது.

எங்கோ வாழும் ஒருவர் கலைச்செயலில் தம்மை ஈடுபடுத்திக்கொள்ளும்போது, அவராற்றிய கலையை வேறெங்கோ காண்பவர் நினைவில் நீங்கா இடம் பிடித்து விடுகிறார். அன்றாடம் ஐம்பது அறுபது முகங்களை நேரில் பார்க்கிறோம், பேசுகிறோம்தான். எல்லாரும் நினைவில் நின்றுவிடுகிறார்களா ? கலையால் கவர்ந்தவர்களே நினைவில் அழியாது பதிகிறார்கள்.

நான் ராக்கெட் ராமநாதனைப் பார்த்தபோது அவர் திரைத்துறையிலிருந்து முற்றாக வாய்ப்பின்றி இருந்தார். ஒளிவிளக்குகளின் உலகத்திலிருந்து வெளியேறித் தம்மை ஓர் எளியவராக ஆக்கிக்கொண்டு வாழ்ந்தார் என்று நினைக்கிறேன். நான் ராக்கெட் ராமநாதனைப் பார்த்தது ஒன்றும் பெரிதில்லை. ஆனால், என்னைப் பார்த்தவுடன் அவருடைய முகத்தில் அரைப் புன்னகை தோன்றி மறைந்த அந்நொடியைத்தான் என்னால் கணிக்க முடியவில்லை.

தம்மை அறிந்த ஒருவர் நாடி வந்து நிற்பார் என்று அவர் நினைத்திருப்பார். ஆனால், நான் சிந்தனைக்குள் இறுகியதைக் கண்டதும் தம் வேலையைச் செய்யத் தொடங்கிவிட்டார். புகழ் வெளிச்சத்தால் அவரை நாடி வந்து கைப்பற்றிச் சிரித்த நூற்றுக்கணக்கானவர்களைப் பார்த்திருப்பார். இப்போது அதிலிருந்து பெற்ற ஞானத்தையும் அடைந்திருப்பார்.

என் நண்பர் இராஜநாயகம் ஒரு கதையைச் சொன்னார். "அழகிய மிதிலை நகரினிலே யாருக்கு ஜானகி காத்திருந்தாள்..." என்ற பழம்பாடல் பலர்க்கும் நினைவிருக்கக்கூடும். பிபி சீனிவாஸ், பி சுசீலா பாடிய அப்பாடல் அன்னை என்ற திரைப்படத்தில் இடம்பெற்றது. ஹரிநாத்ராஜா என்ற நடிகரும் நடிகை சச்சுவும் மகிழுந்தில் அப்பாடலைப் பாடியபடி சென்னையை வலம் வருவார்கள். மகிழுந்து தரும் மாமகிழ்ச்சியை அப்பாடல் உணர்த்துவதுபோல் அமைந்திருக்கும்.

பிற்பாடு ஹரிநாத்ராஜா என்னும் அந்நடிகர் தாம் எதிர்பார்த்ததைப்போல் திரையில் வாய்ப்புகள் கிட்டாமல் பின்தங்கிப் போனார். என் நண்பர் இராஜநாயகம் அவரைச் சென்னையின் பேருந்து நிறுத்தமொன்றில் தற்செயலாகப் பார்த்தாராம். "நீங்க ஹரிநாத்ராஜாதானே ?" என்று நெருங்கிக் கேட்க எண்ணியபோது அவர் காத்திருந்த பேருந்து வந்துவிட்டது. கூட்ட நெரிசலில் எப்படியோ தம்மை நுழைத்துக்கொண்டு ஏறிக்கொண்டாராம். அப்போது பேருந்து நடத்துநர் ஹரிநாத்ராஜாவின் கைமீது அடித்து "மேல ஏறுய்யா..." என்று அதட்டினாராம். அந்தக் கைகளே "அழகிய மிதிலை நகரினிலே..." என்று பாடும்போது மகிழுந்தின் சுழற்றியைச் சுழற்றியவை. மாப்பிள்ளைக் கோலத்தில் ஒப்பனை பூசி அமர்த்திப் பார்க்கும் அதே காலம்தான் இன்னொரு நாளில் பஞ்சைப் பராரியாய் நடுத்தெருவில் நிறுத்தியும் வைக்கிறது. அதன்பிறகு எப்படத்திலும் ஹரிநாத்ராஜாவைப் பார்க்க முடியவில்லை.

எனக்கு இதைப்போன்றே ஒரு நிகழ்வும் நடந்தது. எங்களூரில் ஒளிப்படி (ஜெராக்ஸ்) எடுப்பதற்குப் புகழ்பெற்ற கடை ஒன்று இருக்கிறது. அங்கே சென்றால் உடனடியாக நூற்றுக்கணக்கான ஒளிப்படிகளை எடுத்து வரலாம். பத்திருபது ஒளிப்படிக் கருவிகள் எந்நேரமும் தொடர்ந்து இயங்கிக்கொண்டிருக்கும். ஒளிப்படி எடுக்கும் வேலையாக அக்கடைக்குச் சென்றிருந்தேன். என் வண்டிக்கருகே கறுத்த நிறமுடைய ஒருவர் மஞ்சள் சட்டையும் வெள்ளை வேட்டியுமாய் நின்றிருந்தார். கையில் துணிப்பை வைத்திருந்தார். தம் வாய் மீது கைவைத்து மூடியிருந்தார். அது தம் முகத்தை மறைத்துக்கொள்ளும் முயற்சி என்று நன்றாகத் தெரிந்தது. நின்றவாறே ஏதோ ஒரு கடையை அவர் தேடினார்.

நான் அவரைக் கண்டுகொள்ளாததுபோல் இருந்தாலும் எனக்குள் தோன்றிய குறுகுறுப்பு அடங்கவில்லை. அரை முகத்தை மறைத்தபடியிருக்கும் அவர் யாராக இருக்கக்கூடும் என்ற தேட்டம் இருந்தது. சட்டென்று அயர்ந்த நேரத்தில் அவர் தம் கையை விலக்கினார். ஓ... அது நன்கறிந்த முகம். நான் பார்த்த முகம். ஆம். நினைவுக்கு வந்துவிட்டது. நடிகர் மண்ணாங்கட்டி சுப்ரமணியம். சுப்ரமணியம் என்பதுகூட பலர்க்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. மண்ணாங்கட்டி என்பதே போதும்.

'எங்க சின்ன ராசா' என்ற திரைப்படம் வந்தபோது இவர்தான் கவுண்டமணியையும் ஜனகராஜையும் வீழ்த்தப்போகிறவர் என்று பலர் எழுதினார்கள். அதற்கேற்பவே தொடர்ந்து பல படங்களில் நடித்தார். அடுத்த பத்தாண்டுகளில் எல்லாம் தலைகீழாக மாறின. அவர்க்கு வாய்ப்பளித்த பாக்யராஜ் சந்தை மதிப்பிழந்தார். அத்தோடு மண்ணாங்கட்டி சுப்ரமணியத்தின் திரை வாழ்க்கையும் முடிவுக்கு வந்தது. இன்று எங்களூர்ச் சாலையில் ஓர் எளியவராக நின்றுகொண்டிருக்கிறார்.

இதே காலம் அவர்க்குத் தோதான திக்கில் நடைபோட்டிருந்தால் இன்று அவர் இப்படி வந்து நிற்பாரா ? அவருடைய மகிழுந்திலிருந்து ஓங்கியடிக்கும் ஒலி நம்மைச் சாலையோரத்திற்கு விரட்டாதா ? அதுதான் நடந்திருக்கும். எல்லாம் இப்படித்தான் நடக்கின்றன. ஒரு வாய்ப்பு. அதில் பெரும்புகழ் கிடைக்கிறது. அந்தப் புகழை எதிர்கொள்ளும் முதிர்ச்சி யார்க்குமே இருப்பதில்லை. உங்களைச் சிந்திக்க விடாமல் துரத்தியடிக்கும் அப்புகழ் உயரே உயரே கொண்டு போகிறது. காற்று எந்நேரம் எப்போது ஓயும் என்று தெரியாது. உயரே சென்றவர்கள் தரைக்கு வந்தே தீரவேண்டும். எல்லாரையும் போன்ற ஒருவராய் மீதமுள்ள வாழ்க்கையைக் கழிக்க வேண்டியதுதான்.

வந்தபோது சேர்த்து வைத்திருந்தால் துயர்வந்தபோது அதைச் செலவழித்துத் தப்பித்துக்கொள்ளலாம். அப்படியெல்லாம் சிந்திப்பதற்கே விட்டுவைக்காத புகழைத்தான் அவர்கள் பெறுகிறார்கள். அதனால் எல்லாம் ஒரு மின்னல் வெட்டாய் நடந்து முடிந்துவிடும். உணர்ச்சி பெற்றுத் திரும்பிப் பார்க்கும்போது நம்முடன் யாரும் இருக்க மாட்டார்கள்.

திரைத்துறை ஒரு கரும்பாலையைப் போன்றது. அது மென்று துப்புவதற்குப் புதுப்புதுக் கரும்புத் தண்டுகளைக் கோரியபடியே இருக்கும். அது அவ்வாறு மென்று துப்பிய பிறகும் ஒருவர் சக்கையாகி வெளியேறுகிறாரா, சர்க்கரையாகி வெளியேறுகிறாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

English summary
Poet Magudeswaran's article on film industry and film stars.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil